மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த டில்லி எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் 4 பேரை டில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணை யில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் மருத்துவம் பயில நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நீட் தேர்வில் தேர்ச்சி அடைவது அசாதாரண மானது. மிகவும் கடினமானது! ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் அவ்வப்போது தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில் தான் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை டில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நரேஷ் பிஷ்ரோய், முதலாமாண்டு மாணவர் சஞ்சு யாதவ், மகாவீர் மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நரேஷ் பிஷ்ரோய் மற்றும் சஞ்சு யாதவ் ஆகியோர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாவீர், ஜிதேந்திரா ஆகியோர் மகாராட்டிரா மாநிலம் நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நீட் தேர்வுக்கான இந்த ஆள்மாறாட்டக் கும்பல் நரேஷ் பிஷ்ரோய் தலைமையில் செயல்பட்டு வந்துள்ளது. இவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோருக்குப் பதிலாக முதலாமாண்டு பயிலும் மாணவர்களை தேர்வில் பங்கேற்க வைத்து ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.
இதற்காக இந்தக் கும்பல் ஒருவரிடம் இருந்து ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இத்தகைய மோசடியில் டில்லி மட்டுமின்றி நாடு முழுவதும் இவர்கள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்தக் கும்பல் எத்தனைப் பேருக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்தது? இவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நீட் தேர்வு மோசடி செய்திகள் தொடர்ந்து கொண்டே உள்ளன; கைது செய்யப்படுவார்கள் பின்பு பிணையில் வந்துவிடுவார்கள். நீட் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடிக்க ஒன்றிய அரசு வழி திறந்து விட்டிருக்கிறது.
‘நீட்’ தேர்வு என்பதே ஒரு சூழ்ச்சிப் பொறிதான். 12ஆம் வகுப்பு வரை (+2) படிக்கும் ஒரு மாணவன் அல்லது மாணவி +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் குப்பையில் தூக்கி எறிந்து விட்டு, ‘நீட்’ என்ற பெயராலே தேர்வு வைத்து, அதில் அதிக மதிப்பெண் பெறுவோர்க்கே மருத்துவக் கல்லூரியில் இடம் என்பது எந்த வகையிலும் நியாயமாகுமா?
பிளஸ்-2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற அரியலூர் அனிதா நீட் தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது என்றால் இதன் தன்மையை விளங்கிக் கொள்ளலாமே! எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் அனிதா பெற்ற மதிப்பெண் 500க்கு 476 என்பதையும் நினைத்துப் பாருங்கள்.
முதல் தலைமுறையாக படிக்கும் பெண் – மூட்டை தூக்கும் தந்தையின் மகளின் இந்த சாதனை சாதாரணமா?
இந்தியாவில் எத்தனையோ பாடத் திட்ட முறைகள் இருக்கும்போது சிபிஎஸ்-இல் படிக்கும் மாணவர்கள் பயன் அடையும் வகையில், அந்தப் பாடத் திட்டத்திலிருந்து தேர்வு நடத்துவது எப்படி சமமான போட்டியாகும்?
இதில் முறைகேடுகள் ஆள் மாறாட்டங்கள் என்பது எல்லாம் எத்தகைய மோசடி!
‘நீட்’டால் பாதிக்கப்படும் பெரும்பான்மை மக்களே ‘நீட்டின்’ சூழ்ச்சி வலையைப் போதுமான வகையில் புரிந்து கொள்ளாமைதான் உயர் ஜாதிக் காரர்களுக்கும் பணப் படுக்கையில் படுத்துப் புரள்வோருக்கும் வசதியாகிப் போய் விட்டது! ஒடுக்கப்பட்ட மக்களே, விழித்தெழுவீர்!