‘இந்து தமிழ் திசை’ ஏட்டின்‘‘பார்ப்பனத்தனம்!’’

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

28.3.2025 அன்று ‘இந்து தமிழ் திசை’ ஏட்டில் ‘ரத்தக் கண்ணீர்’ புகழ் என்று போடாதே!’ என்ற தலைப்பில் திருவாரூர் கே. தங்கராசு நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் குடும்பத்தாரைச் சந்தித்து நேர்காணல் ஒன்றை வெளியிட்டது.
உண்மைக்கு மாறான பல தகவல்கள் இடம் பெற்றிருப்பதால் அந்த ஏட்டிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் மறுப்புக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

கழகத்தின் மறுப்பு வருமாறு:
‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு மறுப்பு
இந்து தமிழ் திசை நாளேட்டில் (28.3.2025) ‘ரத்தக் கண்ணீர் என்று போடாதே!’ என்ற தலைப்பில் திரு. திருவாரூர் தங்கராசு பற்றி வெளி வந்துள்ள நேர்காணல் கட்டுரையில் தவறான தகவல்கள் பல வெளிவந்திருந் தாலும் குறிப்பாக இரண்டு தவறுகளை சுட்டுக் காட்டுவது நமது கடமை.

1. திரு.திருவாரூர் தங்கராசுவின் இரண்டாவது மகளின் திருமணம் 1982 பிப்ரவரி 2இல் நடந்ததாகவும், தங்கள் பிள்ளைகளுக்குப் பெரியார்தான் பெயர் சூட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1973 டிசம்பர் 24இல் மறைந்த தந்தை பெரியார் 1982இல் திருமணம் செய்து கொண்ட இணையர்களின் பிள்ளைகளுக்கும் பெரியார்தான் பெயர் சூட்டினார் என்று சொல்லியிருப் பதும் அதனை இந்து தமிழ் திசை ஏடு வெளியிட்டிருப்பதும் வேடிக்கையான தும் – நகை முரணுமாகும்.

2. ‘விடுதலை’ இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்க பெரியார் அழைத்த போது, பெரியாரிடம் மாத ஊதியம் பெற்றால், தனது அறிவை விற்பதாகும் என எண்ணி, அதை விரும்பாமல், அதே நேரம் அவரிடம் மறுக்காமல், கி.வீரமணியை அழைத்துச் சென்று 6 மாதம் அளவுக்குப் பயிற்சி அளித்து, பணியில் அமர்த்தி பெரியாரை ஒப்புக் கொள்ளச் செய்தார் திருவாரூர் தங்கராசு என்று வெளியிட்டிருப்பது – முற்றிலும் உண்மைக்கு மாறானதாகும்.
உண்மை என்ன என்பதை தந்தை பெரியார் அவர்களின் அறிக்கை வாயி லாகவே திட்டவட்டமாக அறிய முடியும்.
(‘விடுதலை’ 10.8.1962)
‘வரவேற்கிறேன்’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் குறிப்பிட்டிருப்பதாவது:
“வீரமணி அவர்கள் நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகை தொண்டையும், பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு, தொண்டாற்ற ஒப்புக் கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டார். நமது கழகத்திற்கு கிடைத்த ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி, திரு.வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு, கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தந்தை பெரியார் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதோடு, ‘விடுதலை’ ஆசிரியருக்குரிய நாற்காலியில் தந்தை பெரியார் அவர்களே கி.வீரமணி அவர்களின் தோளைப் பற்றி அமர வைத்தார் என்பது ஆதாரபூர்வ வரலாறு. ‘தங்களிடம் ஊதியம் பெற மாட்டேன்’ என்று தந்தை பெரியாரிடம் சொல்லி, ஊதியத்தை மறுத்து, இன்றுவரை அப்படியே பணியாற்றுபவர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
உண்மை இவ்வாறு இருக்க, புது தலப் புராண கட்டுக் கதையை வெளி யிட்டு இருப்பது விந்தையே!

3. 1960ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியாரால் திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டவர் ஆசிரியர் கி.வீரமணி.
1943ஆம் ஆண்டிலேயே தனது பத்தாவது வயதிலேயே திராவிடர் கழகத் தொண்டரானவர். மேசை மீது ஏறிப் பேசியவர்.
திரு.திருவாரூர் தங்கராசு, காங்கிரஸ் காரராக இருந்து பிற்காலத்தில் திராவிடர் கழகத்திற்கு வந்தவர் என்பதுதான் உண்மை.

