தமிழ்நாட்டில் அமைதிப் பூங்காவாக ஆட்சி நடப்பதற்கும், மதக்கலவரம் இல்லாமல் இருப்பதற்கும் பெரியார் கொள்கைகள்தான் காரணம்!
ஆஸ்திரேலியா- சிட்னி எஸ்.பி.எஸ். ஒலிபரப்பிற்குத் தமிழர் தலைவர் பேட்டி
சிட்னி, மார்ச் 29 தேர்தலில் ஜாதி வெறியைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டத்தில் எழுதி வைத்திருக்கின்றார்கள். நடைமுறையில், அதை செயல்படுத்தவில்லை. மதவெறியைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூட இருக்கிறது. ஆனால், தேர்தலில் மதவெறியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டில் அமைதிப் பூங்காவாக ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதற்கும், மதக்கலவரம் இல்லாமல் இருப்பதற்கும் பெரியார் கொள்கைகள்தான் காரணம். திராவிட இயக்கத்தில் ஜாதி வெறிக்கு இடமில்லை. அப்படி யாராவது ஜாதி வெறியோடு இருந்தால், அவர்கள் உண்மையான திராவிட இயக்கத்தினர் அல்ல; உண்மையான இயக்கப் பற்றாளர்கள் அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
எஸ்.பி.எஸ். ஒலிபரப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்
ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 15.3.2025 அன்று சிட்னியில் உள்ள SBS ஒலிபரப்பிற்குப் பேட்டியளித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து ரைசல் என்று அழைக்கப்படுகின்ற ரேமண்ட் செல்வராஜூம், குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள்.
அவர்களது உரையாடலின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பெரியார் கொள்கைகள் நீர்த்துப் போய்விட்டதா?
கேள்வி: சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, இன அடை யாளம் எல்லாம் பெரியாரிய கொள்கை, திராவிடக் கொள்கை என்று சொல்லலாம். ஆனால், இப்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற முறையைப் பார்த்தால் அல்லது அரசியல் வெளி யில் பார்த்தால், இவையெல்லாம் நீர்த்துப் போன கொள்கைகளாகப் படவில்லையா, உங்களுக்கு?
தமிழர் தலைவர்: நிச்சயமாக இல்லை. காரணம் என்னவென்றால், நீர்த்துப் போனதாக இருந்தால், ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்குத் தமிழ்நாட்டு அரசினுடைய மிக முக்கியமான பதவிகளில், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.,களாக இருக்க இயலுமா?
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தலைமைச் செயலாளராக இருக்கிறார். இச்சமுதாயத்தி லிருந்து நீதிபதிகள் வந்திருக்கிறார்கள், இப்போதும் வருகிறார்கள்.
பெரியாருடைய சமூகநீதி நீர்த்துப் போயிருந்தால், முன்பைவிட இதுபோன்ற பதவிகளில் உயர்ஜாதியினர் நூற்றுக்கு நூறு அதிகமாகியிருக்கவேண்டும்.
அந்த நிலை இல்லை. பெரியாருடைய சமூக நீதியை நீர்த்துப் போகச் செய்யவேண்டும் என்று முயற்சிக்கி றார்கள்.
நீங்கள் சொல்ல வருவது என்னவென்றால், ஜாதி ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடந்தபோதும், ஜாதீய உணர்வு தலை தூக்கி இருக்கிறது என்பதுதான். ஜாதிய ஓட்டுகள் வாங்குகிறார்கள் என்றால், தேர்தல் முறைக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள்.
ஜாதிப் பட்டங்களை நீக்க தீர்மானம் போட்டவர் பெரியார்!
1929 ஆம் ஆண்டில்தான் பெரியார் அவர்கள், ஜாதிப் பட்டங்களை நீக்கவேண்டும் என்று சொன்னார். முதன்முதலாக செங்கல்பட்டு மாகாண மாநாட்டில் தீர்மானம் போட்டார்கள்.
ஜாதிப் பட்டம் இல்லாத தலைவர்கள் இருக்கின்ற ஒரு மாநிலம் என்று சொன்னால், அது தமிழ்நாடாகத்தான், இன்றைக்கும் இருக்கிறது. வடநாட்டில் பார்த்தீர்களேயானால், கம்யூனிஸ்ட் கட்சியில்கூட அவர்களுடைய பெயர் ஜாதிப் பெயர்கள், பட்டங்களோடுதான் இணைந்தி ருக்கின்றன.
தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை. ஜாதி என்பது அய்யாயிரம் ஆண்டு பிரச்சினை யாகும்.
பெரியாருடைய தொண்டு என்பது சாதாரணமான ஒன்றல்ல!
அம்பேத்கர் அழகாகச் சொன்னதுபோன்று, அது ஒரு கட்டடம் அல்ல; சம்மட்டியைக் கொண்டு போய் அடித்து உடைப்பதற்கு. அது மனதில் உள்ள ஒரு கருத்தோட்டம். அந்தக் கருத்தோட்டத்தை ஒழிக்கவேண்டும் என்பதற்கா கத்தான், மிகப்பெரிய அளவிற்கு பாடுபடவேண்டும். அதற்காக நூறாண்டுகளில், சுயமரியாதை இயக்கம், பெரியாருடைய தொண்டு என்பது சாதாரணமான ஒன்றல்ல.
இந்த நூறாண்டில், அண்ணா அவர்கள் சொன்னது போன்று, ‘‘Putting Centuries into a Capsules’’- ‘‘பல நூற்றாண்டுகளை ஒரு குப்பிக்குள் அடைப்பது’’ போல, தந்தை பெரியாருடைய தொண்டு அமைந்திருந்தது.
அதுபோன்று, பெரியாருக்கு முன் -பெரியாருக்குப் பின்!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு இந்த ஆண்டு. 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
இன்றைக்கு ஜாதி சங்கங்களை வைத்துக்கொண்டு, ஜாதி அடிப்படையில் ஓட்டு சேகரிக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள்கூட, தங்களுடைய தலைவர்களின் பெயருக்குப் பின்னால், ஜாதிப் பட்டத்தைப் போடுவதில்லை, தமிழ்நாட்டில்.
பெரியாருடைய கொள்கை நீர்த்துப் போயிருந்தால், பெண்கள் முன்னேற்றம் அடைந்திருக்கமாட்டார்கள்!
இன்றைக்கு சமூகநீதிக்கு அளவு தேவை என்று ஜாதியை ஓர் அடையாளத்திற்குப் பயன்படுத்து கிறார்களே தவிர, வேறொன்றுமில்லை. இதனால் பெரியாருடைய கொள்கைகள் நீர்த்துப் போனதாக அர்த்தம் இல்லை.
அப்படி பெரியாருடைய கொள்கை நீர்த்துப் போயிருந்தால், தந்தை பெரியார் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே இந்த அளவிற்கு எதிரிகள் அலற மாட்டார்கள்.
பெரியாருடைய கொள்கை நீர்த்துப் போயிருந்தால், இன்றைக்கு இந்த அளவிற்குப் பெண்கள் முன்னேற்றம் அடைந்திருக்கமாட்டார்கள்.
கேள்வி: 20 ஆண்டுகளுக்குமுன்பு, பெரியார்மீது இவ்வளவு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது இல்லை. இப்போதுதான் அதிகமான விமர்ச னங்கள், அதிகமான கல்லெறிதல் நடைபெறு கின்றனவே?
தமிழர் தலைவர்: பெரியார்மீதான விமர்சனங்கள் வளர வளர, அவை அவர்மீது போடுகின்ற உரம்.
பல தலைவர்களின் பிம்பங்கள் இன்றைக்கு இல்லை, மறைந்து போய்விட்டன. ஆனால், பெரியாரை இன்னமும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்களே, என்கிற ஆத்திரத்தில், இன எதிரிகள், அவதூறு செய்கிறார்கள்.
அவதூறுகள் வேறு; விமர்சனங்கள் என்பது வேறு!
ஒரு திருத்தம், அவர்மீது விமர்சனம் வைக்கவில்லை. அவதூறு செய்கிறார்கள். அவதூறுகள் வேறு; விமர்ச னங்கள் என்பது வேறு.
விமர்சனத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இன எதிரிகள் அவதூறைப் பரப்புகிறார்கள். அப்படி அவதூறைப் பரப்பியாவது பெரியாரை இருட்டடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
எந்தக் காலத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பில், பெரியாருடைய பெயரைச் சொல்லி எழுதியிருக்கி றார்கள்?
உயர்நீதிமன்ற நீதிபதிகள்!
அதேபோன்று, காந்தியார் எப்படி இந்தியாவுக்கோ, அதுபோன்று தமிழ்நாட்டிற்குப் பெரியார் என்று உயர்நீதி மன்ற நீதிபதிகள் சொல்லியிருக்கின்றார்.
