திருபத்தூர், மாச் 29- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தோழர் மரு. வீ. வினோதினி எழுதிய ஏ. பி. பெரியசாமி புலவர் வாழ்வும் – பணியும் என்ற புத்தகம் ,திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் 26.03.2025 மாலை 6.30 மணி யளவில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைப்பெற்ற நான்காம் ஆண்டு புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்டது.
இப் புத்தகத்தை திரைப்பட பாட லாசிரியர் கவிஞர் யுகபாரதி வெளியிட திருப்பத்தூர் மாவட்ட கழக தலைவர் கே.சி.எழிலரசன் பெற்றுக் கொண்டார்.
மரு. வீ. வினோதினி
மரு. வீ. வினோதினி தனது புத்தக அறிமுக உரையில், ஏ.பி.பெரியசாமி புலவர் மார்ச் 14, 1881இல் திருப்பத்தூரில் பிறந்தார். 1907ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கானவர்களோடு பவுத்தத்தைத் தழுவினார். கோலார், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருபத்திரெண்டு பவுத்த மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தினார். 1922இல், திருப்பத்தூரில் பவுத்த விகாரை நிறுவினார். அயோத்திதாசர் நடத்திய தமிழன் இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். 1920-ல் நேட்டால் டர்பன் பவுத்த சங்கம் தோன்றுவதற்கு, அயோத்திதாசரின் மகன் ராஜாராம் அவர்களுக்கு துணைநின்றார். நேட்டாலுக்குச் சென்று அங்கே பவுத்த சங்க விழாவில் கலந்துகொண்டார். பின்னர் தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழக ஆதரவாளராக அவரோடு இணைந்து செயல்பட்டவர். என்று தனது அறிமுக உரையில் குறிப்பிட்டார்.
மேலும் இப் புத்தகத்தில் பெரியசாமி புலவர் பெண்கள் ரவிக்கை அணிவது, பெண்களுக்கு இரவு பாடசாலை அமைத்தது,திருப்பத்தூரில் உள்ள பகுதிகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களின் பெயரை சூட்டப்பட்ட காரணம் உள்ளிட்ட பல்வேறு தகவல் களை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பழைய வரலாறுகளை நினைவூட்டும் வகையில்
மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தனது ஏற்புரையில் மருத்துவர் வினோதினி, சிறந்த பகுத்தறிவாளர், சிறந்த கண் மருத்துவர், இப்போது ஒரு சிறந்த எழுத்தாளராக இந்த நூலை வெளியிட்டு உள்ளார்.அவர் புத்தகம் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நம் கழக இயக்கப் பணிகளுக்கு பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருப்பவர். அவர் எழுதிய இப்புத்தகம் இக் கால இளைஞர்களிடம் பழைய வரலாறுகளை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. அவர் எழுத்துப் பணி மேலும், மேலும் சிறக்க வேண்டும் என்று பாராட்டி பேசினார்.
கவிஞர் யுகபாரதி
கவிஞர் யுகபாரதி தனது உரையில் சமூக நீதிக்காவும், சமத்துவத்திற்காவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியாரின் கருஞ்சட்டை தோழர்கள் மத்தியில் இந்த புத்தகத்தை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஏ. பி. பெரியசாமி புலவர் எனக்கு அறிமுகம் தான். இங்கே மருத்துவர் வினோதினி குறிப்பிட்டது போல் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.
மேலும் அவர் தன் உரையில் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். மதிப் பெண்ணுக்கு மட்டும் படிக்கும் படிப்பு போதும் என்று நினைக்காமல், அனைத்து விதமான புத்தகங்களையும் வாசிக்க வேண்டும்.இப்போது பொது தேர்வு நடைப்பெற்று வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகள்யிடம், நீ முதல் மதிப்பெண் எடுத்தால் தான் உனக்கு எதிர்காலம் என்று எதிர்காலத்தின் மீதும் தேர்வு மீதும் பயத்தை உருவாக்க கூடாது.
இந்த பயத்தினால் குழந்தைகள் தற்கொலை வரைக்கும் செல்லுகிறார்கள்.இப்போது நீட் தேர்வு வரப்போகிறது.அதில் பங்கேற்க போகும் ஒவ்வொரு மாணவர்களின் முகத்தை பாக்கும் போது எனக்கு பயம் வருகிறது.தேர்வுக்குப் பிறகு அவர்கள் முகத்தை பார்க்க முடியுமா ?என்று.இத்தகைய தேர்வு முறைகளை ஒழிக்க வேண்டும். குழந்தை பருவத்தில் இருந்து அனைத்து விதமான புத்தகங்களையும் வாசிக்க பழக்கப் படுத்துங்கள். அவைகள் தான் இத்தகைய மன அழுத்தங்களிலிருந்து அவர்களை தற்காத்துக் கொள்ளவும்,எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் அவர்களிடத்தில் தன்னம்பிக்கை பிறக்கவும் உதவும்.என்று உரையாற்றினார்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில், பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மகளிரணி பொருளாளர்
எ. அகிலா, மாவட்ட துணைத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.ஏ. சிற்றரசன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ. டி. சித்தார்த்தன், நகரத் தலைவர் காளிதாஸ், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ஞானம், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ. புரட்சி, விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம். என். அன்பழகன், மாவட்ட எழுத்தாளர் மன்றத் தலைவர் நா. சுப்புலட்சுமி, மாவட்ட மகளிரணி தலைவர் இரா. கற்பகவல்லி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயா அன்பழகன்,கந்திலி ஒன்றியத் தலைவர் பெ. ரா. கனகராஜ், கந்திலி ஒன்றியச் செயலாளர் இரா. நாகராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோ. திருப்பதி, சோலையார்பேட்டை நகர அமைப்பாளர் இராஜேந்திரன், நகர செயலாளர் ஏ. டி. இந்திரஜித், தொழிலாளரணி ஆலோசகர் அக்ரி அரவிந்த், தொழிலாளரணி அமைப் பாளர் க. முருகன், நகர இளைஞரணி செயலாளர் கா.நிரஞ்சன் ஆகியோர் பங்கேற்றனர்.