புகை பிடிக்காதவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித் துள்ளதாகவும் அதற்கான காரணம் குறித்தும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லான்செட் மருத்துவ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகளவில் புற்றுநோய் இறப்புகளில் நுரையீரல் புற்று நோய் 5ஆவது இடத்தில் உள்ளது. நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடித்தல், புகையிலை பயன்படுத்துதல் உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டாலும் சிகரெட் அல்லது புகையிலை பயன் படுத்தாதவர்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் வசிப்பவர்கள் நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் புகை பிடிப்பவர் களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு குறைந்து வரும் அதே நேரத்தில் புகைபிடிக்காதவர்களில் நுரையீரல் புற்றுநோயின் விகிதம் அதிகரித்துள்ளதாக பன்னாட்டு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு காற்று மாசுபாடுதான் முக்கியக் காரணம் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது புகைபிடிக்காதவர்களுக்கு காற்று மாசுபாட்டினால் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2022 முதல் உலக அளவில் உள்ள தரவுகளில் இருந்து, நுரையீரல் புற்றுநோய்களில் 4 துணைப் பிரிவுகளை வகைப்படுத்தியுள்ளனர்.
அடினோகார்சினோமா (சளி உற்பத்தி செய்யும் சுரப்பி/செல்களில் ஏற்படும் புற்றுநோய்),
ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (ஒரு வகை தோல் புற்றுநோய்);
சிறிய செல் கார்சினோமா (அரிய, வேகமாக வளரும் நுரை யீரல் புற்றுநோய்), மற்றும்
பெரிய செல் கார்சினோமா (ஒரு வகை நுரையீரல் புற்றுநோய்).
சமீபத்திய ஆண்டுகளில், பெரும்பாலான நாடுகளில் இளைய தலைமுறையினரிடையே குறிப்பாக பெண்களிடையே நுரையீரல் அடினோகார்சினோமா புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகள், அதிலும் சீனாவில் காற்று மாசுபாட்டால் நுரையீரல் அடினோகார்சினோமா பாதிப்பு அதிகமுள்ளது. உலகளவில் நுரையீரல் புற்றுநோய் இறப்புக்கு, அதன் துணை பிரிவான நுரையீரல் அடினோகார்சினோமா புற்றுநோய் முக்கியக் காரணமாக இருக்கிறது.