23.1.1968 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா பேசியது: நேற்றைய தொடர்ச்சி…
அறிஞர் அண்ணா
சிறைச்சாலைக்கு அனுப்பினார் என்பதால் கோபமோ, மந்திரி பதவியை அடையச் செய்தார் என்பதால் அவரிடத்தில் அளவு கடந்த சந்தோஷமோ எனக்கு இல்லை. ஏனென்றால் அதை அவர் விரும்பவில்லை.
பிறருடைய கோபம், பிறருடைய சந்தோஷம் இவைகளை வைத்துக்கொண்டு அவர் தம்முடைய கொள்கைகளை வகுத்துக் கொள்ளவில்லை என்பது என்னைவிட அவரிடத்தில் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இதே மன்றத்தில் 1958ல் “ராஜாஜி புளியமரம்; அந்த நிழலிலே எதுவும் வளராது; அண்ணாதுரை நீ போகாதே” என்றார்கள் காங்கிரஸ் நண்பர்கள். அந்த மர நிழலிலே மலர் இவ்வளவு பெரிய தேக்கு மரங்களாகிவிட்ட பிறகு என்னை மட்டும் அங்கு போகவேண்டாம் என்கிறீர்களே; ஏதோ நான் போனேன், நல்லபடியாகத்தான் வந்தேன். (சிரிப்பு)
1957 ஆம் ஆண்டு தேசிய மொழி என்று கருதப்படும் இந்தி, காங்கிரசினாலே புகுத்தப்பட்டது. உங்களால் அதிலிருந்து விலக முடியவில்லை என்பதற்காகச் சொல்கிறேன் – இந்தியை சுயராஜ்யம் வருவதற்கு முன்னால் இருந்து ஆதரித்து வந்திருக்கிறீர்கள் என்று நான் சொல்லும்போது, நண்பர் வினாயகம் அவர்கள் என்னைப் பார்த்து வேண்டாம்; ரொம்பநாள் காங்கிரஸ்காரர்களுக்குச் சொல்கிறேன்.
மகாத்மா காந்தியின் தேசிய நிர்மாணத் திட்டங்களில் ஒன்று அது. அப்போது நான் எட்டாவது – ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது “இந்தி – தமிழ் சுயபோதினி” என்ற புத்தகம் இருக்கும். அதன் விலை ஆறணா அல்லது எட்டணா இருக்கும். அதைக் கையில் வைத்துக்கொண்டிருப்பதும், ஒரு காலணாவில் ஓட்டை போட்டு ஒரு குச்சியைச் சொருகி தக்ளி வைத்துக்கொண்டிருப்பதும் நம்மாலான தேசபக்தி என்று நினைத்து மாணவர்கள் எல்லாம் வைத்துக்கொள்வார்கள்; நானும் வைத்துக் கொண்டேன். அன்றிலிருந்தே இந்திக்கு எதிர்ப்புக் காட்டப் பட்டிருக்கிறது.
சிறை சென்றார்கள்
தமிழ்நாட்டுப் புலவர்கள், பெரும் பேராசிரியர்கள், மறைந்த சோமசுந்தர பாரதியார், மறைந்த சேதுப்பிள்ளை, மறைந்த உமாமகேசுவரம்பிள்ளை, மறைந்த மறைமலையடிகள், இன்றும் நல்லவேளையாக நம்மிடையே இருந்துவரும் பெரியார் ராமசாமி ஆகிய இப்படிப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து அந்த நாட்களில் இந்தியை எதிர்த்து ஆயிரம்பேர் சிறை சென்றார்கள்.
அதிலே இரண்டுபேர் மருத்துவமனையில் இறந்து பட்டார்கள். அதற்குப் பிறகு கட்டாய இந்தி என்பது எடுபட்டு விருப்பப் பாடம் என்று ஆயிற்று. விருப்பப் பாடமாக ஆனபின் இந்தி ஆபத்து இல்லையென்று வேறு வேலைகளைப் பார்த்தோம்.
ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் காங் கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக வந்தபோது மறுபடியும் இந்தி புகுத்தப்பட்டது. நாங்கள் மறுபடியும் போராட்டத்தைத் துவக்கினோம். அந்தப் போராட்டத்தில் பல கஷ்டங் களை மேற்கொண்டோம். பலர் சிறைச்சாலைக்குச் சென்றார்கள்.
