‘‘கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி’’ என்று சொல்கிறார்களே, கல்தோன்றி, மண் தோன்றாக் காலம் என்பது எது?
ஆதிகாலம் என்று சொல்கிறீர்கள், அதைத்தான் காட்டுமிராண்டிக் காலம் என்று பாமர மக்களுக்கு விளங்கும்படியாகச் சொல்வார் தந்தை பெரியார்!
அது திருத்தப்படவேண்டும், வளர்ச்சியடையவேண்டும்; மாற்றமடையவேண்டும் என்றார்!
சிட்னி, மார்ச் 30 ‘‘கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி’’ என்று சொல்கிறார்களே, கல்தோன்றி, மண் தோன்றாக் காலம் என்பது எது? ஆதிகாலம் என்று சொல்கிறீர்கள், அதைத்தான் காட்டுமிராண்டிக் காலம் என்று பச்சையாக, பாமர மக்களுக்கு விளங்கும்படியாகச் சொல்வார் தந்தை பெரியார். காட்டுமிராண்டிக் காலத்து மொழி, அது திருத்தப்படவேண்டும், வளர்ச்சியடையவேண்டும்; மாற்றமடையவேண்டும் என்ற கருத்தில் எடுத்துச் சொன்னார். அதை எடுத்துச் சொன்னதோடு நிறுத்தவில்லை. தன்னுடைய ஏட்டில் அதனை நடைமுறைப்படுத்தினார். நடைமுறைப்படுத்திய பிறகுதான், இன்றைக்கு உலகம் முழுவதும் அந்த எழுத்துகள் பரவியிருக்கின்றன என்று திராவிடர்
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
எஸ்.பி.எஸ். ஒலிபரப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்
ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 15.3.2025 அன்று சிட்னியில் உள்ள எஸ்.பி.எஸ். ஒலிபரப்பிற்குப் பேட்டியளித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, எஸ்பிஎஸ் ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து ரைசல் என்று அழைக்கப்படுகின்ற ரேமண்ட் செல்வராஜூம், குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள்.
அவர்களது உரையாடலின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
திராவிடக் கொள்கைகளை எதிர்த்துப் பேசுகிறார்களே?
கேள்வி: பெரியாரைப்பற்றி விமர்சனம் செய்பவர்கள் இல்லை; இப்போது அவதூறு செய்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்கிறீர்கள். அதில், தமிழ்த்தேசியம் பேசுபவர்கள், திராவிடக் கொள்கைகள் உடையவர்கள் வேறு வேறாக எதிர் எதிராக நிற்கிறார்கள் என்று சொல்லலாம். இளைஞர்கள், தமிழ்த்தேசியத்தின்மீது ஒரு ஈர்ப்புக் கொண்டு, திராவிடக் கொள்கைகளை எதிர்த்துப் பேசுகிறார்கள்; அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழ்த் தேசியம் வேறு; திராவிட தேசியம் வேறு அல்ல!
தமிழர் தலைவர்: நீங்கள் சொல்வதெல்லாம் கொஞ்ச நாள்களுக்கு முன்பு இருந்தது. இப்போது அது மாறி, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.
அதற்கு என்ன காரணம் என்றால், தமிழ்த் தேசியம் வேறு; திராவிட தேசியம் வேறு அல்ல.
இன எதிரிகளால் தூண்டப்பட்டவர்கள், பல்வேறு வகைகளில், பல்வேறு பொய் முகங்களைக் காட்டிக்கொண்டு, இதனை மூலதனமாகக் கொண்டு ஆரம்பித்தார்கள்.
தமிழ்த் தேசியமும், திராவிட தேசியமும் வேறு அல்ல. நாலணா என்பது இருக்கிறதே, அது ஒரு ரூபாய் என்பதில் ஒரு பகுதி.
ஒரு சுளை, பழத்திலிருந்து உரிக்கப்பட்டதே தவிர, பழம் வேறு, சுளை வேறு அல்ல.
இனமானப் பேராசிரியர் க.அன்பழகனாரின் விளக்கம்!
இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மிக அழகாக இதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.
‘‘தமிழன் என்று சொல்லும்போது நான் பெருமைப்படுகிறேன்; திராவிடன் என்று சொல்லும்போது நான் உரிமை அடைகிறேன்’’ என்றார்.
