பெரியாரை உலக மயமாக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்!
ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் அழைப்பினை ஏற்று, சிங்கப்பூர் வழியாகக் கடந்த மார்ச் 12 அன்று ஆஸ்திரேலியா சென்றிருந்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி, பிரிஸ்பேன், கோல்ட்கோஸ்ட், கேன்பெர்ரா, மெல்போர்ன் ஆகிய பெரு நகரங்களில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த உலக மகளிர் நாள் விழாக்களிலும், சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பிலும் பங்கேற்று, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகளை எடுத்துவைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்வுகளில் ஆஸ்திரேலியாவின் இந்நாள், மேனாள் நாடாளுமன்ற உறுப் பினர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்று உரையாற்றினர்.
இப் பயணத்தின் போது வெவ்வேறு நகரங்களில் நான்கு வானொலிகளுக்கும், ஒரு தொலைக்காட்சிக்கும் நேர்காணல் வழங்கி, அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதி களிலிருந்தும் குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர். சென்ற நகரங்களிலெல்லாம் விமான நிலை யங்களுக்கு வந்திருந்து சிறப்பான வரவேற்பை வழங்கினர். இப் பயணத்தின்போது, ஆஸ்தி ரேலியாவின் நாடாளுமன்றத்திற்கும், நூலகங்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்று வந்தார்.
வெற்றிகரமாக ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (29.03.2025) இரவு 10.30 மணிக்கு சிங்கப்பூர் வழியாகச் சென்னை வந்தடைந்தார்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடை பெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று உரையாற்றிய திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் வழியாக நேற்று முன் தினம் சென்னை வந்தடைந்தார்.
ஆசியா, வடஅமெரிக்கா, அய்ரோப்பா, ஆப்ரிக்கக் கண்டங்களில் தந்தை பெரியார் இயக்கத்தின் தாக்கமும், பெரியார் கொள்கை பரப்பும் அமைப்புகளும் நாற்பதாண்டு களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் இந்தப் பயணத்தின் மூலம் மற்றொரு முதன்மையான கண்டமான ஆஸ்திரேலியாவில் பெரியாரின் கொள்கைப் பயிர் நடப்பட்டுள்ளது.
“பெரியார் உலகமயம்; உலகம் பெரியார் மயம்” என்னும் நோக்கில், பெரியாரை உலகம் முழுக்கக் கொண்டு செல்லும் பணி யில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆஸ்திரேலியப் பயணம் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.