சென்னை, மார்ச் 28 பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருவதாக பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று (27.3.2025) கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேல் பேசும்போது, ‘‘பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்த செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து எங்கள் துறையின் செயலர், இயக்குநர் ஆகியோர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருகின்றனர். விரைவில் நல்ல சூழல் ஏற்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.
11ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்
மே 19ஆம் தேதி வெளியீடு
சென்னை, மார்ச் 28 பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 19 முதல் 30-ஆம் தேதி நடைபெற உள்ளன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருத்துதல் பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19-இல் வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.