திராவிட தேசியமும், தமிழ்த் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல!
தமிழன் என்று சொல்லிக்கொண்டு, இந்த இனத்திற்கு மாறுபட்டு, இந்த மொழிக்கு மாறுபட்டு உள்ளே நுழைந்து கொண்டிருக்கக் கூடியவர்கள் பலர் வருகிறார்கள். அவர்களை அடையாளம் காட்டுவதுதான் திராவிட தேசியமே தவிர, திராவிட தேசியமும், தமிழ்த் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல.
தமிழ்த் தேசியம், திராவிட தேசியத்தின் ஒரு பகுதி. ஆனால், இதைப் புரியாத இளைஞர்கள் கொஞ்சம் பேர் இருந்தார்கள். அப்படி அவர்கள் யாராவது வந்தாலும், அண்மைக் காலத்தில் விமர்சனம், அவதூறு வர வர, அதைப் புரிந்துகொண்டு வரக்கூடிய காலகட்டத்திற்கு வந்திருக்கின்றார்கள்.
அதனால் எந்தவிதமான அடிப்படைக் கோளாறும் எந்தவொரு வடிவமும் பெற முடியாது. திராவிடம் என்பது பண்பாடு, மொழி, கலை என்பது. மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு இவற்றையெல்லாம் எதிர்த்துச் சொல்வதுதான் திராவிடம்.
தமிழ் என்று சொல்லும்போது, மொழியை மட்டும்தான் காட்டும். ஆனால், திராவிடம் என்று சொல்லும்போது, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்க்கக் கூடிய அளவிற்குத் தெளிவாக இருப்பதாகும்.
‘‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’’ என்று எதிர்மறையாக இருந்தது!
அதற்காகத்தான் பெரியார் அவர்கள், ‘‘திராவிடர் கழகம்’’ என்று மாற்றினார். அதற்குமுன், பாமர மக்கள் ‘‘நீதிக்கட்சி’’ என்று அழைத்தார்கள். ‘‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’’ என்று எதிர்மறையாகத்தான் பெயர் சொன்னார்கள்.
ஏன் எதிர்மறையாகச் சொல்லவேண்டும்? ஒரு நல்ல நாகரிகம், நல்ல மொழி, நல்ல பண்பாடு நம்முடையது. பல ஆண்டுகாலமாக ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற மக்களின் பண்பாடுதான் திராவிடப் பண்பாடு.
திராவிடம் என்கிற சொல், மனுநீதியிலேயே இருக்கிறது!
திராவிடம் என்கிற சொல், மனுநீதியிலேயே இருக்கிறது. மனுநீதியில், 10 ஆவது அத்தியாயத்தில் இருக்கிறது.விமர்சனக்காரர்கள் அல்லது அவதூறு செய்பவர்கள் சில நேரங்களில் சொல்வதுபோன்று, திராவிடம் என்பது வெள்ளைக்காரர்களோ, மற்றவர்களோ உருவாக்கியது அல்ல.
திராவிடம் என்பதற்கு
நீண்ட கால வரலாறு உண்டு!
இந்தியாவினுடைய தேசியப் பாடலில், ‘‘திராவிட உத்கல வங்கா’’ என்பது ரவீந்திரநாத் எழுதிய பாடல், வங்காள மொழியில்.
அந்தத் திராவிடம் என்பதற்கு நீண்ட கால வரலாறு உண்டு, பழைமை உண்டு பண்பாட்டு அடிப்படையில்.
எனவே, அந்தப் பண்பாட்டு அடிப்படையை அவர்கள் விளக்கும்போது, அவர்கள் உண்மையைத் தெரிந்து கொண்டார்கள்.
தமிழுக்கும், திராவிடத்திற்கும் மோதல் கிடையாது. மோதல் போன்று அவர்கள் கற்பனை செய்தார்கள். எதிரிகளுடைய ஏவல்தான் அது.
மரத்திற்குப் பின் நிற்பவர்கள் அவர்கள்; அம்பாக இவர்கள் இருக்கிறார்கள்!
இந்தக் கொள்கையை அழிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் நேரிடையாக வர மாட்டார்கள். மரத்திற்குப் பின்னால் நின்று அம்பு எய்தியதைப் போலத்தான் இவர்கள் வருவார்கள்.
