அவுரங்காபாத், மார்ச் 30- பீகாரில் குழந்தை வரம் வேண்டி, முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு தலை துண்டித்து, எரித்து நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள மதன்பூர் கிராமத்தை ஒட்டி குலாப் பிகா என்ற கிராமம் உள்ளது. இங்கு, யுகுல் யாதவ், 65, என்பவர் வசித்து வந்தார். கடந்த 13ஆம் தேதி, இவர் காணாமல் போனதை அடுத்து, குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இதற்கிடையே, பக்கத்து கிராமமான பாங்கரில், பூஜையின்போது முதியவரின் உடல் ஒன்று எரிக்கப்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து, அங்கு சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் தீ மூட்டப்பட்டு பூஜை நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
இது தொடர்பாக விசாரித்த காவல் துறையினர், பூஜை நடத்திய சுனில் பஸ்வான், அவருக்கு உடந்தையாக இருந்த தர்மேந்திரா, ஒரு சிறுவன் உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர். அங்கு நரபலி நடத்தப்பட்டதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். தீயில் எரிந்த நிலையில் இருந்த தலையில்லா உடலையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.
இதுகுறித்து தர்மேந்திரா அளித்த வாக்குமூலத்தில், ‘சுனில் பஸ்வானுக்கு குழந்தை இல்லாததால், அதற்காக நரபலி பூஜை நடத்தப்பட்டது. இதற்காக யுகுல் யாதவை கடத்தி தலையை வெட்டிக் கொன்றோம். அவர் உடலை எரித்தோம். இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சிறுவனை கொன்று நரபலி கொடுத்து, அவர் உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசினோம்’ என்றார்.
இதையடுத்து, நரபலி பூஜை கொடுக்கப்பட்ட இடத்தின் அருகில் உள்ள வயல்வெளியில் இருந்து யுகுலின் தலையை மீட்ட காவல் துறையினர், பூஜை நடத்திய மந்திரவாதி ராமசிஷ் ரக் ஷயானை தேடி வருகின்றனர். நரபலி கொடுக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ததுடன், தீயில் எரிந்த எலும்புகளின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.