மதுரை, மார்ச் 30- 1920ஆம் ஆண்டே நீதிக்கட்சி காலம் தொடங்கி அனைவருக்கும் சமமான கல்வி என்ற வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவை திராவிட இயக்கங்கள் எனவும், அதே போல் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்கும் அதில் முக்கியத்துவம் வாய்ந்தது என தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மதுரையில் புகழ்பெற்ற அமெரிக்கன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் பட்டங்களை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
மேலும் பல்கலை. அளவில் தங்கப் பதக்கங்கள் பெற்ற மாணவர்கள் பிஎச்டி மாணவர்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் அமைச்சர் வழங்கினார்.
கல்வி வளர்ச்சி
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாடு அளவில் மட்டுமல்லாது இந்திய அளவில் பழம் பெருமை வாய்ந்த அமெரிக்கன் கல்லூரியில் பயின்று பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று முடித்து பட்டம் பெறும் இந்த நாள், மாணவ மாணவிகளுக்கு இந்த நாள் முக்கிய தருணம் ஆகும். இந்திய அளவில் மனித வளம் மற்றும் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
அதற்கான வாய்ப்பை இன்று நேற்று மட்டுமல்ல, 1920ஆம் ஆண்டு நீதிக் கட்சி தொடங்கிய காலம் முதலே வழங்கி வருகிறோம். அனைவருக்கும் சமமான கல்வி என்ற வாய்ப்பை திராவிட இயக்கங்கள் ஏற்படுத்தி தந்திருக்கின்றன. அதேபோல கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்கும் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இன்று பட்டம் பெறுகிற ஒவ்வொரு மாணவ மாணவிகளும் இந்த கல்லூரிக்கு முன்மாதிரி மாணவர்களாக திகழ வேண்டும். புகழ் பெற்ற இந்த கல்லூரியில் படித்து இன்றைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளிலும் உயர்ந்த நிலையை எட்டியவர்கள் பலர் இருக்கிறார்கள்.
கற்றல் நின்றுவிடாது
அந்த வகையில் ஓவியர் மனோகர் தேவதாஸ், நான் சட்டமன்ற தொகுதியில் முதன் முறையாக போட்டியிடும் போது உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பேராசிரியர் சாலமன் பாப்பையா, தற்போது தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் சக்கரபாணி உள்ளிட்ட ஏராளமானோர் இங்கு படித்து பெருமை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டம் பெற்றவுடன் கல்வி நின்று விட்டது என்று கிடையாது. கற்றுக் கொள்கின்ற மாணவர்களாக திகழ வேண்டும். அப்போது தான் வாழ்வில் சிறந்து விளங்க முடியும்” என்றார்.