அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார்கள்?
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
சென்னை, ஜூலை 7 ஜாதியை வைத்துக்கொண்டு, காப்பாற்றிக்கொண்டு யுனிபார்ம் சிவில் சட்டத்தைக் கொண்டுவர முடியுமா? ஜாதியை ஒழிக்க ஒன்றிய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? என்ற வினாவை செய்தியாளர்களிடம் எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (6.7.2023) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
செய்தியாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
திராவிடர் கழகத்தினுடைய தலைமைச் செயற் குழுக் கூட்டம் இன்றைக்கு என்னுடைய தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு இருக்கின்றன. அவை அத்தனையும் மிக முக்கியமான தீர்மானங்களாகும்.
”ஆளுநர் பதவி விலகு அல்லது ஒன்றிய அரசு அவரை திரும்பப் பெறுக!”
குறிப்பாக சொல்லவேண்டுமானால், 3 ஆவது தீர்மானம் ”ஆளுநர் பதவி விலகு – அல்லது ஒன்றிய அரசு அவரை திரும்பப் பெறுக!” எனக் கோருகின்ற தீர்மானமாகும்!
ஆளுநர் அவர்கள் இன்றைக்குத் தேவையில்லாமல் குறுக்குச்சால் ஓட்டிக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஓர் அரசு செயல்படாதவண்ணம் முட்டுக் கட்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் எடுத்த பிரமாணத்திற்கு விரோதமாக நாளும் தவறாமல் செயல்படுகிறார்.
ஆளுநரை, அண்ணாமலையே இடித்துரைத்திருக்கிறார்!
ஆளுநரின் உரிமை, அவரது கடமை என்னவோ அதைத் தவிர மீதி எல்லாவற்றையும் முறையாகச் செய்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவராகப் பதவியிலிருந்து விலகவேண்டும்; ஏனென்றால், அவரை பலவகையில் ஆதரித்துக் கொண்டிருந்த அண்ணாமலை போன்றவர்களேகூட, ”ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது; ஆளுநர்கள் அவர்களுடைய கடமையை மட்டுமே ஆற்றவேண்டும்” என்று சொல் லியிருப்பது, இடித்துரைப்பதாகத்தான் இருக்கிறது.
எனவே, ஆளுநர் பதவி விலகவேண்டும்; அல்லது அவர் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய கோரிக்கை யாக இருக்கிறது.
அதற்கடுத்ததாக மிக முக்கியமான ஒரு செய்தி – 6 ஆவது தீர்மானத்தில்,
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு டைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில மொழிகளைப் படிக்க, எழுத, பேச அறிந்திருக்கவேண்டும் என்பது கட்டாயமாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ் நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ் நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்து வந் துள்ளன.
இந்நிலையில், வங்கித் தேர்வு நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (IBPS) கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை; அது ஒரு முன்னுரிமை மட்டுமே (Not Mandatory; it is preferable) என்று விளம்பரப்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக வேறு மாநிலங்களில் உள்ளோர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதி, கிளார்க் பணிகளிலும் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண் டும் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது 2022-2023 ஆம் ஆண்டுக்கான கிளார்க் பதவி நியமனங்களுக்குத் தேர்வுகள் நடைபெற்று, தமிழ் தெரியாத 288 பேர் கிளார்க் பதவிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
1. யூனியன் பாங்க் ஆப் இந்தியா – 87
2. கனரா வங்கி – 100
3. பாங்க் ஆஃப் இந்தியா – 17
4. சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா – 66
5. யூகோ வங்கி – 16
6. பஞ்சாப் & சிந்த் வங்கி – 2
மொத்தம் – 288
ஆறு அரசுடைமையாக்கப்பட்ட இந்த வங்கி களில் 288 பேர் கிளார்க்குகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்த ஆண்டும் வெளி மாநிலத்தவர்கள், தமிழ் மொழி தெரியாதவர்கள் பணியில் சேர உள்ளனர் என்பதாகத் தகவல்கள் வருகின்றன.
400 வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் பணியில் சேர்ந்துள்ளனர்
தொடர்ந்து 2017 முதல் இதேபோன்று வெளிமாநிலத் தவர், கிளார்க் பதவிகளுக்கு விண்ணப்பித்து, தமிழ் தெரியாமல் வேலை பார்க்கின்றனர். சென்ற ஆண்டு ஏறத்தாழ 400 வெளிமாநிலத்தவர் இவ்வாறு வங்கிகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.
வங்கிகளில் கிளார்க் பணி புரிவோர் வாடிக்கை யாளரிடம் நேரடி தொடர்புடையவர்கள். குறிப்பாக கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இவர்களின் சேவை மாநில மொழியில் இருப்பது அவசியம்.
ஆனால், வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (தனியார் நிறுவனம்) நடத்தும் தேர்வுமூலமாக தமிழ் தெரியாதவர்கள், பெரும்பாலும் ஒடிசா, கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து கிளார்க் பணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி பேச, எழுத, படிக்கத் தெரியாது.
ஒன்றிய அரசின் நிதித் துறை கட்டுப்பாட்டில் இருக் கும் பாரத ஸ்டேட் வங்கி, மாநில மொழி கட்டாயம் என வலியுறுத்துகிறது. ஆனால், பொதுத்துறை வங்கிகள், அதற்கு நேர்மாறாக செயல்படுகின்றன. ஒன்றிய அரசின் நிதித் துறையில் ஓர் அங்கமாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நேஷனல் இன்ஸூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் போன்ற அரசு காப்பீட்டு நிறுவனங்களில், கிளார்க் பணிகளில் சேருவதற்கு, அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று விதிமுறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப்
பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
ஆனால், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் மட்டும் குறிப்பாக கிளார்க் பணிகளுக்கு, இந்த விதி தளர்த்தப்பட்டதால், மொழி தெரியாதவர்களும், கிளார்க் பணிக்கு சேரும் நிலை ஏற்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
வங்கி தேர்வு நடத்தும் நிறுவனம் கிளார்க் பணிக்கு, மாநில மொழி அறிவு கட்டாயம் என ஏற்கெனவே இருந்த விதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளார்க் பணிகளில் தகுதி படைத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்புப் பறிக்கப்படுவதைக் கண்டித்தும், மாநில மொழி அறிவு கட்டாயம் என்ற விதியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், திராவிடர் கழக இளைஞரணி சார்பில், மாநில அளவில் மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் 2023, ஜூலை 14 (வெள்ளிக்கிழமை) அன்று மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முதற்கட்டமாக நடைபெறும்.
அதேபோல, மேகதாது அணைக் கட்டு விவகாரம் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியைப்பற்றி தீர்மானம் – அதற்கு மக்களுக்குரிய கடமை என்ன என்பதுபற்றியும் மிகத் தெளிவாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றோம்.
பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த
ஒன்றிய அரசு ஏன் துடிக்கிறது?
11 ஆவது தீர்மானமாக பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு ஏன் துடிக்கிறது? என்பதைப்பற்றி விளக்கி ஒரு தீர்மானத்தையும் நிறை வேற்றியிருக்கின்றோம்.
அதோடு 12 ஆவது தீர்மானம் மிக முக்கிய மானதாகும்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார், திராவிட இயக்கங்கள் தொடர்ச்சியாக செய்துவரும் பணியின் காரணமாக ஜாதி – தீண்டாமை ஒழிப்பில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. எனினும், மத, ஜாதீய வாத, பிற்போக்குச் சக்திகளின் தூண்டுதல் காரணமாக, ஆங்காங்கே ஜாதி – தீண்டாமைப் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. அவை சமூக அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் தமிழ்நாட்டின் சமூகநீதி – சமத்துவச் சூழலையும் சீர்குலைத்து வருகின்றன.
ஆணவக் கொலைகளுக்கு எதிராக பாராட்டத்தக்க வகையில் தீர்ப்புகள் வந்திருப்பினும், ஓரிரு இடங்களில் மனிதத்தன்மையற்ற ஆணவக் கொலைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
‘திராவிட மாடல்’ அரசு முன்னுதாரணமாக இதனைச் செயல்படுத்திட வேண்டும்!