பின்னர் இந்திக்கு இந்திய அரசியல் அரங்கத்தில் தேசிய மொழி என்று சொல்வதற்குப் பதிலாக ஆட்சிமொழி என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
‘ஆட்சி மொழி’ என்றால் இந்திக்காரர்கள் தானா எங்களை ஆளவேண்டுமென்ற அரசியல் கிளர்ச்சி எழுந்த காரணத்தால் ஆட்சிமொழி என்பதையும் மாற்றி ‘இது ஆட்சிமொழி என்பது கூட அல்ல; இது இணைப்புமொழி’ என்ற பெயர் கொடுக்கப் பட்டது.
இப்போது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இந்தி மட்டுந்தான் இணைப்புமொழி என்று சொல்லவில்லை.
இந்தி இந்தியாவுக்குள் இணைப்பு மொழி : ஆங்கிலம் உலகத்திற்கு இணைப்பு மொழி என்று இணைப்பு மொழியை இரண்டாகச் சொல்லுகிறார்கள். இந்த வார்த்தை மாற்றங்கள் எல்லாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தைக் குறிப்பதாகும். வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல.
உங்களால் உணர முடியாது
நாங்கள் அதற்காகப் பாடுபட்டவர்கள் என்ற முறையில் நொந்துபோனவர்கள் என்ற முறையில் – கொடுமைகளைத் தாங்கிக்கொண்டவர்கள் என்ற வகையில் இன்றைய தினம் “இந்திப் பாடம் இனி இல்லை” என்று நான் தீர்மானத்தைப் படித்தபோது அதிலே எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை என்னால் தான் உணர்ந்துகொள்ள முடியுமே தவிர, அதற்காகக் கஷ்டப் படாதவர்களால் உணர்ந்துகொள்ள முடியாது.
இந்திய அரசியல் சட்டத்தில் இந்தியைப் புகுத்தியது காங்கிரசு. அன்று முதற்கொண்டு நாங்கள் எதிர்த்துக் கொண்டு வருகிறோம்.
அதுபற்றி நேரு உறுதிமொழி அளிக்க வேண்டு மென்பதை வற்புறுத்துவதற்காக அப்போது வரஇருந்த குடியரசுத் தலை வருக்குக் கருப்புக் கொடி காட்ட வேண்டும்; நம்முடைய மனக் கொதிப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு, உடனே அப்போது என்னோடு இருந்த இன்று உங்களுக்கு உதவியாக இருக்கிற — சம்பத், குடியரசுத் தலைவரைப் பார்த்தார். குடியரசுத் தலைவர் உறுதிமொழி தருவதாகச் சொல்லிய பிறகு நாங்கள் அதற்குமேல் அந்தக் காரியத்தில் ஈடுபட வேண்டாமென்று முடிவு செய்தோம்.
அதற்குப் பிறகு நேருவினுடைய உறுதிமொழி சீனப் படையெடுப்பு நேரத்தில் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளி யிடப்பட்டது.
அதற்குப் பிறகும் தரப்பட்டது. அப்போது கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னைக் கடற்கரையில் கூட்டம் கூட்டப்பட்டது. அதிலே கலந்து கொள்வதற்காக நான் டில்லியிலிருந்து விமானம் மூலம் வந்தேன்.
ராஜாஜியும் நானும் சேர்ந்து கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் பேசுகிறபோது அவர்கள் சொன்னார்கள் அப்போது எனக்கும் ராஜாஜி அவர்களுக்கும் இன்று இருக்கிற நெருக்கம் கூட இல்லை – பலபேர் ஆச்சரியப்படு கிறார்கள்.
“நானும் காமராஜரும் ஒன்றாக உட்கார்ந்திருக்க வேண்டி யிருக்க, நானும் அண்ணாத்துரையும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு ஊரே ஆச்சரியப்படுகிறது. ஆனால் அதிலே உண்மையான பாடம் இருக்கிறது.”
“இந்திப் பிரச்சினையில் காமராஜர் பிரியவேண்டி வந்தது. ஆங்கிலம் எங்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்தது” என்று ராஜாஜி அவர்கள் சொன்னார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் அவர்கள் நாங்கள் எல்லாம் ‘மே’, ‘ஷெல்’ என்பதற்காகத் தகராறு இட்டுக் கொண்டிருந்த நேரத்தில், டில்லிப் பட்டணத்திற்கு வந்து, பத்திரிகை நிருபர் களைச் சந்தித்தபோது ‘மே’ என்று இருந்தாலே போதும். பரிபூரண திருப்தியை அளிக்கிறது என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்கள்.