எனவே, மரத்திற்குப் பின் நிற்பவர்கள் அவர்கள்; அம்பாக இவர்கள் இருக்கிறார்கள். இதுதான் உண்மை!
தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் ஏன் சொன்னார்?
கேள்வி: பெரியார் குறித்து அவதூறு செய்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். பெரியார் குறித்த விமர்சனங்கள் பல உள்ளன. அதில் குறிப்பாக இரண்டு. ஒன்று, கடவுள் மறுப்புக் கொள்கை. அது விமர்சனம் என்பதைவிட, நம்பிக்கை. கடவுளை நம்பலாம்; நம்பால் போகலாம். இரண்டாவது, தமிழ் மொழிக் குறித்து. தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னார். இப்படி சொல்பவரின் கொள்கையை பின்பற்ற சொல்ல முடியுமா என்கிற ஒரு கேள்வி எழுகிறது அல்லவா?
எந்தத் தமிழ் எழுத்துகள் பயன்படுகின்றன?
தமிழர் தலைவர்: நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.
இன்றைக்குப் பள்ளிக்கூடங்களில் தமிழ் பாடம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது அல்லவா! அந்தப் பாடத்தில், எந்தத் தமிழ் எழுத்துகள் பயன்படுகின்றன?
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்தான்!
இரண்டாவது, கணினியில் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துகிறீர்கள்; அதில் எத்தனை எழுத்துகள் சுருக்கமாக இருக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படை என்ன தெரியுமா? தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்தான்.
அந்தத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை உண்டாக்கி யவர் யார்?
மேதைகள், அறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ்ப் பாட்டுப் பாடினால் பூட்டுத் திறக்கும் என்று சொன்னவர்கள், பாட்டுப் பாடினால் முதலை வாயில் போனவர்கள் எல்லாம் வெளியே வந்தார்கள் என்று சொன்னவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செய்யவில்லை.
நிறைய ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள்; அவர்களில் யாராவது தமிழ் மொழி எழுத்தை, உயிர்மெய் எழுத்து, மெய் எழுத்து, ஆய்த எழுத்தை மாற்றி இருக்கிறார்களா?
மாற்றி, அதை நடைமுறைப்படுத்தி, மக்கள் மத்தியில் அதனைப் பிடிவாதமாக நிலைப்படுத்தல் செய்த ஒரே ஒருவர் தமிழ் வரலாற்றிலேயே யார் என்று சொன்னால், தந்தை பெரியார்தான்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின்போது….
அதனுடைய விளைவுதான், தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவின்போது, எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருக்கிறபோது, பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டார்.
சிங்கப்பூரில், ஆஸ்திரேலியாவில், அமெரிக்காவில் எங்கெல்லாம் தமிழ் மொழியைச் சொல்லிக் கொடுக்கிறார்களோ, அங்கேயெல்லாம் பயன்படுத்தப்படுகிறது.
பெரியாருடைய சிந்தனைகள்
ஆழமான சிந்தனை!
தமிழில், முதலில் தட்டச்சு எழுத்து (டைப்ரைட்டிங்) எளிதில் செய்ய முடியவில்லை. இன்றைக்கு எல்லாவற்றிலும், நம்முடைய செல்போனில், தமிழ் எழுத்தில், ‘நன்றி’ என்று டைப் செய்கிறோம். இதற்கெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று? இதற்கு அடிப்படைக் காரணம் யார் என்றால், பெரியார்.
ஆகவே, பெரியாருடைய சிந்தனைகள் ஆழமான சிந்தனையாகும். தொலைநோக்குச் சிந்தனையாகும்.
தமிழ் எழுத்தை மாற்றவே கூடாது என்று சொன்ன புலவர்கள் இருக்கிறார்கள். தமிழ் எழுத்தில் கை வைக்கவே கூடாது என்றார்கள்.
உடனே, அறிஞர்களை அழைத்து, ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து விவாதித்தோம்.
தெ.பொ.மீனாட்சிசுந்தரம்!