காரணம், உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, இதற்கு முன் உயர்ஜாதிக்காரர்கள்தான் இருந்தார்கள்; ஆதிக்க ஜாதியினர்தான் இருந்தார்கள்.
இன்றைக்கு சமூகநீதியை உணர்ந்தவர்கள் இருக்கி றார்கள்; இன்னமும் நியமனங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அதிகாரத் துறை, நிர்வாகத் துறை இருக்கிறது.
அங்கே இருக்கின்ற தேர்தல் முறையில், ஜாதி அமைப்பு இருப்பதால், அதைப் பயன்படுத்தவேண்டும் என்று, தேர்தல் காலகட்டத்தில் இலவசங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதுபோன்று, அது ஒரு வாய்ப்பு என்று அவர்கள் பயன்படுத்துகிறார்களே தவிர, அதற்காக பெரியார் கொள்கைகள் நீர்த்துப் போய்விட்டது என்று சொல்ல முடியாது.
பெரியாருடைய கொள்கைகளைக் கண்டு இன்றைக்கும் இன எதிரிகள் அஞ்சுகின்றனர்!
அங்கே இருக்கின்ற மதவெறி சக்திகள், அங்கே இருக்கின்ற ஜாதி வெறி சக்திகள் அவர்களுக்கெல்லாம் கோபம் வருகிறது. பெரியார் 1973 இல் இறந்துவிட்டார். ஆனால், பெரியார் உயிரோடு இருந்த காலத்தைவிட, இன்றைக்கு அவருடைய கொள்கைகளைக் கண்டு இன எதிரிகள் அஞ்சுகின்றனர்.
இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது; உலகம் முழுவதும் விரவியிருக்கிறது!
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தார்கள். ஆனால், இந்த இயக்கம் இன்றைக்கும் இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது; உலகம் முழுவதும் விரவியிருக்கிறது.
மண்டல் கமிசன் வந்தவுடன், தமிழ்நாட்டில் இருந்த வகுப்புரிமை, இந்தியா முழுமையும் பரவக்கூடிய அளவிற்கு வந்தது. ஆகவே, பெரியார் கொள்கைகள் நீர்த்துப் போகவில்லை என்பதற்கு இவைதான் அடையாளம்.
சமூகநீதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப் பெற்றிருக்கின்றார்கள்!
ஜாதி அடிப்படையில் படிக்கக் கூடாது என்று சொன்னார்கள்; ஜாதி அடிப்படையில், இழிவு கற்பித்தார்கள். அந்த இழிவையெல்லாம் போக்கி, சமூகநீதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைப் பெற்றிருக்கின்றார்கள்.
என்னுடைய குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. அதற்கு முன்பு எங்கள் குடும்பத்தில், யாரும் பட்டதாரிகளாக இல்லை. சமூகநீதி இல்லையென்றால், என்னால் பட்டதாரி யாக ஆகியிருக்க முடியாது.
பெண்கள் இன்றைக்கு நீதிபதிகளாக, தலை மைச் செயலாளர்களாக, காவல்துறையில் அதிகாரிகளாக இருக்கிறார்கள் என்றால், அது பெரியாருடைய கொள்கைகளால்தான்.
பெரியாருடைய கொள்கைகள் நீர்த்துப் போயிருந்தால், இந்த அளவிற்குப் பெண்கள் முன்னேறியிருக்க முடியாது.
வழிகாட்டி யார், கலங்கரை வெளிச்சம் யார் என்றால், பெரியார்தான்,
பெரியார் கொள்கைகள்தான்!
பெரியார் கொள்கைகள்தான்!
இந்தத் தத்துவங்களுக்கு அடிப்படை அரசாங்கம் என்றால், அரசாங்கத்திற்கு தத்துவகர்த்தா, வழிகாட்டி யார், கலங்கரை வெளிச்சம் யார் என்றால், பெரியார்தான், பெரியார் கொள்கைகள்தான்.
பெரியார் கொள்கைகள் நீர்த்துப் போனால், எதிரிகள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், பெரியார் கொள்கைகள் நீர்த்துப் போகவில்லை என்பதினால்தான், அவர்கள் ஆத்திரப்படுகிறார்கள். ஆத்திரப்படுவதால், நேரடியாக அவர்களால் விமர்சனம் செய்ய முடியவில்லை. விமர்ச னம் செய்ய முடியாததினால், அவதூறு செய்கிறார்கள்.