அப்போது கருத்திருமன் போன்றவர்கள் என்னைத் தனியாகச் சந்தித்து ‘ என்ன இந்த ஆள் இப்படிச் செய்துவிட்டுப் போய்விட்டாரே’ என்று வருத்தப் பட்டுக்கொண்டது என் நினைவுக்கு வருகிறது. (சிரிப்பு)
மாணவர் கிளர்ச்சி
அதைத் தொடர்ந்து 1965ல் மாணவர்கள் கிளர்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் கிளர்ச்சி என்றவுடன் 1965ல் நடந்த மாணவர்கள் கிளர்ச்சிக்கும் இப்போது நடப்பதற்கும் இடையே இருக்கின்ற வேற்றுமைகளை நாம் மறந்து விடுகின் றோம். 1965 ல் மாணவர்கள் கிளர்ச்சி நடத்தப் போவதாக அறிவிக்கவில்லை.
ஜனவரி 25ம் தேதி மட்டும் இந்தி புகுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் துக்க நாளாகக் கொண்டா டப்பட வேண்டுமென்று அறிவித்தார்கள்.
நாங்கள் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக இருந் தாலும் அன்றைய தினந்தான் இந்தி புகுத்தப்பட்ட காரணத் தால் அது துக்க தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று பகிரங்கமாகச் சொன்னோம்.
அப்போது காங்கிரசிலிருந்த தலைவர்கள் என்ன பேசினார்கள்? சட்டமன்றத்தில் என்ன பேசப்பட்டது? முதலமைச்சராக இருந்த கனம் பக்தவத்சலம் அவர்களை – புலவர் கோவிந்தன் என்று நினைக்கிறேன் – “என்ன செய்வீர்கள்!” என்று கேட்டதற்கு- ‘செய்யும்போது பார்த்துக்கொள்’ என்று சொன்னது அதிலே இருந்த கம்பீரம் – அதற்குப் பின்னால் இருந்த பொருள் எல்லாம் நமக்குத் தெரிந்தது.
அதுவும் மறந்துவிடவில்லை. எங்களுடைய வீடுகள் தாக்கப்பட்டன. எங்களுடைய பத்திரிகை நிலையங்கள் சூறையாடப்பட்டன. ஒரு குற்றமும் சுமத்த முடியாத நிலையில் கருணாநிதி அவர்களைப் பாளையங்கோட்டைச் சிறையில் அடைத்தார்கள்.
லாரியில் அழைத்துச் சென்றதாகத் திரு. ஆதி மூலம் அவர்கள் சொல்லுகிறார்கள். மோட்டார் இல்லாத குறையாக இருக்கலாம் அல்லது அவர் அவ்வளவுக்குத்தான் லாயக்கு என்று எண்ணியிருக் கலாம். இப்போது நாம் அதற்காகக் குறைபட்டுக் கொள்ளவில்லை.
துப்பாக்கிச் சூடு
லாரிகூட வாகனந்தான்; நமது சட்டமன்றத் தலைவர் அவர்கள் சிறையிலே தள்ளப்பட்டார்கள். இதற்கிடையில் 25ஆம் தேதியன்று மாணவர்கள் மதுரையில் ஊர்வலமாக வந்தபோது அர்பன் காங்கிரஸ் கமிட்டி ஆபீசில் இருந்து ஒருவர் ஓடிவந்து கத்தியால் குத்தினார்.
சிதம்பரத்தில் மாணவர்கள் ஊர்வலமாக வந்தபோது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு ராஜேந்திரன் என்ற மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னையில் மாணவர்கள் ஊர்வலமாக வந்து முதலமைச்சர் பக்தவத்சலத்தை பேட்டி காணவேண்டுமென்று வந்த நேரத்தில் அவர் பார்ப்பதற்கில்லை என்று சொல்லிவிட்டார்.
வேறு ஒரு அமைச்சர் திரு. வெங்கட்ராமன் என்று கருதுகிறேன் – மாணவர்களைச் சந்தித்தார். இதற்கிடையில் ஒவ்வொரு ஊரிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் – என்னுடைய நினைவு சரியாக இருக்குமானால் – குறைந்தது அய்யாயிரம் பேராவது சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார்கள்.
முதல் நாளே துப்பாக்கிப் பிரயோகம். முதல் நாளே வேட்டை. ஒருவாரத்திற்குள் 4,000-5000 தோழர்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது நம் மாணவ நண்பர்கள், திரு. பக்தவத்சலம் அவர்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னதற்கு பேட்டி கிடைக்கவில்லை. இப்போது எனக்கிருக்கிற நிலை சில மாணவர்களைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறேன். அவர்கள் எனக்கு பேட்டி கொடுக்க மறுக்கிறார்கள்.
இது திரு. கருத்திருமனுக்குத் தெம்பாக இருக்கும். ஆஹா அப்படியா அப்படியா என்று கூட இருக்கலாம். ஏன் அவர்களிடம் பணிந்து செல்கிறேன் என்றால் மாணவர்கள் உணர்ச்சிக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். மாணவர்கள் நிரந் தரமாக கலவரம் செய்யவேண்டுமென்ற எண்ணம் கொண்ட வர்களல்ல நாங்கள். அவர்கள் உள்ளத்தில் இந்தி எதிர்ப்பு உணர்ச்சி கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திரு. காமராஜ் அவர்கள், ”பெரியோர்கள் சரியாக வழிகாட்டாவிட்டால் மாணவர்கள் பாவம், என்ன செய் வார்கள்” என்று என்னிடத்திலே கேட்டார்கள்.
அந்த முறையில் மாணவர்கள் செல்வதால் அவர்கள் விஷயத்தில் மிகுந்த பரிவோடு மிகுந்த அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டுமென்று இதுவரை அய்ந்து இரவு களாவது மாணவர்களிடம் பேசுவதில் செலவழித் திருப்பேன்,
வெறும் திராவிட முன்னேற்றக் கழக மாணவர்கள் மட்டுமல்ல. காங்கிரஸ் மேடையில் பேசும் மாணவர்கள் எல்லாம்கூட வந்தார்கள். 20-25 மாணவத் தோழர்கள் வந்தார்கள். வந்தவர்கள் என்னைப் பார்த்து 15, 20 ஆண்டு கள் அமைச்சராக இருந்த டிபார்ட்மெண்ட் தலைவர்களைக் கூப்பிட்டு அது என்னவாயிற்று? இது என்னவாயிற்று என்று கேட்பதுபோல் உங்கள் மொழிக் கொள்கை என்ன? இதுபற்றி உங்கள் திட்டம் என்ன? தெளிவாகச் சொல் லுங்கள் என்றார்கள். நான் மெத்த மகிழ்ச்சியடைந்தேன்.
ஏனென்றால் அவர்கள் நாளைக்கு ஒரு வேலைக்குப் போகும் போது மேலதிகாரிகள் இதே குரலில் அவர்களைக் கேட்டால் அன்று இது நினைவிற்கு வரும் என்று அவர்கள் சொன்னதையெல்லாம் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் என்னாலான விளக்கங்களைக் கொடுத்தேன். இதுதான் 65இல் இருந்த நிலைக்கும் 67 இல் இருக்கிற நிலைக்கும் உள்ள வித்தியாசம்.
மாணவர்கள் யார்?
மாணவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவா மாற்ற வேண்டும் என்று கேட்கிறார் திரு. கருத்திருமன் அவர்கள். மும்மொழித் திட்டத்தை மாற்றிவிட்டீர்கள். இப்போது இருமொழித் திட்டம் என்று சொல்கிறீர்கள். மாணவர்களுக்காகவா இதைச் செய்வது என்று கேட்கிறார்கள். மாணவர்கள் யார்? அவர்கள் நம் ரத்தத்தின் ரத்தம். அவர்கள் நம் குடும்பத்துப் பிள்ளைகள். அவர்கள் நம் எதிர்காலத்தின்ன உருவங்கள். அவர்கள் ஒன்றை விரும்புகிறார்கள் என்றா என்னால் நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய அளவிற்கு நால் நிறைவேற்றிக்கொடுக்க முடியும் என்பதை மெய்ப்பித்து காட்டவேண்டியது ஜனநாயகக் கடமை என்று கருதுகிறேன்
அரசியல் சட்டத்தின் 17வது மொழிப் பிரிவை மாற்றும் வலிவு எம்மிடமில்லை.
இங்கு நாங்கள் இருப்பது 138. இதை விரும்பாத காங்கி ரஸ் நண்பர்கள் 49. பாராளுமன்றத்தில் நாங்கள் 25 பேர்கள். காங்கிரஸ்காரர்கள் எண்ணிக்கை 300க்குமேல்; இந்தக் கணக்கு மாணவர்களுக்குத் தெரியாதா? 25 பேர் எதிர்த்து ஓட்டுப் போடாமல் இருந்தார்களா என்றால் எதிர்த்து ஓட்டுப் போட்டார்கள். ஆக அவர்கள் அவர்களது கடமையைச் செய்தார்கள். இனி எல்லோருமாகச் சேர்ந்து தங்கள் கடமையைச் செய்தால் மத்திய அரசைப் பணியவைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
அப்படியானால் நீங்கள் இந்தி படிக்கமாட்டேன் என்று சொன்னால் அவர்கள் கோபித்துக்கொள்வார்களே, நம்மோடு பேசமாட்டார்களே என்று கருத்திருமன் பயப்படுகிறார். அவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும்.
– தொடரும்