கேள்வி 1: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தொழில் தொடங்க அனுமதியும் உடனடியாக வழங்குகிறார்கள். அதற்காக தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டுகிறேன்” என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்றத்தில் பேசி இருப்பது பிஜேபி தலைவர்களின் செவிகளுக்கு எட்டுமா?
– க.அன்புமணி, கலைஞர் நகர்.
பதில் 1: உண்மையை திட்டவட்டமாகக் கூறிய புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்களைப் பாராட்ட வேண்டும்தான்! பி.ஜே.பி.யினருக்கு அந்த வார்த்தைகளைக் காதில் கேட்டால் தாங்கிக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டிற்கு இதுபோன்ற திட்டங்கள் வருவது பா.ஜ.க.விற்கு வயிற்றில் புளியைக் கரைத்துவிடும்! ரங்கசாமியை கரித்துப் பழிக்க மட்டுமே தெரிந்த அவர்களுக்கு பாராட்ட மனமிருக்காது!
– – – – –
கேள்வி 2: மீண்டும் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள அ.தி.மு.க. – பா.ஜ.க.விடம் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதே? இனி அதிமுக நிலை? ரத்தத்தின் ரத்தங்கள் விழித்துக் கொள்வார்களா?
– மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 2: விழித்துக் கொள்ளாவிட்டால் நட்டம் அவர்களுக்கே! “விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்” என்ற வரிகளைப் பாடியவர் யார் என்பது தெரிய வேண்டும் அ.தி.மு.க.வினருக்கு!
– – – – –
கேள்வி 3: டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில், எரிந்த நிலையில் பணம் கைப்பற்றப்பட்டதன் ஒளிப்படம், காட்சிப் பதிவை வெளியிட்டு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு நீதித்துறையின் மீது ஒருவித அவநம்பிக்கையை ஏற்படுத்தும் அல்லவா?
– ரேவதி சுதாகர், புதுச்சேரி.
பதில் 3: அண்மைக் காலத்தில் அதிகமாக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அடாவடி பேச்சுகள். அருவருக்கத்தக்க தீர்ப்புகளையும் அளிக்கும் போக்கு, மக்கள் நம்பிக்கையை இழக்கும் நிலையில் நீதிமன்றங்கள் உள்ளன. நிச்சயம் இழக்கவே செய்யும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகள் கண்டிக்கும் அளவுக்கு வந்துவிட்டதே. அதுபற்றி அலகாபாத் உயர்நீதிமன்றமும் கவலைப்பட்டதே!
– – – – –
கேள்வி 4: தொகுதி மறுசீரமைப்பு செய்யவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் உறுப்பினர் இருக்கைகள் 848 – ஆக ஏன் உயர்த்தப்பட்டுள்ளது? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் அவர்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிப்பார்களா?
– க.குப்புசாமி, விருகம்பாக்கம்.
பதில் 4: இதே கருத்தை – கேள்வியை – தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும்கூட எடுத்துரைத்தேன் – அவர் கேள்வி முக்கியமானதுதான்! ஆர்.எஸ்.எஸின் பழைய திட்டம் என்பதற்கு நல்ல சாட்சியம் அல்லவா?
– – – – –
கேள்வி 5: “இலக்கிய நீதி கேட்கிறேன். ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்?” என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக வினா எழுப்பி இருப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணப் பிரதிபலிப்பு என்பதை உரியவர்கள் உணர்வார்களா?
– க. காமராஜ், செய்யாறு.
பதில் 5: எதையும் உணராத ஆணவக்காரர்களிடம் அவரது கேள்விக்கு நிச்சயம் பதில் கிடைக்க வழியே இல்லை.
– – – – –
கேள்வி 6: மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக்கூடாது என்றும், மேலும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவையுங்கள் என்றும் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த முதல் அமைச்சர்கள் கூட்டுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஒன்றிய அரசு செவிசாய்க்குமா?
– கி. கோவிந்தராஜ், வந்தவாசி.
பதில் 6: மேற்காட்டிய பதிலே இதற்கும்!
– – – – –
கேள்வி 7: ஜாதிவாரியான கணக்கெடுப்பு ஒன்றிய அரசுடன் தொடர்புடையது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.சிறீமதி அமர்வு கூறியுள்ள நிலையில், இனிமேல் தமிழ்நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள், ஆளும் தி.மு.க. அரசை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வற்புறுத்த மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாமா?
– செல்வி பாபு, மதுரை.
பதில் 7: முதலையும் மூர்க்கத்தனமும் ஒருபோதும் மாறாது.
– – – – –
கேள்வி 8: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் காவல்துறை தலைமை இயக்குநராக உள்ள தமிழர் என்.கொளஞ்சியின் முயற்சியால் அந்நகரின் ரயில் நிலையம் எதிரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது பெருமைப்படத்தக்க செய்தி அல்லவா?
– க. கலியபெருமாள், கள்ளக்குறிச்சி.
பதில் 8: அவரைப் பாராட்ட வேண்டும்.
– – – – –
கேள்வி 9: கடந்த 7 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 114 சுயமரியாதைத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி சட்டமன்றத்தில் தெரிவித்திருப்பது தந்தை பெரியார் கொள்கைக்கு கிடைத்திட்ட இமாலய வெற்றி என்று பெருமிதம் அடையலாம்
அல்லவா?
– எஸ்.ஆர். வெங்கடேஷ், மேற்கு தாம்பரம்.
பதில் 9: நிச்சயமாக! ஆனால், பலரும் ஆணவக் கொலைகளைத் தானே கேள்வியாக இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கும் இதுவே சரியான பதிலாகும்.
– – – – –
கேள்வி 10: முத்தமிழறிஞர் கலைஞரும், தாங்களும் இயக்கப் பிரச்சாரத்தின்போது கலைஞரின் கைகளில் தலைவைத்து நீங்கள் உறங்கியதாக ஒரு தகவல். அதைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளலாமா?
– எழிலன், திருவாரூர்
பதில் 10: ‘அய்யாவின் அடிச்சுவட்டில்” முதல் பாகத்தில் இதுபற்றி விளக்கியுள்ளேன். 1946இல் தஞ்சை மாவட்ட மாணவர் சுற்றுப் பயணத்தில் சங்கேதி என்ற ஊரில் கூட்டம் முடித்து, ஒரு வீட்டில் எங்களைத் தங்க வைத்திருந்தார்கள். கொசுக்கடி அதிகம் என்பதால் கலைஞர் தூங்காமல் இரவு 1 மணிக்கு மேல், ஏற்பாடு செய்த தோழரை எழுப்பி, வண்டி கட்டச் சொன்னார். (மூடியில்லாத பார வண்டி அது) அதில் அமர்ந்து தூங்கித் தூங்கி விழித்து, திருத்துறைப்பூண்டி தோழர் ஹாஜா பீர் வீட்டிற்குச் சென்று திண்ணையில் படுத்தோம். பொழுது விடிந்தும் அவர்கள் “எங்களை எழுப்பாமல் இருந்து விட்டீர்களே” என்று வருத்தம் கூறினார்கள். பார வண்டி – சுற்றி முளைக் குச்சிகளைப் பிடித்தபடி ஒருவர் மேல் மற்றொருவர் உட்கார்ந்தபடியே தூங்கியவாறு வந்தபோது – கலைஞரது கைமேல் தலைவைத்து பயணத்தில் வந்தது உண்மைதான்!