தருமபுரி மாவட்டம்,பென்னாகரம் வட்டம், எர்றபையனஹள்ளி கிராமத்தி லுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் சவிகாந்த், ரோகித் ஆகிய மாணவர்களை ஜாதி பெயரைச் சொல்லி, மற்றொரு ஜாதியைச் சார்ந்த செல்லப்பன் என்கிற முத்துரன் என்பவர் தாக்கியுள்ளார். இது தொடர்பாக திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் கிராமத்திலும், பள்ளி நிர்வாகத்திடமும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் அவர்களிடமும் விவரங்களைச் விசாரித்து அறிந்தார்கள்.
21.03.2025 அன்று மதியம் உணவு இடைவேளையின் போது சவிகாந்த் மற்றும் ரோகித் ஆகிய இருவரும் பள்ளி மாணவர்களுடன் கேரம்போர்டு விளை யாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏதோ தவறாகப் பேசுவதாகக் கூறி, மேற்படி நபர் அவர்களை அடித்துள்ளார். இதை வீட்டில் சொல்லக் கூடாது என்று அம் மாணவர்களை, ஆசிரியர்கள் சிலர் அச்சுறுத்தியதாகவும், எதிர்த்துக் கேள்வி எழுப்பிய ஊர் மக்களை அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், மேலும் சிலரும் சேர்ந்து கொண்டு, மக்களைப் பள்ளியை விட்டு வெளியே தள்ளிப் பூட்டி, “அப்படித் தான் அடிப்போம்.
இந்தப் பள்ளி நாங்கள் கொடுத்த இடம்” என்று திமிராகப் பேசியுள்ளதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகமும், தலைமையாசிரியரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஜாதி உணர்வுடன் நடந்து கொண்டவர்களுக்குத் துணை போகும் நிலையை உணர்த்துவதாக ஒடுக்கப்பட்ட மக்கள் வேதனை தெரி வித்தனர்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் இணைந்து 24.03.2024 அன்று பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பையும் காவல் துறை அழைத்துப் பேசியுள்ளது.
இதற்கு முன்பு கடந்த மாதத்தில் நடைபெற்ற பள்ளி ஆண்டுவிழாவில், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது தொடர்பாக ஜாதிப் பாகுபாடு காட்டும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரை நீக்கும்படியும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் பள்ளித் தலைமை ஆசிரியர், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிக் கல்வித் துறைக்கும், மாவட்டக் கல்வி அலுவலருக்கும், திராவிடர் கழக இளை ஞரணி சார்பில் புகார் அளிக்கப்பட உள்ளது என்றும், அம் மக்களுக்கு திராவிடர் கழகம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களை அரூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்
த.மு.யாழ்திலீபன் ஒருங்கிணைப்பில்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை தலைமை யில், அரூர் மாணவர் கழக அ.பிரதாப், சு.சூர்யா ஆகிய தோழர்கள் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.
