மதுரை, மார்ச் 31- மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் ஏப்.2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் 3ஆம் தேதி நடைபெறும் கருத் தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்று கின்றனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், ஏப்.1ஆம் தேதி மாலை தியாகிகள் நினைவுச் சுடர், மாநாட்டு கொடி பயணம் நிறைவு நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. மாநாட்டு கண்காட்சியை பத்திரிகையாளர் என்.ராம் தொடங்கி வைக்கிறார். புத்தக கண்காட்சியை பத்திரிகையாளர் வே.பரமேசுவரன் தொடங்கி வைக்கிறார்.
மு.க.ஸ்டாலின்
ஏப்.2ஆம் தேதி காலை கொடி யேற்றுதல், செந்தொண்டர் அணி வகுப்பு, மாநாட்டு தொடக்க நிகழ்ச்சி, பொது மாநாடு ஆகியவை நடைபெறுகிறது. அன்று மாலை நடைபெறும் கருத்தரங்கில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைக் கலைஞர்கள் ராஜுமுருகன், சசிகுமார் ஆகியோர் பேசுகின்றனர்.
3ஆம் தேதி மாலை 5 மணியளவில் `மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்’ நடைபெற உள்ளது. வரவேற்பு குழு தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
மேலும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கருநாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆகியோரும் பேசுகின்றனர்.
4ஆம் தேதி மாலை நடைபெறும் கருத்தரங்கில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் பேசுகின்றனர். 5ஆம் தேதி மாலையில் நடிகை ரோகிணி வழங்கும் `ஒராள்’ நாடகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து திரைக்கலைஞர்கள் நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குநர் மாரி செல்வராஜ், த.செ.ஞானவேல் ஆகியோர் பேசுகின்றனர்.
மாநாட்டின் நிறைவு நாளான 6ஆம் தேதி மாலை பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது. பேரணி முடிவில் மஸ்தான்பட்டி –- விரகனூர் ரிங்ரோட்டில் டோல்கேட் அருகே பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகிக்கிறார். கட்சியின் அகில இந்திய ஒருங் கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத், உ.வாசுகி ஆகியோர் பேசுகின்றனர். மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.