‘‘திரைகடல் ஓடியும், திரவியம் தேடு’’ என்று சொல்வது நம் பண்பாடு!
‘‘கடல் தாண்டாதே’’ என்று சொல்வது ‘‘அவர்கள்’’ பண்பாடு!
‘‘பெண்ணைப் படிக்காதே’’ என்று சொன்ன சமுதாயத்தில், பெண்களுக்குப் படிக்கின்ற உரிமையைப் பெற்றுத் தந்தது சுயமரியாதை இயக்கம்!
சிட்னி, ஏப். 3 ‘‘திரைகடல் ஓடியும், திரவியம் தேடு’’ என்று சொல்வது நம் பண்பாடு.! ‘‘கடல் தாண்டாதே’’ என்று சொல்வது அவர்கள் பண்பாடு! ‘‘பெண்ணைப் படிக்காதே’’ என்று சொன்ன சமுதாயத்தில், பெண்க ளுக்குப் படிக்கின்ற உரிமையைப் பெற்றுத் தந்தது சுயமரியாதை இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
உலக மகளிர் நாள் விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரை!
கடந்த 15.3.2025 அன்று ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உள்ள வென்ட்வொர்த்வில்லே அரங்கில், பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
கருவிலேயே ஆணா, பெண்ணா என்று அறிவியல் துணை கொண்டே பார்க்கிறார்கள். பெண் என்றால், கருவிலேயே அழிக்கின்ற நிலை இருந்தது. அதைத் தடுப்பதற்கென்றே எங்கள் நாட்டில் சட்டம் இருக்கிறது.
பெண் குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுக்காமல், கள்ளிப்பால் கொடுத்துக் கொன்ற கொடுமையான நிகழ்வுகளும் நடந்தன.
அந்த உணர்வுகளை, எண்ணங்களைத் தவறு என்று சொல்லி, அவர்களுக்குப் பகுத்தறிவு சிந்தனைகளை உருவாக்கிய இயக்கம்தான், சுயமரியாதை இயக்கம்.
பெரியார் என்ன செய்தார்? பெரியாருடைய சிறப்பு என்ன?
அம்பேத்கர் என்ன செய்தார்? என்று கேட்கின்ற சிலருக்குச் சொல்கிறேன்.
‘கீதை’, துளசிதாஸ் இராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?
பெண்கள் வளர்ந்த பிறகு, படிக்கவே கூடாது என்ற நிலை.
‘கீதை’யில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது தெரியுமா?
‘‘சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியி லிருந்து பிறந்தவர்கள்’’ என்று.
துளசிதாஸ் இராமாயணத்தில் என்ன எழுதியிருக்கி றார்கள் என்றால், ‘‘சூத்திரர்களும், பெண்களும் ஒரு மேளம் போன்றவர்கள்’’ என்று உள்ளது. இங்கே பறை யிசையை மிக அருமையாக இசைத்தனர் நம்முடைய நண்பர்கள்.
மேளம் என்றால், அதனை அடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோன்று, சூத்திரர்களையும், பெண்களையும் அடித்துக்கொண்டே இருக்கவேண்டும்; அவர்களை வளரவே விடக்கூடாது என்பதுதான் அதன் உள்நோக்கம். அதனைப் ‘புனிதம்’ என்று ஆக்கியி ருக்கிறார்கள்.
இந்தப் ‘புனித’த்தைப்பற்றி பேசக்கூடாது என்று ஆக்கினார்கள். அதை மீறிப் பேசியதால்தான், இன்றைக்குப் பெண்கள் வளர்ந்திருக்கின்றார்கள், முன்னேறியிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் பெண்கள் பெரிய அளவிற்கு முன்னேறி வந்திருக்கிறீர்கள்.
இந்த இயக்கம் ஏன் வந்தது? ஏன் உலகம் முழுவதும் பரவுகிறது?