ஆணவக் கொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டம் வரவேண்டும் என்றும், ஜாதி – தீண்டாமைப் பிரச்சினைகள் தலைதூக்க வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை செய்ய, காவல்துறையில் ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்றும், ஜாதி – தீண்டாமை – ஆணவக் கொலைகள் தொடர்பான பிரச்சினைகளைக் கவனித்து, உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்திடவும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோரது உயிருக்குப் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் திராவிடர் கழகம் தொடர்ந்து கோரி வருகிறது. ‘திராவிட மாடல்’ அரசு முன்னுதாரணமாக இதனைச் செயல்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
குறிப்பாக சமூகநீதியில் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புக்கு உரியன செய்யக்கூடிய அளவில், அது சம்பந்தமான வழக்குகள், பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காணுவதற்காகத்தான் காவல்துறையில் இந்தக் குறிப்பிட்ட பிரிவை ஏற் படுத்திடவேண்டும்.
வடலூரில் மாபெரும் மாநாடு!
செய்தியாளர்: சனாதனம் தமிழ்நாட்டிற்கு எதிரான தல்ல; சனாதனம் என்பது அனைவருக்கும் சமமானது என்று தமிழ்நாடு ஆளுநர் சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அதற்காகத்தான் நாளைக்கு (7.7.2023) வடலூரில் ஒரு மாநாடு நடைபெறவிருக்கிறது. அம்மாநாட்டில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், வழக்குரைஞர் அருள்மொழி, வள்ளலார் பற்றாளர்கள், தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். மாநிலம் தழுவிய அளவில் மக்கள் அம்மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
அம்மாநாட்டில் ஒரு திட்டத்தை அறிவிக்க விருக்கின்றோம். வடலூர் வள்ளலார் மிகத் தூய்மை யான வெள்ளை உடை அணிந்தவர். ஆளுநர் போன்றவர்கள், சனாதனத்தைக் கொண்டு வந்து, அவருக்குக் காவியைப் போர்த்தக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அது கடைந்தெடுத்த பித்தலாட்டம்; மோசடி என்பதை எடுத்துச் சொல்லி, அவற்றைத் தடுப்பதற்கு, வள்ளலாரு டைய கொள்கைகள் என்பது – அது ஜாதி, வருணங்கள் கடந்த ஒன்றாகும். நான்கு வகை ஜாதிகளையோ, வருணாசிரமத்தையோ அவர் ஒப்புக்கொண்டவர் அல்ல என்பதற்காகத்தான் நாளைக்கு மாபெரும் மாநாடு வடலூரில் நடைபெறவிருக்கிறது.
அந்த மாநாட்டில், மிகப்பெரிய அளவிற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஓர் அறிவிப்பு வெளியிடப்படும்.
வள்ளலாரைப் பாதுகாக்கவும், வள்ளலாரின் தத் துவத்தைப் பரப்பக்கூடிய, பாதுகாக்கக்கூடிய திட்டமாக அது இருக்கும். அதிலேயே சனாதனத்திற்கு சரியான பதிலடி கொடுக்கக் கூடிய திட்டங்களும் இருக்கும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று மார்தட்டுவதற்காகத்தான்!
செய்தியாளர்: பொது சிவில் சட்டத்தை நடை முறைப்படுத்துவதைவிட அதன்மூலம் மக்களிடையே ஒரு பிரிவினைவாதத்தை உருவாக்கி, அதன்மூலம் தேர்தலை சந்திக்கலாம் என்று ஒன்றிய அரசு நினைக்கிறதா?