4. 1995ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் முதல் ‘பெரியார் விருது’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது சரியான தகவலாகும்.
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்
திராவிடர் கழகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மறுப்பினை ‘இந்து தமிழ் திசை’ ஏடு இன்று, ‘திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு கட்டுரை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் விளக்கம்’ என்ற பெயரில் கீழ்க்கண்டவாறு இன்று வெளியிட்டுள்ளது.
திருவாரூர் தங்கராசு
நூற்றாண்டு கட்டுரை
திராவிடர் கழக துணை தலைவர்
கலி. பூங்குன்றன் விளக்கம்
‘ரத்தக் கண்ணீர்’ நாடக ஆசிரி யரும், பெரியாரின் தொண்டரு மான மறைந்த திருவாரூர் கே.தங்கராசுவின் நூற்றாண்டு வரும் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்க உள்ளது. அவரை நினைவுகூரும் வகையில் ‘ரத்தக் கண்ணீர் புகழ் என்று போடாதே’ என்ற தலைப்பில் கடந்த 28-ம் தேதி ‘இந்து’ தமிழ் திசை’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ பக்கத்தில் சிறப்பு நேர்காணல் ஒன்று வெளியானது.

அதில் இடம்பெற்ற சில கருத்துகள் தொடர்பாக விளக்கம் அளித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்ட செய்தி:
திருவாரூர் தங்கராசுவின் 2-வது மகள் திருமணம் 1982-ல் நடந்தது. அவரது பிள்ளைகளுக்கு பெரியார் பெயர் சூட்டி யிருக்க வாய்ப்பு இல்லை. பெரியார் கடந்த 1973 டிசம்பர்
24-ம் தேதி மறைந்துவிட்டார்.

அதுபோல, ‘விடுதலை’ இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்க தங்கராசுவை பெரியார் அழைத்த போது, அதை அவர் விரும்பாமல், கி.வீரமணியை அழைத்துச் சென்று பயிற்சி அளித்து பணியில் அமர்த்தி பெரியாரை ஒப்புக் கொள்ளச் செய்தார்’ என்று அந்த நேர்காணலில் இருப்பது உண்மைக்கு மாறானது.
‘வரவேற்கிறேன்’ என்ற தலைப்பில் பெரியார் வெளியிட்ட அறிக்கையை (10-8-1962) வாசித்தால் இதை அறியலாம். அதில், ‘வீரமணி நமது கழகத்துக்கு கிடைத்த ஒரு நல்வாய்ப்பு என்றே கருதி, அவரை மனதார வரவேற்று, கழக தோழர்களுக்கு இந்த நற்செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு, ‘விடுதலை’ இதழின் ஆசிரியர் பணியில் வீரமணியை பெரியார் அமர்த்தினார் என்பதே உண்மை. மேலும், 1995-ல் தமிழ்நாடு அரசின் முதல் ‘பெரியார் விருது’, கி.வீரமணிக்கு வழங்கப்பட்டது என்பதே சரியான தகவல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.’’

இதுதான் ‘இந்து தமிழ்திசை வெளியிட்டுள்ள செய்தி.
இதில் குறிப்பிடத்தகுந்தது என்னவென்றால் மறுப்புக் கடிதத்தை முழுமையாக வெளியிடாதது மட்டுமல்ல – செய்தியின் தலைப்பு திசை திருப்புவதாக அமைந்துள்ளது.
கழகத்தின் சார்பில் மறுப்பு எழுதப் பட்டதே தவிர விளக்கம் அல்ல.
விளக்கம் என்பதற்கும், மறுப்பு என்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. இதுகூடத் தெரியாதா இந்த நாளேட்டுக்கு?

விளக்கம் என்பது கட்டுரை எழுதியவரோ நேர்காணல் கொடுத்தவரோ தங்கள்மீது சாற்றப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுவதாகும்.
ஆனால் ‘இந்து தமிழ் திசை’ நாளேடோ மறுப்புக் கொடுத்த திராவிடர் கழகத்தின் மீதே ஏதோ தவறு இருப்பது போலவும், அதற்கு விளக்கம் சொல்வது போலவும், தலைகீழான பொருள்படும்படி தலைப்புக் கொடுத்திருப்பது பச்சைப் பார்ப்பனத்தனமே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *