மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 29- தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்த நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. பேசியதாவது:-
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1,100 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கும் வகையில், நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாகுபாடு காட்டக் கூடாது. இதேபோல, 2024-2025ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு, செலவு திட்டத்தை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒன்றிய அரசு ரூ.2,152 கோடி நிதியை தமிழ்நாடு அரசுக்கு வழங்காமல் மும்மொழி திட்டத்தை பற்றி பேசுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கை எங்களுடையது. இந்த கொள்கை எங்கள் மாணவர்களை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால்
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அதிக வலிமை பெறும்
செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை, மார்ச் 29- அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மேலும் வலிமை அடையும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார்.
சத்தியமூர்த்தி நினைவு நாள்
தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் சத்தியமூர்த்தியின் 83ஆவது நினைவு நாள் நேற்று (28.3.2025) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசியது அநாகரிகமான செயல். இதை நான் மிகவும் வன்மையாக ஏற்கெனவே கண்டித்து விட்டேன். கருத்துரிமை, பேச்சுரிமை என்பது எல்லோருக்கும் உள்ளது. ஆனால் எல்லை மீறி செயல்படக் கூடாது. கைவீசி நடக்கலாம். ஆனால், அடுத்தவர் மூக்கில் கைப்படும்படி நடக்கக் கூடாது.
மேலும் வலிமை சேர்க்கும்
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. – பா.ஜனதா கூட்டணி அமைந்தால் தி.மு.க.- காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கு சவாலாக இருக்குமா என்கிறீர்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. அவ்வாறு அ.தி.மு.க. – பாஜக கூட்டணி அமைந்தால் அது இந்தியா கூட்டணிக்கு மேலும் வலிமை சேர்க்கும். தமிழ்நாடு மக்கள் பா.ஜனதாவை நன்கு புரிந்துள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை தராமல் இருப்பதையும், மும்மொழிக்கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இலங்கை அகதிகள் விவகாரத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தை செயல்படுத்துவதாக கூறும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வக்பு வாரிய சட்டத்தில் மட்டும் திருத்தம் கொண்டு வருவது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி.மனோகரன். மாநில துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கே.விஜயன் மாநில செயலாளர்கள் அடையாறு பாஸ்கர், சுரேஷ் பாபு, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன் உள்பட பல கலந்து கொண்டனர்.