தமிழர் தலைவர்: அருமையான கேள்வி கேட்டீர்கள். இரண்டும்தான். கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம் என்று மார்தட்டுவதற்காகத்தான் – காஷ்மீர் தனி அந்தஸ்து 370 சட்டம் நீக்குதல் – இராமன் கோவில் கட்டுதல் – பொது சிவில் சட்டம் மேற்கண்ட மூன்றை யும் நிறைவேற்றிவிட்டோம் என்று. மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். இம்மூன்றும் கட்சியைப் பொருத்தது. அவர்கள் நடத்துவது ஆட்சி! அது பொதுவானது;
உடனே நீங்கள் ஒரு கேள்வியை கேட்கலாம்; கட்சி ஆட்சிக்கு வரும்பொழுது, கட்சியினுடைய கொள்கைகளைத்தானே நடைமுறைப்படுத்துவார்கள் என்று.
ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாகப் போகிறது -வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா?
நியாயமானதுதான்! நீங்கள் கேட்பது. ஆனால், மக்களுக்குப் பயன்படுவோம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார்கள். இன்றைய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் அவர்களுடைய கணவர் பர்காலா பிரபாகர் என்பவர் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அப்புத்தகத்தில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ”2014 இல் வளர்ச்சித் திட்டங்கள் தீட்டி, நாட்டினுடைய வேலை இல்லா திண்டாட்டத்தைப் போக்குவோம்; வறுமையைப் போக்குவோம்; வெளி நாட்டிலிருக்கும் கருப்புப் பணத்தை இங்கே கொண்டு வருவோம். ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம்; ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம்; விலைவாசி ஏற்றத்தைக் குறைப்போம் என்றெல்லாம் சொல்லி, ”சப்கா சாத்; சப்கா விகாஸ்” – ”வளர்ச்சி வளர்ச்சி” என்று சொல்லி, உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய அளவில் இருப்போம் என்றெல்லாம் சொன்னார்கள்.
அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகளும் முடிந்து போயிருக்கிறது. தேர்தலும் வரப் போகிறது.
இராமர் கோவிலைக் கட்டுவோம் என்று எப் பொழுது சொன்னார்கள்? 2019 ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், தேர்தல் அறிக்கையாக அதையும் தாமதமாகத்தான் கொடுத் தார்கள்.
ஜி-20 என்று நடத்திக் கொண்டிருக்கிறாரே தவிர, மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மோடி தயாராக இல்லை!
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இப்பொழுது விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், மக்கள் மத்தியில் குழப்பம், மணிப்பூரில் கலவரம் என்று பல பிரச்சினைகளால் ஒன்றிய ஆட்சியாளர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால், இரண்டு, மூன்று வகைகளில் பிரதமர் மோடி அவற்றை சமாளிக்கிறார். அடிக்கடி வெளிநாட்டிற்குச் சென்றால், இப்பிரச்சினைகளைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை; வெளிநாட்டில், அவர் வரவேற்றார், இவர் வரவேற்றார் என்று சொல்லி, தன்னுடைய தலைமையிடத்தையே ஜி-20 என்று நடத்திக் கொண்டிருக்கிறாரே தவிர, மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர் தயாராக இல்லை.
இப்பொழுது நாம் விவாதம் செய்துகொண்டிருக் கிறோம் அல்லவா – பொதுசிவில் சட்டம் தேவையா? என்று. இதனால், விலைவாசி ஏற்றத்தைப் பற்றியோ, 2 கோடி பேருக்கு வேலை ஏன் கொடுக்கவில்லை என்பதுபற்றியோ, 15 லட்சம் ரூபாய் ஏன் வங்கிக் கணக்கில் போடுவது என்பதுபற்றியோ, வெளிநாட்டி லிருந்து கருப்புப் பணத்தைக் கொண்டு வந்தீர்களா? என்பதைப்பற்றியும் யாரும் கவலைப்படமாட்டோம் என்று கருதுகிறார்கள்.
அதேபோன்று, இன்றைக்கு ஊழல் ஒழிப்பு, ஊழலை ஒழிப்போம் என்று சொல்கிறார் பிரதமர் மோடி.
எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தவுடன், இன்னும் அதிகமான அளவிற்கு சங்கடங்கள் அவர் களுக்கு ஏற்பட்டன.