கேள்வி: நீங்கள் கூறியதுபோல, உங்கள் இயக்கத்திற்குப் பின் வந்த கட்சிகள், வாக்கு அரசியலில் ஈடுபட்டதினால்தான், முதல் கேள்வி யின் தாக்கமா?
தமிழர் தலைவர்: இல்லை, அதில் இரண்டு இருக்கிறது. அந்தக் கட்சிகளைக் குறை சொல்வதை விட, அந்த அமைப்பு முறையை மாற்றாமல் இருக்கின்ற வர்களைத்தான் குறை சொல்லவேண்டும்.
ஏனென்றால், அரசியலுக்குச் சென்ற திராவிட இயக்கம் வெற்றி பெற்றிருக்கின்றது. திராவிட இயக்கத்தி லும் சில நேரங்களில் அந்த உணர்வுகள் வரவேண்டிய அவசியம் என்றால், அது தேர்தல் போட்டியால்தான்.
அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள், தேர்தலில் நிற்கக்கூடாது என்றார்.
சமரசம் செய்துகொள்ளாமல் அரசியல் நடத்த முடியாது!
கொள்கைப் பிரச்சாரத்தில் நாங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றோமோ, எவ்வளவு வேகமாக இருக்கின்றோமோ அதுபோன்று அரசியல் கட்சிகளுக்குச் சென்றவர்கள் இருக்க முடியாது.
சமரசமில்லாத போக்கு எங்களிடம். ஆனால், சமரசம் செய்துகொள்ளாமல் அரசியல் நடத்த முடியாது.
ஏனென்றால், இந்த நாட்டினுடைய சூழ்நிலை அப்படி. எல்லாவற்றையும்விட தேர்தல் சட்டங்கள்.
தேர்தல் சட்டங்களில் அவ்வளவுக் கோளாறுகள் இருக்கின்றன. தேர்தலில் ஜாதி வெறியைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டத்தில் எழுதி வைத்திருக்கின்றார்கள். நடைமுறையில், அதை செயல்படுத்தவில்லை. மதவெறியைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூட இருக்கிறது. ஆனால், தேர்தலில் மதவெறியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டில் அமைதிப் பூங்காவாக ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதற்கும், மதக்கலவரம் இல்லாமல் இருப்பதற்கும் பெரியார் கொள்கைகள்தான் காரணம்.
ஒரு துளி ரத்தம் சிந்தாமல், மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பது, பெரியாருடைய கொள்கையினால்தான்!
இந்தியா முழுவதும் ரத்தக் களறி இருந்த நேரத்தில், அமைதிப் புரட்சி, திருமண முறைகளில் மாற்றம் எல்லாம் ஒரு துளி ரத்தம் சிந்தாமல், இந்த மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பது, பெரியாருடைய கொள்கையினால்தான்.
ஆகவே, பெரியாருடைய அறிவுப் புரட்சி என்பது அமைதிப் புரட்சியாகும்.
தேர்தல் வித்தைகளில், வெற்றி பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் போட்டி போடுகிறார்கள். வெற்றி பெறுவதற்காக, சமரசம் செய்துகொள்கிறார்கள்.
தேர்தலில் நிற்காத தாய்க்கழகமாக இருந்து அவர்களை வழிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்!
நீங்கள் சொல்வது உண்மைதான், முழுக்க முழுக்க அதை மறுக்கவில்லை. சமரசம் செய்துகொள்கிறார்கள்.
அதுபோன்ற சமரசங்களை செய்துகொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்குத்தான், தேர்தலில் நிற்காத தாய்க்கழகமாக இருந்து அவர்களை வழிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி: தமிழ்நாட்டில் ஆணவக் கொலை, ஜாதீய வன்மங்கள், ஜாதி தொடர்பான கொலைகள், வன்முறைகள் எல்லாம் அதிகரித்துக் கொண்டி ருக்கின்றன என்று நாளிதழ்களில் பார்க்கின்றோம். நீங்கள் சொல்வது போன்று, பெயருக்குப் பின்னால், ஜாதிப் பட்டங்களைப் போட்டுக் கொள்வதில்லை; அதிலிருந்து விடுபட்டு விட்டார்கள் என்று பார்த்தால்கூட, இப்படி ஒரு ஜாதீய வன்முறையின் வீரியம் அதிகரிப்பது என்பது பெரியாரின் கொள்கையின் தோல்வி என்று சொல்ல முடியாதா?
