“நெருப்பை பற்ற விடுங்கள்” – பெண்ணினமே!
குற்றாலத்திற்கு இம்முறை 44ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வகுப்பெடுக்கப் போனபோது முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் டேவிட் செல்லதுரை அவர்களின் மிக எழிலோடும், வசதிகளோடும், மக்களுக்குப் பயன் படும் வகையிலான ‘சாந்தி மருத்துவமனையில்’ தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்புப் பெற்று மகிழ்ந்தேன்; அம்மருத்துவ மனையை அவரது மகன், மருமகள், உறவுகள், புதிய மருத்துவ வரவுகள் மிகச் சிறப்பாக நடத்துகின்றனர்!
தொழிலாக அல்ல; தொண்டாக, நடுத்தர மக்களுக்கும் பயன்படும் ஒரு மக்கள் மருத்துவ மனை அது!
அதில் எனக்கு ஒரு நூலை வழங்கினார். அதனை ஆக்கிய டாக்டர் கவுதமி தமிழரசன் அவர்கள்;
கட்டுரை – கவிதைகளின் தொகுப்பு அந்நூல்! அதில் கவுதமி தமிழரசனின் எழுத்துக்களைப் படித்தபோது இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது; ‘போனஸ்’ கூடுதல் மகிழ்ச்சியடைந்தேன் – இரவே படித்தேன்; சுவைத்தேன்; அது நம் கருத்துக்கு இன்பத்தேன்! மிகையல்ல.
“மரபுகளை உடைப்பவள்” என்றே தலைப்பு – பொருத்தமான, துணிவுப் பாய்ச்சல் அந்நூல்! அதில் கட்டுரை, கவிதைகள் உண்டு. மாறுபாடான தலைப்புள்ள இந்நூலை வெளியிட்டது சென்னையில் உள்ள கலப்பை பதிப்பகமாகும். (பக்கங்கள் 143, விலை ரூ.200).
விலை மதிக்க முடியாத வீரத்தின் வெளிப்பாடு!
“பெண்ணுக்கு முதல் தேவை கல்வி அறிவுடன் கூடிய பகுத்தறிவு… அதுதான் கேள்விகள் அற்ற அடிமை மன நிலையில் இருந்து பெண்களை மீட்டெடுக்கும்… அனைத்து சடங்கு, சம்பிரதாயம், அடக்குமுறைகளையும் மீறி, கட்டுக்களையும் மீறி, பெண் சமூகம் முன்னேற, இந்த சடங்கு சம்பிரதாய கட்டுகளைப் புறக்கணித்தே, அவற்றைக் கடந்தே வர வேண்டும்.”
என்று கூறும் இவர்,
“நெருப்பைப் பற்ற விடுங்கள்!” என்ற தலைப்பில் கவிதையை, அடுப்பையே அனுதினமும் பற்ற வைத்து, வைத்து புகைகளால் பாழாய்ப் போன கண்கள், வெந்த எம் பெண்ணினமே இந்த (புது) நெருப்பைப் பற்ற விடுங்கள்.
முன்பொரு காலத்தில் நெருப்பில் உங்களை “குளிக்க வைத்து கற்பு சோதனை நடத்திட்ட கொலைக்கார காலம் அல்ல இது; மானுடத்தின் மகத்தான பிரிவு எம் பெண்கள்” எனும் பெரியாரின் புதுயுகப் பெண்களின் புரட்சிக் காலம்?
இதோ இந்த முழக்கத்தை நீங்களும் கேளுங்களேன்!
நெருப்பை பற்ற விடுங்கள்!
“ஒரு இருளின் துவக்க நாட்கள் இவை
பாதாள நரகத்தின் வாசலில் நீங்கள்
மக்களின் மரண ஓலங்கள் இங்கே!
உங்களுக்கு எதுவெலாம் வேண்டாமோ
அதுவெலாம் இனி உங்கள் தலையில்…..
ஜனநாயகம் ஜனநாயகம் என
கத்தும் மனிதர்களை நோக்கி
இதோ “தேசத்துரோகி…
இவனை நாடுகடத்துங்கள்” என்பார்கள்
நரகத்தின் காவலாளிகள்!
நீங்கள் அழுது புரண்டாலும்
மீளும் வழி இல்லை
உங்கள் குரல்வளையை நெரித்து
ஜெய்ஹிந்த் என்பார்கள்!
பயப்படாதீர்கள்!
சிறுகீற்றாய் ஒரு “நெருப்புத் துளி”
உங்கள் வசம் உள்ளது
அதை உங்கள் அருகில் உள்ளவர்களின்
உள்ளங்களில் பற்ற விடுங்கள்!
அது அதிகாரத்தை அடக்கும் நெருப்பு
எதற்கும் அஞ்சாத கருப்பு
எரியும் அந்த பெருநெருப்பு
இருட்டின் திரைவிலக்கும்!
அடிமைச் சங்கிலியை அறுக்கும்!
பாதாள வாயில் திறக்கும்!
சமத்துவ வழி பிறக்கும்!
அது “பெரியார்” எனும் நெருப்பு
அது அறிவின் பெருவெளி!”
(கவிதை முடிவு)
அடைந்து கிடக்கும் எம் அலங்கார பொம்மை களே, உடைத்து நொறுங்கும் சமையல்காரிகளே,
நொந்து பெருக்கும் குழந்தை பெறும் இயந்திரங்களே,
அந்தப் “பெரு வெளியில்” வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க கற்றுக் கொண்டு
சுயமரியாதை முத்திரை பதித்து வாழ வாரீர்! வாரீர்!
பற்ற வைக்கும் நெருப்பு புது வாழ்வின் சமையல் தான். பயப்படாதீர்கள்.