வட இந்திய மாநிலங்களில் பெரும்பான்மை – சிறுபான்மை என்று கொண்டு சென்று – இப்பொழுது ஹிந்துத்துவா என்பது அவர்களுக்குப் பயன்படவில்லை என்று கருதி, இதையே வேறொரு ரூபத்தில் கொண்டு செல்ல திட்டமிடுகிறார்கள்.
பெரும்பான்மை – சிறுபான்மை என்று வரும் பொழுது, சிறுபான்மையினருக்கு எதிராக, பெரும் பான்மையினரைத் திருப்பி விடுகிற வேலைதான் நடைபெறுகிறது.
இன்றைக்குக்கூட ‘விடுதலை’யில் ஓர் அறிக்கை கொடுத்திருக்கின்றோம் பொது சிவில் சட்டத்தைப்பற்றி.
யுனிபார்மாக நாடு முழுவதும் ஒரே சட்டத்தைக் கொண்டுவரவும் முடியாது!
யுனிபார்ம் சிவில் கோடு என்று இல்லை என்பதை இப்பொழுதே அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டார்கள். யுனிபார்மாக நாடு முழுவதும் ஒரே சட்டத்தைக் கொண்டுவரவும் முடியாது.
பொதுசிவில் சட்டத்தை மலைவாழ் மக்கள், பழங்குடி மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்; வட கிழக்குப் பகுதியில் உள்ளவர்கள் எதிர்க்கிறார்கள். பா.ஜ.க.வினரும் எதிர்க்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற அறிஞரான அமர்த்தியாசென் போன்றவர்களும் எதிர்க் கிறார்கள். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வும் தீர்மானம் போட்டிருக்கிறது.
ஆகவே, நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், ஒன்றிய ஆளுங்கட்சியான பா.ஜ.க. கூட்டணியில் இருப்பவர்களும் எதிர்க்கிறார்கள்.
ஏன் ஒரே ஜாதி என்று சொல்லக்கூடாது?
ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கேட்ட ஒரு கேள்வி என்னவென்றால், ”ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே ஆட்சி” என்று சொல்கிறீர்களே, ஏன் ஒரே ஜாதி என்று சொல்லக்கூடாது. அப்படி செய்தீர்கள் என்றால், உங்களுடைய நோக்கம் உண்மையாக நிறைவேறும்.
யுனிபார்ம் சிவில் கோடு சட்டத்திலேயே ஒரு கேள்வி என்னவென்றால், இந்து லாவில் என்ன சீர்திருத்தம் செய்யப் போகிறார்கள்?
ஒரு ஜாதியில் இருக்கின்ற சட்டம், இன்னொரு ஜாதியில் இருப்பவர்களுக்குக் கிடையாது!
இந்து லா என்பது மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. சிவில் லாவில், ஒரு ஜாதியில் இருக்கின்ற சட்டம், இன்னொரு ஜாதியில் இருப்பவர்களுக்குக் கிடையாது.
திருமண முறையில், சொத்து உரிமையில் ஒரே சீர்மையைக் கொண்டு வர முடியாது.
உதாரணமாக சொல்லவேண்டுமானால், சைவம் – வைணவம். வடகலை – தென்கலை பிரச்சினைகள் உள்ளன.. கோவில்களில் அர்ச்சகர் ஆகவேண்டும் என்றால், ஆகமம் படிக்கவேண்டும்.
ஆகமத்திலே, யுனிபார்ம் ஆகமத்தை உண்டாக்க லாமா? ஒரே ஆகமம் என்று சொல்லச் சொல்லுங்களேன், பார்ப்போம். ஏன் இரண்டு ஆகமம் இருக்கிறது? இந்த இரண்டு ஆகமத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் சங்கராச்சாரியார்கள், ஸ்மார்த்தர்கள்.
வடகலை – தென்கலை பிரச்சினை!