தெ.பொ.மீ. அவர்கள் மிக அழகாகச் சொன்னார். ‘‘இசைத் தட்டில் பாட்டைப் பதிவு செய்கிறோம். அது வெறும் வரியாகத்தான் இருக்கிறது. அதற்காக, ‘அய்யய்யோ, மொழியே காணாமல் போய்விட்டது, காணாமல் போய்விட்டது’ என்று சொன்னால், மொழி எங்கே என்று கேட்கும்போது, “வரி வரியாகப் போயிற்று; வரி வரியாகப் போயிற்று’’ என்று சொல்வது எவ்வளவு அறியாமையோ, அல்லது தெரிந்துகொண்டு பேசினால் எவ்வளவு அகம்பாவமோ, எவ்வளவு அவதூறோ அதேபோலத்தான்’’ என்றார்.
தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தம் இன்றைக்குத் தந்தை பெரியாரால்தான் வந்திருக்கின்றது.
அந்த வாய்ப்பை வேறு யாரும் செய்யவில்லையே!
இன்னொரு கேள்வியையும் உங்கள் மூலமாக மற்றவர்களிடம் கேட்கிறேன்.
பாமர மக்களுக்கு விளங்கும்படியாக….
‘‘கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி’’ என்று சொல்கிறார்களே, கல்தோன்றி, மண் தோன்றாக் காலம் என்பது எது?
ஆதிகாலம் என்று சொல்கிறீர்கள், அதைத்தான் காட்டுமிராண்டிக் காலம் என்று பச்சையாக, பாமர மக்களுக்கு விளங்கும்படியாகச் சொல்வார் தந்தை பெரியார்.
காட்டுமிராண்டிக் காலத்து மொழி, அது திருத்தப்படவேண்டும், வளர்ச்சியடையவேண்டும்; மாற்றமடையவேண்டும் என்ற கருத்தில் எடுத்துச் சொன்னார்.
உலகம் முழுவதும் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் பரவியிருக்கின்றது
அதை எடுத்துச் சொன்னதோடு நிறுத்தவில்லை. தன்னுடைய ஏட்டில் அதனை நடைமுறைப்படுத்தினார். நடைமுறைப்படுத்திய பிறகுதான், இன்றைக்கு உலகம் முழுவதும் அந்த எழுத்துகள் பரவியிருக்கின்றன.
‘விடுத‘லை’’ என்று ‘லை’யைப் போட்டோம்; ‘கை’யை எப்படி போடுகிறீர்களோ, அதேபோல ‘லை’யை எழுதுங்கள் என்றோம்.
ஏன், யானைக்குத் துதிக்கையை மாட்டியதுபோல், வளர்த்துகிறீர்கள் என்று சொன்னோம்.
ஆகவே, அந்த வாய்ப்புகளைப் பெரியார் செய்தார்.
எனவே, தமிழ்க் காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னார் என்று இன்றைக்கு யார் சொல்கிறார்கள்?
தமிழ் நீஷபாஷை என்று சொன்னார்கள்!
செத்த மொழியான சமஸ்கிருதம் புனித மொழி. அதுதான் சடங்கு, சம்பிரதாயங்களுக்கு, கோவிலுக்கு. அது தேவபாஷை என்பவர்கள்தான் இன்றைக்கு அவதூறு செய்கிறார்கள். தமிழ் நீஷபாஷை என்று சொன்னார்கள்.
தேவ பாஷை, நீஷ பாஷை என்று பிரிக்காதே! எல்லாம் மொழியும், மொழிதான்.
மக்களால் அதிகம் பேசப்படும் மொழியான தமிழ், செம்மொழி என்று கலைஞரால் ஆக்கப்பட்ட பிறகுதான், இந்திய அரசாங்கம் ஓராண்டு கழித்து, வடமொழியான சமஸ்கிருதத்தை செம்மொழியாக்கியது.
இந்தத் தகவல்களையெல்லாம் மறைத்துவிட்டு, சாதாரண பாமர மக்களிடம் உணர்ச்சியை உண்டுபண்ணுவதற்காக, ‘‘தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னார்’’ என்று சொல்கிறார்கள்.
உண்மையாகத் தமிழை வளர்க்கக் கூடியவர்கள் எவரும் குறை சொல்லவில்லை!
