30.06.1935 – குடிஅரசிலிருந்து…
சந்திரலோகத்தைக் கண்டுவிட முடியும்
இந்தப் பூலோகத்துக்கும், சந்திரலோகத் துக்கும் (2,50,000) இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது.
இதை மணி ஒன்றுக்கு 2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 100 நிமிஷ நேரத்தில் பூலோகத்தில் இருந்து சந்திர மண்டலத்துக்குப் போய் விடலாம் என்று அமெரிக்க சங்கத்தார் உத்தேச திட்டம் போட்டிருக் கிறார்கள்.
இந்தத் திட்டத்தை நமது இந்திய மகாத்மாக்களும், சங்கராச்சாரிகளும், பண்டார சன்னதிகளும் ஆகிய ஞானிகள் ஆகாயக் கோட்டையென்றோ, வீண் கனவென்றோ தான் சொல்லுவார்கள்.
ஆனால், மணி ஒன்றுக்கு 700 மைல் வேகம் போகக் கூடிய ஆகாய விமானம் செய்து பார்த்தாய் விட்டது.
இனியும் இதிலிருந்து பல அபிவிர்த்திகள் நடந்து வேகத்தைப் பெருக்க வசதி இருக்கிறது என்பதைக் கண்டு வருகிறார்கள். ஆகவே மேல்நாட்டு மக்களு டைய ஆசையும், முயற்சியும் இந்த மாதிரியான துறைகளில் சென்று கொண்டிருக்கின்றன.
நம்முடைய முயற்சிகள் கிருஷ்ணன் மனிதனா – கடவுளா?
ராமாவதாரம் முந்தியா – கிருஷ்ணாவ தாரம் முந்தியா?
பூமியை ஆதிசேஷன் தாங்கினால் ஆதிசேஷனை யார் தாங்குகிறார்?
உலகத்தை இரணியாட்சதன் பாயாய்ச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்துக்குள் புகுந்து கொண்டான் என்றால், அப்போது சமுத்திரம் எங்கு? எதன் மேல் இருந்தது?
மகாவிஷ்ணு பன்றி அவதாரமெடுத்த போது என்ன ஆகாரம் சாப்பிட்டார்?
சிவனும் விஷ்ணுவும் (ஆணும் ஆணும்) சேர்ந்தால் பிள்ளை எப்படிப் பிறந்திருக்கும். இந்திரியத்தை வாய் வழி உட்கொண்டால் பிள்ளை பிறக்குமா?
அப்படியானால், இப்போது ஏன் அப்படிப்பட்ட எவருக்கும் பிள்ளை பிறப்பதில்லை?
என்பது போன்ற முட்டாள்தனமானதும், போக்கிரித் தனமானது மானப் பிரச்னையில் நமது சாஸ்திரி களுடைய ஆராய்ச்சிகள் சென்று கொண்டிருக்கின்றன.
இவ்வளவோடு நின்று விடுகின்றோமா?
சந்திர லோகத்தைப் பார்க்க இப்போதுதான் நமது வெள்ளைக்காரர்கள் நினைத்து இருக் கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் எத்தனையோ காலத்துக்கு முன் சந்திரனைப் பார்த்தாகி விட்டதென்றும், நம் முடைய குருவின்மார் மனைவிகள் சந்திரனைப் புணர்ந்து புதனைப் பெற்று இருக்கிறார்கள் என்றும், அதற்காகப் புருஷர்கள் அந்தச் சந்திரன் மீது கோபித்து அவனை மாதத்திற்கு ஒரு முறை தேயவும், வளரவும் செய்து விட்டார்கள் என்றும், அது மாத்திரமல்லாமல் சந்திரனையும் அவனுக்கு வெகுதூரத்தில் இருக்கும் சூரியனையும், சராசரி வருஷத்துக்கு ஒரு முறையாவது (ராகு) கடிக்கச் செய்து அந்த விஷமிறங்க நமது சாஸ்திரிகள் ஜபம் செய்கிறார்கள் என்றும் சொல்லி விடுகிறோம்.
ஆகவே வெள்ளைக்காரர்களுடைய அறிவிற்கும், நம் சாஸ்திரிகளுடைய அறிவுக்கும் எவ்வளவு வித்தி யாசம் இருக் கிறது என்பதையும், யார் கெட்டிக்காரர்கள், புத்திசாலிகள் என்பதையும் நீங்களே கண்டுபிடியுங்கள்.