அவர்கள் வைணவர்களும் கிடையாது, சைவர் களும் கிடையாது. இவை எல்லாவற்றையும்விட, வைஷ்ணவர்களை எடுத்துக்கொண்டீர்கள் என்றால், அவர்களில் யூ மார்க் வேறு; ஒய் மார்க் வேறு. வடகலை வேறு – தென்கலை வேறு. வடகலையைச் சேர்ந்தவர்கள் கடவுள் சிலையைத் தூக்கிக்கொண்டு வந்தால், தென்கலையைச் சேர்ந்தவர்கள் அடிப்பார் கள்; தென்கலையைச் சேர்ந்தவர்கள் கடவுள் சிலை யைத் தூக்கிக்கொண்டு வந்தால், வடகலையைச் சேர்ந்தவர்கள் அடிப்பார்கள்.
முதலில் அவர்கள் இதை சீர்மைப்படுத்தட்டும். ஹிந்துராஷ்டிரம் உண்டாக்குவோம் என்று சொல்லும் பொழுது, முதலில் ஹிந்துக்களை ஒன்றாக்கட்டும். ஏன் இன்னமும் ஒருவன் தொடக்கூடியவன்; இன் னொருவன் தொடக்கூடாதவன்?
ஆகவே, ஜாதி ஒழிந்துவிட்டது, மனிதர்கள் எல்லாம் சமம் என்று சொன்னால், இதைவிட ஒருபடி மேலே போகுமே!
ஜாதியற்ற கிரிமினல் கோடு இருக்கிறது.
உயர்ஜாதிக்காரனுக்குத் தண்டனை கிடையாது. உதாரணமாக, மனுதர்மத்தில் பார்த்தீர்களேயானால், என்ன செய்தாலும், பார்ப்பனர்களுக்குத் தூக்குத் தண்டனை கிடையாது. பிறகு கிரிமினல் கோடு வந்த பிறகுதான், அது மாற்றப்பட்டது.
ஜாதியை ஒழித்தால்தான், பொது சிவில் சட்டமே உண்மையாக வர முடியும்!
அதேபோன்று, ஜாதியை ஒழித்தால்தான், பொது சிவில் சட்டமே உண்மையாக வர முடியும். அதற்கு என்ன திட்டத்தை அதில் வைத்திருக்கிறார்கள்?
இப்பொழுது சிறுபான்மையினரைப் பழிவாங்கு வதற்காகவும், திசை திருப்புவதற்காகவும்தான் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
இதைவிட ஒருபடி மேலே போய் பொதுசிவில் சட்டத்தைப்பற்றி சொல்லவேண்டுமானால், சட்ட ஆணையமே பொது சிவில் சட்டத்தை பரிந்துரை செய்திருக்கிறது என்று இவர்கள் ஒரு காரணம் சொல்கிறார்கள்.
சட்ட ஆணையத்தின் தலைவருக்கே, மறைமுகமாக பிரதமர்தான் ஆணையிடுகிறார்.
அப்படி வருகின்ற நேரத்தில் ஒன்றை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
21 ஆவது சட்ட ஆணைய அறிக்கை!
2018 இல், சட்ட ஆணையத்திற்குத் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சவுகான் என்பவர், அறிக்கை கொடுத்திருக்கிறார். அது 21 ஆவது சட்ட ஆணைய அறிக்கை.
இப்பொழுது பரிந்துரை கொடுத்திருப்பது 22 ஆவது சட்ட ஆணைய அறிக்கை.
2018 இல், பொதுசிவில் சட்டம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான, சட்ட ஆணையத் தலைவராக இருந்த சவுகான் அறிக்கை கொடுத்திருக்கிறார்.
2018 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் என்ன நடந்தது? நிலைமைகள் எல்லாம் மாறிப் போயிற்றா? பொதுசிவில் சட்டம் வேண்டும் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது?
சிறுபான்மையினரை வஞ்சிக்கவும், பிரச்சினைகளைத் திசை திருப்பவும்தான்!
ஆகவேதான், முழுக்க முழுக்க சிறுபான்மையினரை வஞ்சிக்கவும், பிரச்சினைகளைத் திசை திருப்பவும், எங்கள் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்வதற்குத்தான் பயன்படுமே தவிர, வேறொன்றும் கிடையாது.