தமிழ் மொழியை வைத்து சில பேர் வியாபாரம் செய்தார்கள். சில பேர் ஓட்டு வாங்குவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் சொன்னதுபோன்றும் பயன்படுத்துகிறார்கள். அதற்காகத்தான் இந்த அவதூறைப் பெரியார்மீது சொல்கிறார்களே தவிர, பெரியாருடைய கருத்தை, உண்மையான தமிழறிஞர்கள், தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள், உண்மையாகத் தமிழை விரும்பக் கூடியவர்கள்; உண்மையாகத் தமிழை வளர்க்கக் கூடியவர்கள் எவரும் குறை சொல்லவில்லை.
அரசியலுக்காக தூண்டிவிடப்பட்ட சில எடுபிடிகள், அம்புகள்தான் அவை. அவற்றால் பெரியாரை எதுவும் செய்ய முடியாது.
தந்தை பெரியாரின் விளக்கம்!
பெரியார் தம்முடைய ஆக்கரீதியான பணி என்ன என்பதைப்பற்றி அவரே விளக்கம் சொல்லியிருக்கிறார்.
‘‘காட்டுமிராண்டி காலத்து மொழி என்று நான் தெளிவாகச் சொன்னேன். இதை புலவர்கள் நடையில் சொன்னால், ‘கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு’ என்று சொன்னதை, கொஞ்சம் பச்சையாக பாமர மக்களுக்கு விளங்கும்படியாகச் சொன்னால், ‘அந்த காட்டுமிராண்டி கால மொழியான தமிழைக் கொஞ்சம் திருத்தவேண்டும்’’ என்று சொன்னார்.
அதற்குப் பெரியார் அவர்கள் உதாரணத்தையும் சொல்லியிருக்கிறார்.
மிகவும் பழைமையான வீடு என்றால், அதற்கு என்ன அர்த்தம்? எந்த நேரம் இடிந்து விழுந்துவிடுமோ என்று தெரியாது. அந்தக் கட்டடத்தை மராமத்துச் செய்யவேண்டும்.
புராணக் கட்டடங்களைப் பாதுகாக்கவேண்டும் என்றால், அதில் கையே வைக்கக்கூடாது என்று சொல்லக்கூடாது. பெரியார் கையை வைக்கவேண்டும் என்று சொன்னார். அதற்காக அந்த வார்த்தையைச் சொன்னார். அந்த மாற்றத்தை உண்டாக்கினார். அதுதான் தமிழை வளர்க்கும். பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தம் மக்கள் மத்தியில் பரவியது.
பெரியார் அவர்கள், தமிழுக்காகப் பாடுபட்டதினால், அதிலிருந்து எடுத்துப் பயன்படுத்தலாமா? என்று சில அரசியல் வியாபாரங்கள் நினைக்கிறதே தவிர, வேறொன்றுமில்லை.
உங்களுடைய ஆஸ்திரேலிய பயணம்பற்றி கூறுங்கள்?
கேள்வி: நீங்கள் முதல் முறையாக ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கிறீர்கள்; உங்களுடைய ஆஸ்திரேலிய பயணம்பற்றி கூறுங்கள்?
தமிழர் தலைவர்: ஆஸ்திரேலிய நாடு வளர்ச்சியடைந்த நாடு. மனிதநேயத்தை இங்கு மிக அதிகமாகக் கடைப்பிடிக்கிறார்கள்.
பெரியார் – அம்பேத்கர் சிந்தனை அமைப்பு மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது!
காலையில் கடையைத் திறந்ததிலிருந்து, இரவு மூடும்வரை குடும்பத்தோடு இருக்கின்ற உணர்வுகள். நான் இங்கே வந்து எதையும் பெற்றுக்கொண்டு போக வரவில்லை. கற்றுக் கொண்டு போவதற்காகத்தான் வந்திருக்கின்றேன். இங்கே பெரியார் – அம்பேத்கர் சிந்தனை அமைப்பு மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
பெரியார், அம்பேத்கர் இருவருமே சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணடிமை நீக்கம் இந்தத் தத்துவங்களுக்காகப் பாடுபட்டனர். அவர்களுடைய காலத்தில், அவர்கள் கொடுத்த கருத்தாக்கம் இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் பரவுகிறது.
அய்யாயிரம் ஆண்டுகால நோய்!
