பெரியார் என்றோர் ‘பகுத்தறிவுப் பகலவனின்’
குறையாத கதிரொளியில் விளைந்த
கொள்கைக் கதிர் முத்தே!
மறையாத வரலாறாய் வாழ்ந்திலங்கும்
அருமருந்தே!
நினைவாலும் தமிழர்தம்
நலம் காக்கும் கேடயமே!
கனவாலும் இனப்பகைவர் கைக்கொள்ளத்
துணியா திராவிடக் கோட்பாடே!
மழை போன்று; நிலம் போன்று
தகைமைசால் பெருங்குணமே!
உழைப்பாலே உளத்தாலே இளமைப்பொங்கும்
தமிழுக்கு இணையான “தமிழர்” தலைவரே!
மலைமுகடே! எரிதழலே!
தானுற்ற கொள்கை உறவுகளுக்கோர் வற்றாத
உவப்புகுக்கும் மழலை எழில் வடிவே!
வாழிய வாழியவே!
தமிழர் அகமாளும்
தமிழினிய பாயிரமே!
வாழிய வாழியவே!
தலைவர் எந்நாளும்
தமிழருக்கோர் அறிவாயுதமே!
நிலை கொள்ளும் எங்கள் இனமானம்!
தங்கள் குரல் எங்கள் உரிமைக் எக்காளம்!
தலை நிமிரும் தமிழர் வாழ்வும்!
தங்கள் பேனா முனை சேர்க்கும்
இது உறுதி எந்நாளும்.
– அ.சி கிருபாகரராஜ்