நவராத்திரி விழா மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம், முஸ்லிம்களின் ரம்ஜான் மார்ச் 31 அன்று கொண்டாடப்பட்டது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இருந்தது. கோயில் நகரமான வாரணாசியில் நவராத்திரி நாள்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் அடைக்கப்படவேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, சாலையில் நமாஸ் செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதி நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. முன்னதாக, ரம்ஜானையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் இருபிரிவைச் சேர்ந்தவர்களையும் அழைத்து அமைதிக் கூட்டம் நடத்தினார்கள். அப்போது, இஸ்லாமியர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது.
இது தொடர்பாக மீரட் காவல்துறை ஆணையர் ஆயுஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘மக்கள் மசூதிக்குள் நமாஸ் செய்யும்படி கேட்டுக்கொள்ளும்படி மதத் தலைவர்கள் மற்றும் இமாம்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலையில் நமாஸ் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது சாலை மற்றும் தெருவில் நமாஸ் செய்தால் அவர்களின் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம். அப்படி கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டால் புதிய கடவுச்சீட்டு எடுக்க நீதிமன்றத்தில் தடையில்லா சான்று வாங்க வேண்டியிருக்கும். பதற்றமான பகுதிகள் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
சோசியல் மீடியா தீவிரமாக கண்காணிக்கப்படும். வதந்தியைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு இப்படி விதிகளை மீறிய 200 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
நவராத்திரி விழா 9 நாள்களுக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், 9 நாள்களுக்கு அனைத்து மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக வாரணாசி மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வாரணாசி மாநகராட்சி அதிகாரிகள் சொல்லும்போது, “இந்துக்கள் நவராத்திரியை மிகவும் புனிதமாக கருதுவார்கள் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே 9 நாள்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் என்ன 360 நாளுமா நிறுத்தச் சொல்கிறோம்? வாரணாசி ஆன்மீக மற்றும் கலாச்சார தலைநகரம்.
அன்றாடம் 2 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். அதனால் பாரம்பரிய நடைமுறை பின்பற்றவேண்டும். எதையும் கட்டாயப்படுத்துவதாக இருக்கக்கூடாது” என்று கூறியிருந்தார்.
அந்தவகையில், முதல் முறையாக நவராத்திரிக்கு இறைச்சிக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், ரம்ஜான் அன்று முஸ்லிம்கள் இறைச்சி வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இப்போது, சாலையில் நமாஸ் செய்தால் கடவுச் சீட்டு ரத்து என்பன போன்ற அறிவிப்புகளால், இஸ்லாமியர்களிடையே சலசலப்பு எழுந்துள்ளது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். குடிமக்களைப் பொறுத்த வரையும் அவரவர்களுக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்றலாம்; விழாக்களையும் கொண்டாடலாம்.
இந்துக்களின் நவராத்திரிப் பண்டிகைக்காக – அதே கால கட்டத்தில் வரும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரம்ஜான் நாளில் புலால் உணவு தடை செய்யப்படுவது எந்த வகையில் நியாயம்?
இந்துக்களை எடுத்துக் கொண்டாலும் ஒட்டு மொத்தமாக இந்துக்கள் எல்லாம் வெறும் காய்கறிகளை மட்டும் தான் உண்பவர்களா?
நவராத்திரி நாள்களில் மாமிசம் உண்ணக் கூடாது என்பதற்காக இன்னொரு மதத்துக்காரர்களும் மாமிசம் உண்ணக் கூடாது என்று கட்டாயப்படுத்துவது கறிக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று காவல்துறையே அச்சுறுத்துவது நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? மதவெறிப் பாசிச ஆட்சியா என்ற கேள்விதான் எழுகிறது.
உத்தரப்பிரதேசம் என்பது ஹிந்துத்துவாவின் சோதனைக் கூடம் என்று அதிகார பூர்வமற்ற முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்துவது அசல் அராஜகமே!
மதச் சார்பற்ற சக்திகள் இந்தப் போக்கை எதிர்த்துக் கடுமையாகக் குரல் கொடுக்க வேண்டும்; தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் நாடவும் வேண்டும்!