சற்று நேரத்திற்கு முன்பு நண்பர் அவர்கள் கேட்டதுபோன்று, இன்னமும் அந்த நோய் இருக்கிறது; ஏனென்றால், அய்யாயிரம் ஆண்டுகால நோய் இது. இல்லை என்று நான் மறுக்கவில்லை. நோய் வரும், அந்த நோயை சரி செய்கின்ற வாய்ப்பும் இருக்கிறது.
இப்போது கோவிட் தொற்று வந்தது. அதற்காக மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் எல்லாம் நீர்த்துப் போய்விட்டன; மருத்துவர்களுக்கே வேலை இல்லாமல் போய்விட்டதென்று சொல்ல முடியாது. மருத்துவர்களுக்கு இன்னும் அதிகமான பணிகள்தான் இருக்கும்.
பெரியார் மேலும் தேவைப்படுகிறார்!
அதுபோன்று, சீர்திருத்தக்காரர்களுக்கு, பெரியாரின் தேவை இன்னும் அதிகமாகும். பெரியார் மேலும் தேவைப்படுகிறார்.
அதேபோன்று, இங்கே அண்மைக்காலத்தில் நாங்கள் கேள்விப்பட்டோம்.
1929 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குச் சென்றபோதே, தந்தை பெரியார் அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளிலிருந்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் எந்த நாட்டிற்குப் போகிறார்களோ, அந்த நாட்டில் தங்கள் கலாச்சாரத்தை, தங்கள் பண்பாட்டைப் பாதுகாக்கவேண்டும். அதேநேரத்தில், அந்த நாட்டின் குடிமக்களாகவும் அவர்கள் ஒன்றிப் போகவேண்டும்.
இன்னமும், அங்கே ஒரு கால், இங்கே ஒரு காலை வைத்துக்கொண்டிருந்தால், நீங்கள் எங்குமே வேரூன்றியவர்களாக இருக்க முடியாது.
அதுபோன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் எத்தனையோ காரணங்களுக்காக இங்கே வந்திருக்கின்றார்கள். சிலர் வேலைக்காக வந்திருக்கின்றார்கள்; சிலர், அவர்களுடைய நாட்டில் வாழ முடியாத சூழல் இருப்பதினால் இங்கே வந்திருக்கிறார்கள்.
‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்!’’
இப்படி வந்த தமிழர்கள் ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்ற அடிப்படையில் அவர்கள் வந்து இங்கே வாழுகின்றார்கள், தோல் கருப்பாக இருக்கிறதா? வெள்ளையாக இருக்கிறதா? என்கிற பேதமில்லை. இரண்டு பேரும் மனிதர்கள்.
ஒரு காலத்தில் எப்படி இனவெறியைக் காட்டினார்களோ, எப்படி சில இடங்களில் மதவெறியைக் காட்டினார்களோ, அதுபோன்று இப்போது ஜாதி வெறி இந்த நாட்டினுள் நுழைந்து கொண்டிருக்கிறது.
பிறப்பு வேறுபாட்டினால்தான்!
எப்படி எங்கோ ஒரு நாட்டில் ஆரம்பித்த கோவிட் தொற்று, மளமளவென்று உலகம் முழுவதும் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடிக்கக் கூடிய அளவிற்குப் பேராபத்தாக முடிந்ததோ, அதுபோன்றதுதான் ஜாதி, பெண்ணடிமையுமாகும்.
ஜாதி, பெண்ணடிமை இரண்டையும் எடுத்துக் கொண்டால், பிறப்பு வேறுபாடே அவற்றுக்கு அடிப்படை.
சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் ஆரம்பித்ததே, பிறவி பேதம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்.
இங்கேயும் மனுதர்மத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள்!
மானுடப் பரப்பு என்பது உலகளாவிய பரப்பாகும். அப்படி இருக்கையில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில், இங்கே வந்து குடிமக்களாக இருக்கின்ற நேரத்தில், இங்கே மனுதர்மத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள்.
ஜாதியை நியாயப்படுத்தி, ஜாதிப் பிரிவை வேறு ஏதோ தத்துவம் என்று சொல்லி, வருணாசிரம தர்மம் என்று சொல்லி, வரவேண்டிய நேரத்தில் வந்தததினால், நோய் வருவதற்கு முன், அதற்குரிய மருந்துகள் தயாராக இருக்கவேண்டும். அதற்கான மருந்துதான் பெரியாரும், அம்பேத்கரும்.