இப்பொழுது அவர்களுடைய பலகீனம் என்ன என்பது நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் பிரதமர் மோடி, ”ஊழல்வாதி களை விடமாட்டேன்” என்று சொல்கிறார்.
ஏனென்றால், எதிர்க்கட்சிகளின் பாட்னா கூட்டத்தினால் ஏற்பட்ட ”பாட்னா ஜூரம்.” அடுத்த தாக எதிர்க்கட்சியினர் பெங்களூருவில் சந்திக்க விருக்கிறார்கள்.
மாநில கட்சிகளை உடைப்பதற்குக் காரணம்?
செய்தியாளர்: நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்ப தற்காகக் கூடியிருக்கக்கூடிய எதிர்க்கட்சிகள் மத்தி யில் பொதுசிவில் சட்டம் பிளவை ஏற்படுத்துமா? ஏனென்றால், ஒரு சில கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதே?
தமிழர் தலைவர்: இருக்கலாம்! ஒரு சில கட்சிகள் – பெரும்பாலும் பி டீம்தான். இன்னும் சில கட்சிகளுக்கு ஒரு நப்பாசை – ஹிந்துத்துவா வாக்குகள் கிடைக்குமா என்று!
நாடாளுமன்றத் தேர்தலில் அதுவே சிக்கலாக இருக்கும். ஏனென்றால், கட்சிகளை உடைப்பதற்கே அது ஒரு காரணமாக அமையலாம்.
மகாராட்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்றவற்றை உடைத்துவிட்டார்கள். இன்னும் சில மாநிலங்களில் கட்சிகளை உடைக்கலாம் என்று கணக்குப் போட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் கொண்டுவரும் மசோதாக்களை மக்கள வையில் பெரும்பான்மை இருப்பதால் நிறைவேற்றி விடுவார்கள். ஆனால், மாநிலங்களவையில் அந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அவர்களிடம் பெரும்பான்மை இல்லை.
எதிர்க்கட்சிகள் சில அவர்களை ஆதரிக்கின்றன என்று சொல்கிறீர்களே, இன்னொரு பக்கத்தைப் பாருங்கள் – ஆளுங்கட்சியே எதிர்க்கிறார்களே! ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வினர் யாருக்கு வாக்கு அளிப்பார்கள்? நாங்கள் ரகசியமாக வாக்களிப்போம் என்று சொல்லுவார்களா? வெளி நடப்பு செய்கிறோம் என்று சொல்வார்களா? அப்படி அவர்கள் சொன்னால், அவர்களுடைய உண்மையான அடையாளம் வெளிப்பட்டுவிடும்.
எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது!
செய்தியாளர்: நாடாளுமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க.விற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கிறார்களே, அந்தக் கூட்டணியில் பாதிப்பு ஏற்படுமா?
தமிழர் தலைவர்: எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. அதற்கு ஓர் உதாரணமாக ஒன்றைச் சொல்லுகிறார்கள்; பெங்களூருவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகலாமா? என்று இப்பொழுது கேட்கிறார்களே – அவர்கள் கேட்பதற்குப் பயந்து அவர் போகாமல் இருப்பாரா? அப்படி இல்லை – அதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களே பதில் சொல்லிவிட்டார்.
கருநாடகா துணை முதலமைச்சர் சிவக்குமாரோ அல்லது இன்னொருவரோ தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர வேண்டிய நிலையில் இல்லை. தண் ணீர் கொடுப்பதற்காக இருப்பதுதான் காவிரி நதிநீர் ஆணையம். அந்த ஆணையம் உத்தரவு போட்டிருக் கிறது.
முத்தமிழறிஞர் கலைஞரின் பதில்!
நீண்ட நாள்களுக்கு முன்பு இதுபோன்ற கேள்விகளுக்கு கலைஞர் அவர்கள் இரண்டே வரியில் பதில் சொல்லியிருக்கிறார்.
”உறவுக்குக் கை கொடுப்போம் –
உரிமைக்குக் குரல் கொடுப்போம்!”
