சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி
புதுக்கோட்டை, ஏப்.1- நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்காது என உறுதியளிக்க தயாரா? என சட்டத் துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாதவது:-
தொகுதி மறுசீரமைப்பு
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தொகுதி எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என வலியு றுத்தி வருகின்றோம். மக்கள் தொகை விகிதாசாரப்படி தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை குறையாது என கூறும் அமித்ஷா, வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்காது என்ற உறுதிமொழியை தர தயாரா?.
கடந்த 2001ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய் அரசியல் சட்டத்திருத்தம் 84அய் கொண்டு வந்தார்.இந்திரா காந்தி கூறியதை அவரும் கூறி அடுத்த 25 ஆண் டுகளுக்கு தொகுதி மறுவரை யறை எண்ணிக்கை கூடாது. இதே எண்ணிக்கையில் தொகுதி இருக்கும், மக்கள் தொகை கணக்கெடுக்கப் படும். தொகுதி மறுவரையறை செய்யப்படும். ஆனால் தொகுதி எண்ணிக்கை கூடாது என்றார்.
அந்த சட்டத்திருத்தம் வருகிற 2026ஆம் ஆண்டோடு முடிகிறது. அடுத்து உங்களுடைய நிலை என்ன? என்பதை கேட்கின்ற உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. தொகுதி மறுவரையறை செய்யும் போது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கூட்டப் போகிறீர்களா? குறைக்கப் போகிறீர்களா? என்று கேட்கிற உரிமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உண்டு.
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற எம்.பி.க்களுடன் முதலமைச்சர் டில்லி சென்று பிரதமரை சந்தித்து, தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்கள் பாதிக்கக்கூடாது என வலியுறுத்துவார்.
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.11 ஆயிரத்து 311 கோடி அகும். இதில் குஜராத்தில் ரூ7350 கோடி மதிப்பிலும்,மராட்டியத்தில் ரூ.2,118 கோடி மதிப்பிலும் போதைப்பொ ருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ள 10 மாநிலங்களில் தமிழ்நாடு கிடையாது
தமிழ்நாட்டில் போதைப்
பொருள் நடமாட்டத்தை குறைத்து வருகிறோம். குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டதை மோடி, அமித்ஷா பெருமையோடு சொல்கின்றனர்.
இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் தான் சட்டவிரோதமாக மது விற்பனை அதிகமாகவும், அதிக விலைக்கு மது விற்கப்படுவ தாகவும் அம்மாநிலத்தினரே கூறுகின்றனர்.
மதுக்கொள்கையில் தமிழ்நாடு அரசுக்கு பாடம் சொல்வோம் என்கின்றனர். நாங்கள் என்ன தவறு செய்திருக்கிறோம். வெளிப்படைத் தன்மையாக இந்த அரசாங்கம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு இருந்தால் ஆணையம் அமைத்துப் பார்த்துக் கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.