ஆகவேதான், அந்த செய்திகளை இந்த ஆஸ்திரேலிய மக்களிடையே, ‘‘நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள்; எங்கள் நாட்டில் அதனால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் சொந்த நாட்டில் அவதிப்பட்டுத்தான், இங்கே வந்திருக்கிறீர்கள். ஆகவே, உங்கள் வாழ்க்கை இங்கே சிறப்பாக இருக்கவேண்டும் என்றால், எந்தப் பிரிவினை உணர்வும், மானுடப் பிரிவு உணர்வும் இல்லாமல் இருக்கவேண்டும்.
‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்கிற உணர்வோடு இருக்கவேண்டும்.
எதை விட்டுவிட்டு வரவேண்டுமோ அதை விட்டுவிட்டு நீங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்!
இங்கே நுழைகின்ற ஆபத்துகளை எல்லாம் வளரவிடாமல் செய்வதற்குப் பெரியார் தேவைப்படுகிறார்; அம்பேத்கர் தேவைப்படுகிறார். அவர்களுடைய கருத்துகள் தேவைப்படுகின்றன என்பதை வலியுறுத்தி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்காகவும், இங்கே இருக்கக்கூடிய வாழ்க்கை முறையைக் கற்றுக்கொண்டு போவதற்காகவும் எனது பயணம் அமைந்துள்ளது.
அதேநேரத்தில், நீங்கள் வந்த இடத்தில், எதை விட்டுவிட்டு வரவேண்டுமோ அதை விட்டுவிட்டு நீங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
இங்கே வந்து வேற்றுமைப்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது. வாய்ப்புக் கிடைக்கும்போது, அவர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி, அவர்களுடைய வாழ்க்கையை வளப்படுத்தவேண்டும் என்ற உரிமையோடு பிரச்சாரத்தைச் செய்து, இந்த நேரத்தில், சமூகமான சகோதரத் தத்துவத்தோடு நீங்கள் வாழவேண்டும்.
அதேநேரத்தில், உங்கள் பண்பாட்டை, தனித்தன்மையை இழக்கவேண்டிய அவசியம் இல்லை.
பண்பாடு என்பது அவரவர்களுக்குத் தனிதான். எல்லோரும் ஒரே மாதிரியான உணவைச் சாப்பிடுங்கள் என்று சொல்ல முடியாது. எல்லோரும் ஒரே மாதிரியான உடை அணியவேண்டும் என்றும் சொல்ல முடியாது.
பண்பாடு என்பது வேறு. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நம்முடைய பண்பாடு.
‘‘யுனிட்டி இஸ் நாட் யுனிபார்மிட்டி’’
அதேநேரத்தில், அண்ணா அவர்கள் அழகாக ஓர் உதாரணம் சொன்னார். ‘‘யுனிட்டி இஸ் நாட் யுனிபார்மிட்டி’’ – ‘‘அய்க்கியம் என்பது இருக்கிறதே, அது சீர்மையல்ல’’ என்றார்.
ஆகவே, அந்த மாதிரியான உணர்வுகளைப் பரப்புரை செய்யவேண்டும். தோழர்களைப் பார்க்கவேண்டும்.
வெளிநாட்டிலிருந்து வரக்கூடியவர்களுக்கு, ஒரு தனி அமைப்பு!
உங்களைப் போன்றவர்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். வெளிநாட்டிலிருந்து வரக்கூடியவர்களுக்கு, ஒரு தனி அமைப்பை இந்த அரசாங்கம் ஏற்பாடு செய்து, அவர்களுடைய பண்பாட்டையும், அவர்களைப்பற்றி பேசக்கூடிய அளவிற்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இவ்வளவு விரிவான வாய்ப்பு சொந்த நாட்டில் இருக்கிறதா, என்பது ஒரு கேள்விக்குறி எங்களுக்குள்.
ஆனால், அந்த நாட்டைப்பற்றி இப்போது பேசுவது என்னுடைய வேலை இல்லை.
ஆகவே, நிறைய செய்திகளைக் கற்றுக்கொள்வ தற்காக இங்கே வந்திருக்கின்றோம். கற்றுக் கொடுக்கவேண்டியவற்றை, கற்றுக் கொடுக்கவும் வந்திருக்கின்றோம்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.