இது டில்லிக்கு மட்டும் பொருந்தாது; தோழமைக் கட்சிகளுக்கும் பொருந்தும்.
அது அவர்களுடைய உரிமை என்றால், இது நம்முடைய உரிமையாகும்.
ஆகவே, இது நிச்சயமாக கூட்டணியை பாதிக்காது. காரணம் என்னவென்றால், இது ஒரு சிறிய கிளை போன்றது; இதில் நிற்கலாம் என்று நினைத்தால், அவர்கள் ஏமாந்து போவார்கள்.
மோடிக்கு, திக்விஜய்சிங்கின் பதிலடி!
இன்னொரு செய்தியை சொல்கிறேன், ”ஊழல் வாதிகளை விடமாட்டோம், விடமாட்டோம்” என்று பிரதமர் மோடி சொல்லியிருப்பது குறித்து, காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் அவர்கள் அதற்கு அழகாக ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார்;
”ஊழல் செய்தவர் கள் யாரையும் விட மாட்டோம் என்று கூச்சலிட்டார் பிரதமர் மோடி. அவர் சொன்னதுபோலவே, யாரையும் விடவில்லை, அனைவரையும் பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்” என்று சொல்லியிருக்கிறார்.
இன்றைக்கு நிறைய செய்திகள் வெளிவருகின்றன. இதற்கு முன்பு ஊடகங்களில்கூட இப்படிப்பட்ட செய்திகள் வருவதில்லை.
ஆங்கிலப் பத்திரிகையில்
வெளிவந்துள்ள கட்டுரை!
இன்றைக்கு வெளிவந்துள்ள ஆங்கிலப் பத்திரி கையில் ஒரு செய்தி வந்திருக்கிறது –
‘குஜராத் மாடல்’ என்றால் என்ன?
‘திராவிட மாடல்’ என்றால் என்ன?
என்று வரும்பொழுது, குஜராத் மாடலில், கட்டின பாலங்கள் எல்லாம் இடிந்து விழுகின்றன.
118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரத்தில் கட்டிய பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. அலகாபாத்தில் பாலம் இடிந்து விழுந்திருக்கிறது.
காரணம் என்னவென்றால், ஊழல் – 40 சதவிகித கமிஷன் என்று அங்கே இருக்கும் காங்கிரஸ் தலைவர் சொல்லி, அது கட்டுரையாகவே ‘இந்து’ பத்திரிகையில் இன்றைக்கு வெளிவந்திருக்கிறது.
சென்னை மேயர் ஸ்டாலின் கட்டிய பாலத்தின்மீதுதான் பிரதமர் வருகிறார்!
‘திராவிட மாடல்’ ஆட்சியைத் தாக்கிப் பேசுவதற்கு நம்முடைய பிரதமர் சென்னைக்கு வந்தால்கூட, மேனாள் மேயர் ஸ்டாலின் அவர்கள் கட்டிய பாலத் தின்மீது ஏறித்தான் வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல மைச்சராக அல்ல, மேயராக இருக்கும்பொழுது கட்டிய பாலத்தின்மீது ஏறி வந்துதான், ”தி.மு.க.விற்கு வாக்களிக்காதீர்கள்; தி.மு.க. ஊழல் கட்சி” என்று பிரதமர் மோடி பேசுகிறார்.
ஆகவேதான், பல ஆண்டுகளுக்கு முன்பு மேயராக இருந்து அவர் கட்டிய பாலங்கள்மீது ஏறி வந்து பிரதமர் மோடி ஊழலைப்பற்றி பேசினாலும், இப்பொழுது குஜராத் மாடல் என்னவென்பதுபற்றி பத்திரிகைகளில் வெளிவருகின்ற செய்திகளைப்பற்றி மக்கள் பேசக்கூடாது என்பதற்காகத்தான் – பொது சிவில் சட்டத்தைப்பற்றி கருத்துச் சொல்லுங்கள் என்று மக்களை திசை திருப்புகிறார்கள்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறினார்