02.08.1925- குடிஅரசிலிருந்து…
1. சாதிக்கர்வமும், மூடநம்பிக்கையும் இந்தியர்களில் பிராமண சகோதரரிடம் மாத்திரம் இருப்பதாக எண்ணுவது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென் போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார் என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர்கள்.
2. பிராமணர்களும், அவர்களைப் போல் நடிப்பவர்களும் தங்கள் பெண்கள் விதவை ஆகிவிட்டால் பெரும்பாலும் அவர்களை விகாரப்படுத்த வேண்டு மென்கிற எண்ணங்கொண்டே கட்டாயப்படுத்தி மொட்டையடிப்பதும், நகைகளைக் கழற்றிவிடுவதும், வெள் ளைத்துணி கொடுப்பதும், அரை வயிறு சாப்பாடு போடுவதுமான கொடுமைகளைச் செய்து வருகிறார்கள். ஆனால், இவர்களுக்கடங்காத சில திரீகள் வயது சென்றவர்களாகியும் மொட்டையடித்துக் கொள்ளாமலும், நகைகள் போட்டுக் கொண்டும், காஞ்சிபுரம், கொரநாடு முதலிய ஊர்களினின்றும் வரும் பட்டுப்புடவைகளை உடுத்திக் கொண்டும் நன்றாய்ச் சாப்பிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.
3. ஜஸ்டிஸ் கட்சிக்குப் பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்கு இல்லா திருப்பதற்குக் காரணம், அவர்கள் சர்க்காரை வைவது போல வேஷம் போடக்கூட பயப்படுவதுதான். பாமர ஜனங்கள் சர்க்காரை வைதால்தான் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் சர்க்காரின் நடவடிக்கை அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
4. ஆங்கிலம் படித்துப் பரீட்சையில் தேறுவதே புத்திசாலித் தனமென்றும், கெட்டிக்காரத்தன மென் றும் சொல்வது அறியாமையாகும். உருப் போடப் பழகினவனும், ஞாபகசக்தியுள்ளவனும் எதையும் படித்து பாஸ் பண்ணி விடலாம். உருப்போடப் பழகாதவனும், ஞாபகசக்தியில்லாதவனும் பரீட் சையில் தவறிவிடலாம். ஆனால், படித்துப் பாஸ் பண்ணினவன் அயோக்கியனாகவும், முட்டாளாகவும் இருக்கலாம். படித்தும் பாஸ் செய்யாதவன் கெட்டிக்காரனாகவும், யோக்கியனா கவுமிருக்கலாம்.