சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சென்னை, மார்ச் 29– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நேற்று (28.3.2025) நேரமில்லா நேரத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை குறித்து முன்னறிவிப்பு ஏதுமின்றி கேள்வி எழுப்ப முயன்று, அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:–
இந்த அவைக்கும், அவையின் மூலம் நாட்டு மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிய சட்டம்– ஒழுங்கு பிரச்சினைகள் ஏதுமின்றி, மக்கள் அமைதியாக, இணக்கமாக வாழ்கிறார்கள். இதனால்தான் தொழில் முதலீடு,புதிய தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் என தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்தத் திட்டம்!
இந்த நேர்மறையான சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாத சில மாநில விரோத சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய கொலை, கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கி, மக்களை பீதியில் வைக்க இரவு பகலாக மக்களின் பாதுகாப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய தமிழ்நாட்டு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்தத் திட்ட மிட்டிருக்கிறார்கள். அதற்கு பிரதான எதிர்க்கட்சியும் துணைபோகிற வகையில் தூபம் போடுகிறது. சில ஊடகங்களும், பத்திரிகைகளும்சேர்ந்து துணை போவது இன்னும் வேதனை அளிக்கிறது.
தமிழ்நாடு அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தைவிட முடியுமா என துடிக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் எத்தகைய கலவரங்கள் நடைபெற்றன என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோன்ற எந்தக் கலவரமும் இந்த ஆட்சியில் இல்லை. குற்றங்களின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் குறைந்து வருகிறது. புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகள் போடப்படுகின்றன; குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுகிறார்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆளுங்கட்சி யைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது; தண்டிக்கப்படுகிறார்கள்; கைது செய்யப்படுகிறார்கள். இதுதான் உண்மை. இப்படி பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் எடுத்து மக்களை காவல் துறையும், தமிழ்நாடு அரசும் பாதுகாத்து வருகிறது.
தவறான பிம்பத்தை உருவாக்கலாமா?
ஆகவே, சில நேரங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை வைத்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கே சீர்கெட்டு விட்டதாக மக்களை திசைதிருப்புவதற்காகவே வீண் புரளிகளை கிளப்பாமல், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், அவர் கூட்டணி வைக்கக் துடித்துக் கொண்டிருக்கக்கூடிய கட்சியாக இருந்தாலும் ஆக்கபூர்வமான அரசியல் செய்ய முன்வாருங்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் உங்களுடைய அம்மையார் அவர்களின் ஆட்சியிலும் சரி, தற்போது எதிர்க்கட்சித் தலைவரின் முந்தைய ஆட்சியிலும் சரி, இப்போது எங்களது ஆட்சியிலும் நடைபெறும் குற்றச் சம்பவங்களின் தரவுகளை வைத்துத்தான் காவல்துறையின் செயல்பாட்டை அளவிட முடியும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பிட்டசில சம்பவங்களை வைத்து, சட்டம்- ஒழுங்கு குறித்த தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாமென இந்தத் தருணத்தில் ஊடகங்களையும் நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்பு கிறேன்.
அரசின்மீது ஆக்கபூர்வமான குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசியல் செய்வதற்காக தமிழ்நாடு காவல்துறையின் பெயரையும், அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்று இருக்கக்கூடிய பெயரையும் கெடுப்ப தற்குத் துணை போகாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.