உங்களை எச்சரிக்கை செய்வதற்காகவே இங்கே வந்துள்ளோம்!
உங்களை எச்சரிக்கை செய்வதற்காகவே இங்கே வந்துள்ளோம்!
மூடநம்பிக்கைக் கருத்துள்ளவர்கள், அந்தக் கருத்தை மீண்டும் உருவாக்கி, இங்கே அந்த நோயைப் பரப்பவேண்டும் என்று நினைக்கின்ற காரணத்தினால்தான், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம்.
திடீரென்று கோவிட் தொற்று எப்படி வந்தது?
அந்த நோய் இன்னொரு நாட்டில்தான் இருந்தது. எங்கள் நாட்டில் கோவிட் இல்லையே என்று நினைக்க முடியாது. அந்த நோய் உலகம் முழுவதும் பரவியது அல்லவா!
ஜாதி என்ற நோய்த் தொற்று இங்கேயும் வருகின்ற ஆபத்து!
அதுபோல, இங்கேயும் ஜாதி என்ற நோய்த் தொற்று வருகின்ற ஆபத்து இருக்கிறது. ஆகவே, நீங்கள் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இன்று உலக மகளிர் நாள் என்பதால், முழுக்க முழுக்க அவர்களைப்பற்றியே நான் சொல்லுகிறேன்.
ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன்.
டாக்டர்களிடம் போகாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக ஒரு பழமொழியைச் சொல்வார்கள்.
‘‘வாய்விட்டுச் சிரித்தால், நோய்விட்டுப் போகும்’’ என்று.
“மனிதன் என்பதற்கு அடையாளமே, பகுத்தறிவு, சிரிப்புதான்!’’ மிருகங்களுக்கு சிரிக்கத் தெரியாது. நம்மாட்களில் நிறைய பேர் சிரிக்காமலேயே இருக்கிறார்கள்.
‘‘பொம்பள சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சா போச்சு!’’ என்பார்கள்!
பெண்களைப்பற்றிச் சொல்லும்போது, ‘‘பொம்பள சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சா போச்சு’’ என்று சொன்னார்கள்.
நம்முடைய நாட்டில் பல ஆண்டுகாலமாக இதைச் சொல்லி வந்தார்கள். இப்போது அதுபோன்று இல்லை. பெண்கள் நன்றாகச் சிரிக்கிறார்கள்.
பெரியார் பிறந்ததினால், அம்பேத்கர் பிறந்ததி னால், சுயமரியாதை இயக்கம் பிறந்ததினால்.
‘‘பொம்பள சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சா போச்சு’’ என்று சொன்னால், அதனுடைய அர்த்தம் என்ன தெரியுமா?
பெண்களுக்குப் பிறக்க உரிமையில்லை, வாழ உரி மையில்லை; சிரிக்கவும் உரிமையில்லை என்பதுதான்.
மனிதன் சிரிக்காமல் இருக்கவேண்டும் என்றால், அது மிருகத்தைவிட கேவலமானதல்லவா!
இதையெல்லாம் மாற்றி, பெண்கள் நிறைய படித்து, இன்றைக்கு முற்போக்காளர்களாக இருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல, ‘‘கடல் தாண்டாதே’’ என்று சொன்னார்கள்.
‘‘திரைகடல் ஓடியும், திரவியம் தேடு’’ என்பது நம் பண்பாடு!
நீங்கள் எல்லாம் கடல் தாண்டியதால்தான், இங்கே வந்து இவ்வளவு நன்றாக இருக்கிறீர்கள்.
‘‘திரைகடல் ஓடியும், திரவியம் தேடு’’ என்று சொல்வதுதான் நம்முடைய பண்பாடு.
ஆனால், இன்னொரு பண்பாடு என்ன சொல்கிறது என்றால், ‘‘கடல் தாண்டாதே’’ என்று.
படிப்பதற்கு உரிமை கிடையாது என்பதால்தான்!
பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் ஏன் ஜாதியை எதிர்த்தார்கள் என்றால், கீழ்ஜாதி என்று சொல்லப்படுபவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் படிப்பதற்கு உரிமை கிடையாது என்பதால்தான்.
பெரும்பாலும் இங்கே தமிழ்நாட்டிலிருந்தும், ஈழத்திலிருந்தும் வந்திருக்கின்றீர்கள். நான் கேட்கின்ற கேள்விக்குப் பெண்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்.
உங்களுடைய அம்மா, ‘‘எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் எவ்வளவு பேர்?’’
அடுத்த கேள்வி, உங்களுடைய பாட்டி, ‘‘எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் எவ்வளவு பேர்?’’
இரண்டே இரண்டு பேர்.
இங்கே இருக்கக்கூடிய நீங்கள் எல்லாம், பட்டதாரி, மேல்பட்டதாரி படிப்பு படித்திருக்கிறீர்கள்.
பெரியார் என்ன செய்தார்?
இதைத்தான் செய்தார்.
பெண்கள் படிக்கின்ற உரிமையைப் பெற்றுத் தந்தது!
‘‘பெண்ணைப் படிக்காதே’’ என்று சொன்ன சமுதாயத்தில், சுயமரியாதை இயக்கம், பெண்களுக்குப் படிக்கின்ற உரிமையைப் பெற்றுத் தந்தது.
இந்த அடிப்படையைத் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பை நாங்கள் பெற்றி ருக்கின்றோம்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்னவென்றால், 75 ஆண்டுகளுக்கு முன்பு நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இன்டர்மீடியட் படித்தேன் என்று இங்கே என்னை அறிமுகப்படுத்திய கிருஷ்ணா சொன்னார்.
‘‘ஆஸ்திரேலியாவை பார்!’’
அன்றைய காலகட்டத்தில் எங்களுக்குத் துணைப் பாட புத்தகம் கொடுப்பார்கள். அதில், ‘‘ஆஸ்திரே லியாவை பார்’’ என்ற ஒரு புத்தகம் படித்தேன்.
அந்தப் புத்தகத்தைப் படித்த நான், ஏறத்தாழ
50 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன ஆஸ்திரேலியாவைப் பார்ப்பதற்கு.
ஆனால், ஆஸ்திரேலியாவை அந்தப் புத்தகத்தின் வாயிலாக அதற்கு முன்பே பார்த்துவிட்டோம்.
அருள்மொழி இங்கே இரண்டு முறை வந்திருக்கிறார். ஆனால், எனக்கு இதுதான் முதல் முறை.
சோம.இலக்குவன் என்பவர் ‘‘ஆஸ்திரேலியாவை பார்’’ என்று அந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார். அதனைப் படித்ததில், மனதில் தங்கியது இரண்டு.
ஒன்று, கங்காரு. தன்னுடைய குட்டியை சுமந்து கொண்டு தாவித் தாவி வரும்.
இரண்டாவது, பூமராங். பழங்குடி மக்கள் பூமராங்கைப் பயன்படுத்துவார்கள்.
கங்காருவை படத்தில் பார்த்தால் போதாதா, ஏன் நேரில் பார்க்கவேண்டும்? என்றால், கங்காரு, தன் குட்டியைத் தாங்கிக் கொண்டு இருக்கிறது. மனிதனாக இருக்கக்கூடியவர்கள், தம்முடைய சமுதாயத்தில் உள்ள பிள்ளைகளை, பெண் குழந்தைகளை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
“ஆறறிவு உள்ள மனிதர்களிடம் இல்லாமல் போனது ஏன்?
கங்காருவிடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில்தான் இந்த சமுதாயம் இருக்கிறது.
ஆறறிவு இல்லாத ஒரு மிருகத்திடம் இருக்கின்ற பாசமும், சமத்துவ உணர்வும், தாய்மை உணர்வும், ஆற றிவு உள்ள மனிதர்களிடம் இல்லாமல் போனது ஏன்?
