சென்னை, ஏப்.3- தமிழ்நாட்டில் இன்னும் 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் விரைவில் திறந்து வைக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் 1.4.2025 அன்று கேள்வி நேரத்தின்போது அரக்கோணம், திரு.வி.க. நகர் ஆகிய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் களின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகுதான், இதுவரை 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. ரூ.1018 கோடி செலவில் கட்டடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 19 இடங்களில், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகளும், 6 இடங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவமனைகளும் கட்டப்பட்டு வருகின்றன.
அரக்கோணம் தொகுதியைப் பொறுத்தவரையில் ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் ரூ.23.75 கோடி செலவில் 50 படுக்கைகள் கொண்ட ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டாம் தள மேற்கூரை அமைக்கும் பணி முடிவுற இருக்கிறது. இன்னும் ஒரு ஓரிரு மாத காலங்களில் அந்த அமைப்பு திறந்து வைக்கப்படும்.
அதே மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வுக்கூட கட்டடம் ஒன்று ரூ.1.25 கோடி செலவில் கட்டும் பணி முடிவுறும் தருவாயில் இருக்கிறது. அதுவுமே, விரைவில் திறந்து வைக்கப்படவிருக்கிறது.
குடியாத்தம் தொகுதியைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனை மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சொல்லியிருப்பதைப் போல, வார்டு 1,2 ஆகிய பகுதி மக்கள் பயன்பெறுகிற வகையில் ஒரு நகர்ப்புற நலவாழ்வு மய்யம் ஒன்று அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் 708 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் அமைக்கப்படும் என்று இதே மன்றத்தில் விதி 110இன்கீழ் 2022 ஆம் ஆண்டு மே திங்கள் 7 ஆம் தேதி அறிவிப்பு செய்தார்கள். அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஒரே ஆண்டில், அதாவது 2023 ஆம் ஆண்டு ஜீன் திங்கள் 06 ஆம் தேதி 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களை ஒரே நாளில் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்கள்.
மீதமுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் கட்டும் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. அதற்கான பணியாட்களை நியமிக்கும் பணிகளும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட District Health Society மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாயிலாக இந்த மாத இறுதிக்குள் அந்த 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களும் திறந்து வைக்கப்படவிருக்கின்றன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்தார்.