தமிழர் தலைவர்: இந்தக் கேள்வியை நான் வரவேற்கி றேன். ஆனால், அப்படி சொல்ல முடியாது.
விபத்திற்குள்ளான கார்கள் மட்டும்தான் செய்திகளாகின்றன!
காரணம் என்னவென்றால், சாலைகளில் ஏராளமான கார்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், செய்தி எப்படி வருகிறது? விபத்திற்குள்ளான கார்கள் மட்டும்தான் செய்திகளாகின்றன.
அதுபோன்று, ஏராளமான ஜாதி மறுப்புத் திரும ணங்கள், ஏராளமான மத மறுப்புத் திருமணங்கள், ஏராளமான பதிவுத் திருமணங்கள்; ஏராளமான புரோகித மறுப்புத் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. அவற்றையெல்லாம் விளம்பரப்படுத்த முடியாது. அதையெல்லாம் விளம்பரப்படுத்துவதும் இல்லை.
ஆணவக் கொலைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
ஆனால், அங்கொன்றுமாக, இங்கொன்றுமாக ஆணவக் கொலைகள் நடைபெறுவது என்பது உண்மை. அதை நாங்கள் மறுக்கவில்லை. அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அரசாங்கம் இதற்குத் தனிச் சட்டம் போடவேண்டும்; இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சில நீதிமன்றங்களில், குற்றவாளிகளை மேல்முறையீட்டில் விடுதலை செய்கிறார்கள்.
ஆணவப் படுகொலைகளை ஒழிப்பதற்காக இரண்டு வழிமுறைகளைச் சொல்கிறோம். ஒன்று, அதனை எதிர்த்துப் பிரச்சார இயக்கம். இன்னொன்று அரசாங்கம், கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும்; உச்சநீதிமன்றம் வரையில் சென்று அதிகமான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும்.
ஆனால், ஒட்டுமொத்தமான விகிதாச்சாரத்தை எடுத்துப் பார்த்தீர்களேயானால், இதுபோன்று நடப்பது குறைவு என்பது தெரியவரும். விபத்து நடந்தால்தான், அது செய்தியாகிறதே தவிர, பாதுகாப்பாக செல்லுகின்ற கார்கள் எல்லாம் செய்திகளாக ஆவதில்லை.
கேள்வி: அந்த விபத்துகளை எப்படி தவிர்ப்பது?
தமிழர் தலைவர்: தவிர்ப்பதற்காக அரசாங்கத்தை நாங்கள் வற்புறுத்துகின்றோம். நீங்கள் சொல்வதை நான் அறவே மறுக்கவில்லை.பெரியார் இன்றும் ஏன் தேவை?
அதேநேரத்தில், அதைத் தவிர்ப்பது எப்படி என்கிற பிரச்சாரத்தைத்தான் திராவிடர் கழகம் செய்கிறது.
பெரியார் இன்றும் ஏன் தேவை? என்றால், பெரி யாருடைய தேவை அதிகமாக அதிகமாக, இன்னும் பிரச்சாரங்கள் அதிகமானால்தான், ஆணவக் கொலை களைத் தடுக்க முடியும்.
கேள்வி: 50 ஆண்டுகாலமாக, திராவிட கட்சிகளின் ஆட்சிதான் நடக்கிறது தமிழ்நாட்டில்?
தமிழர் தலைவர்: அப்படி சொல்ல முடியாது. ஏனென்று கேட்டால், தனி நபர்களுடைய ஆசையின் தொகுப்பாக, ஒரு சில ஜாதிவெறிக் கட்சிகள் இருக்கின்றன; அவை ஜாதி வெறியைத் தூண்டி விடுகின்றன.
ஜாதி வெறியோடு இருந்தால், அவர்கள் உண்மையான திராவிட இயக்கத்தினர் அல்ல!
ஆனால், திராவிட இயக்கத்தில் அதற்கு இடமில்லை. அப்படி யாராவது ஜாதி வெறியோடு இருந்தால், அவர்கள் உண்மையான திராவிட இயக்கத்தினர் அல்ல; உண்மையான இயக்கப் பற்றாளர்கள் அல்ல.
எல்லா இடங்களிலும் போலி நாணயங்கள், போலிச் சாமியார்கள் இருப்பதுபோன்று, போலிக் கொள்கை வாதிகளாக இருக்கின்றார்கள் என்றுதான் அர்த்தம்.
(தொடரும்)