இதைத்தான் பெரியார் கேட்டார். இந்த உணர்வை உண்டாக்குவதுதான் சுயமரியாதை இயக்கம். அதற்காகத்தான், பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டம்.
சமத்துவத்தை உண்டாக்கவேண்டும்; சமவாய்ப்பை உண்டாக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
பெரியாருடைய சிந்தனை என்பது ஒப்பற்ற சுய சிந்தனையாகும். அவர் எந்தக் கல்லூரிக்கும் சென்று படிக்கவில்லை. அதுதான் அவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதனால், எல்லோரும் கல்லூரிக்குச் சென்று படிக்காமல் இருக்கலாம் என்று நினைக்காதீர்கள்.
ஆணுக்கு ஒரு நீதி? பெண்ணுக்கு ஒரு நீதியா?
ஒப்பற்ற சுய சிந்தனையாளரான பெரியார்தான் கேட்டார், ‘‘ஆணுக்கு ஒரு நீதி? பெண்ணுக்கு ஒரு நீதி? என்று ஏன் இருக்கவேண்டும்’’ என்று.
வள்ளுவர் எழுதிய திருக்குறளைப்பற்றிக்கூட
“வள்ளுவர் செய் திருக்குறளை
மறு அற நன்கு உணர்ந்தோர்கள்
உள்ளுவரோ ‘‘மனு”வாதி
ஒரு குலத்துக்கு ஒரு நீதி!”
என்று மனோன்மணியம் சுந்தரனார் கூறியபடி, தந்தை பெரியார் தமது சுயசிந்தனையின்படி பல கேள்விகளை எழுப்பினார்.
ஒரு குலம் என்று சொல்லும்போது, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பது மட்டுமல்ல; ஆண் உயர்ந்தவன்; பெண் தாழ்ந்தவள்.
எல்லாத் துறைகளிலும் பெரியாருடைய சுதந்திர சிந்தனை, அதிலும் பெண்ணிய சுதந்திரத்திற்கு, சமத்துவத்திற்கு அவர் சிந்தித்த எல்லைக்கு, அதிகமான எல்லைக்குப் போகிறார்.
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.
பெண்களின் தனித்தன்மையைப்பற்றி சொல்லத் தயங்குகிறார்கள்!
நம்மைவிட வளர்ந்தவர்கள், மேல்நாட்டுக்காரர்கள், பல மாற்றங்களையெல்லாம் செய்திருக்கிறார்கள். அறிமுகப்படுத்தும்போது, அவர்களுடைய தனி அடையாளங்களைச் சொல்கிறார்கள். ஆனால், பெண்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களுடைய தனித்தன்மையைப்பற்றி சொல்லத் தயங்குகிறார்கள்.
உலக மகளிர் நாள் விழாவை இன்றைக்கு இங்கே கொண்டாடுகிறீர்கள்.
சமத்துவம் என்று சொல்லும்போது, பெண்க ளுக்கென்று தனி அடையாளம் உண்டு.
ஆனால், இப்போது அப்படியல்ல – நான், என்னுடைய துணைவியாரை அழைத்து அறிமுகப்படுத்தும்போது ‘‘ஷி இஸ், மிஸ்சஸ் வீரமணி’’ என்று சொல்வது நியாயமா?
அவருடைய தனித்தன்மையைப்பற்றிச் சொல்லாமல், ‘‘மிஸ்சஸ் வீரமணி’’ என்று சொல்லலாமா?
எங்களுடைய திராவிடர் கழகத்தில், பெண்களின் பெயரைச் சொல்லும்போது, அவர்களுடைய பெயரை மட்டும்தான் சொல்வார்கள்.
ஏனென்றால், எல்லா நேரத்திலும்தான், கண வன்மார்கள் முன்னே உட்கார்ந்து கொள்கிறார்களே!
(தொடரும்)