பயாலஜிக்கல் ஏஜ் – பிசியாலஜிகல் ஏஜ் – சைக்காலஜிகல் ஏஜ் என்றால் என்ன?
முதுமை என்பது வயதைத் தள்ளி முதிர்ச்சியைக் குறிக்கிறதென்றால், நான் முதுமையை மிகவும் வரவேற்கிறேன்!
சிட்னி, மார்ச் 28 முதிர்ச்சி என்றால் என்ன? முதுமை என்றால் என்ன? பொதுத் தொண்டுக்கும், இவற்றிற்கும் உள்ள உறவு என்ன என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
எஸ்.பி.எஸ். ஒலிபரப்பில்
தமிழர் தலைவர் ஆசிரியர்
தமிழர் தலைவர் ஆசிரியர்
ஆஸ்திரேயாவிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 15.3.2025 அன்று சிட்னியில் உள்ள SBS ஒலிபரப்பிற்குப் பேட்டியளித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, SBS ஒலி பரப்புக் கூடத்தில் சந்தித்து ரைசல் என்று அழைக்கப்படும் ரேமண்ட் செல்வராஜூம், குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள். அவர்களது உரையாடலின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
92 வயதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றீர்களே, அதனுடைய ரகசியம் என்ன?
கேள்வி: உங்களை வியந்து பார்க்கும் அம்சம் – உங்களின் இளமை குன்றாது, இவ்வளவு ஆர்வமாக 92 வயதிலும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற அளவிற்குத் துடிப்பாக இருக்கிறீர்களே, அதனுடைய ரகசியம் என்ன அய்யா?
முதுமை வேறு – இளமை வேறு!
தமிழர் தலைவர்: முதுமை என்றால் என்னவென்று தெரியாததுதான் முதல் ரகசியம்.
முதுமை வேறு – இளமை வேறு என்று சுலபமாக வயதை வைத்துத்தான் கணக்குப் போடுகிறார்கள் இன்றுவரையில்.
ஒருவருடைய சிந்தனைகள், உளப்போக்கு, அவரு டைய பணி வேகம், அதில் ஈடுபாடு, உறுதிப்பாட்டை வைத்துத்தான் முதுமை – இளமை என்பதை முடிவு செய்யவேண்டும்.
உறுதிப்பாட்டுடனும், ஈடுபாட்டுடனும் நான் பணி செய்வதினால், எனக்கு முதுமை வந்துவிட்டதாகவே நான் எண்ணியதில்லை. ஆனாலும், முதுமையை மறைக்க முடியாது. அது ஆண்டு கணக்கு – டைரிக் குறிப்பு- காலண்டர் என்கிற அளவீடுகளுக்கு உள்பட்ட தாகும்.
ஒவ்வொருவருக்கும் மூன்று வகையான வயது உண்டு என்று நான் அடிக்கடி கூட்டங்களில் சொல்வ துண்டு. அதனைத் தத்துவவாதிகள், அறிஞர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள்.
பயாலஜிகல் ஏஜ் – பிசியாலஜிகல் ஏஜ் – சைக்காலஜிகல் ஏஜ்!
ஒன்று, பயாலஜிகல் ஏஜ் – நாம் பிறந்த தேதியைக் கணக்கில் கொண்டு வயதைச் சொல்வது.
இரண்டு, பிசியாலஜிகல் ஏஜ் – உடற்கூறு (மெட்ட பாலிசம்). நம்முடைய நாட்டில், உடலில் நோய் வந்த பிறகுதான் மருத்துவம்கூட தேவைப்படுகிறதே தவிர, மெட்டபாலிக் ஆஸ்பெக்ட்ஸ் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய உடல் அமைப்புகளில் தேய்மானம் உண்டு.
எனக்கு வயதாகவில்லை என்ற உணர்வு எனக்கு உண்டு. ஆனால், என்னுடைய உடல் உறுப்புகளுக்கு வயதாகிவிட்டது.
தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நேரத்தில், நான் மிகவும் வருத்தத்தோடும், சோகத்தோடும் இருந்த போது, எனக்கு ஆறுதல் சொன்னவர்களில் மிகவும் முக்கியமானவர் – 90 வயதான அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து, சிறுநீர் பிரிவதற்காக ஒரு பை போட்டு, அதனை ஒரு பாட்டிலில் வைத்து, அந்தப் பாட்டிலை ஒரு வாளியில் வைத்துத் தூக்கிக் கொண்டு போவார். அய்ந்தாண்டு காலமாக இதே நிலையில் இருந்தார். சிறுநீர் அந்தப் பாட்டிலில் வழிந்துகொண்டே இருக்கும். அந்த டியூப் நகர்ந்தால், ‘‘அய்யோ, அம்மா’’ என்று முனகலுடனே கூட்டத்தில் உரையாற்றுவார்.
இது பிசியாலஜிகல் ஏஜ் என்பதாகும்.
மூன்றாவது, சைக்காலஜிகல் ஏஜ் – நம்முடைய உற்சாகம், ‘‘நமக்கு இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன. தோழர்கள், நமக்கு ஆதரவு கொடுக்கி றார்கள்’’ என்கிற உறுதிப்பாடுடைய எண்ணம்.
என்னுடைய வட்டம் என்பது மிகத் தெளிவானது. தன் குடும்பம், தன் பிள்ளை, தன் வீடு என்னும் சின்ன தோர் கடுகு உள்ளம் என்பது சுயமரியாதை இயக்கத்தில் உள்ளவர்களுக்கு இல்லை.
உள்ளபடியே நமக்கு ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ என்பதுதான்.
யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து வந்திருக்கிறீர்கள். அங்கே இருக்கக்கூடிய தமிழர்கள் எங்களுடைய உறவு கள் என்றுதான் நினைக்கிறோம்.
மானுடம் நம்முடைய பரப்பு என்கிற அளவிற்குத்தான் இந்த இயக்கம் இருக்கிறது.
இளமையிலேயே இந்தக் கொள்கையை என்னுள் வளர்த்துக் கொண்டதினால், இளமை என்பதில்கூட ஒரு திருத்தம் – சிறுவயதிலிருந்து வளர்த்துக் கொண்ட தினால், அந்த உணர்வுகள் எங்களுக்குள் ஆழமாக நிலைகொண்டிருக்கிறது.
முதுமை என்பது வயதைத் தள்ளி, முதிர்ச்சியைக் குறிக்கின்றது என்றால், நான் முதுமையை வரவேற்கிறேன்!
முதுமை என்பதை இரண்டு வகையாகச் சொல்லலாம். சிலருக்கு வயது முதுமை. முதுமையில் ஒரு பெரிய நற்பயன் என்னவென்றால், முதிர்ச்சி, அனுபவம். அது நமக்கு உதவி செய்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு நான், பெரியாருடைய புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுகள், புரிதலுக்கும், இன்றைக்கு நான் அதே புத்தகங்களை மறுவாசிப்பு செய்யும்போது ஏற்பட்ட உணர்வுகளும் வெவ்வேறு.
ஆகவே, முதுமை என்பது வயதைத் தள்ளி, முதிர்ச்சி யைக் குறிக்கின்றது என்றால், நான் முதுமையை வர வேற்கிறேன். இளமை என்பது, அது வளமைக்காக அல்ல. தொண்டுக்காக. அந்த வார்த்தை, புரட்சிக்கவிஞர் அவர்கள் என்னைப்பற்றி எழுதி யிருக்கின்ற கவிதையில் இருக்கின்றது. வளமை என்பதை, ஒருவருடைய பணத்தை வைத்துத்தான் நினைக்கிறார்கள். நம்முடைய மக்கள், நம்முடைய தோழர்கள், நம்மு டைய குடும்பங்கள் என்று நினைக்கும்போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மானுட பரப்பு என்பதுதான் இயற்கையானது!
ஒரு நாடு, மாநிலம் என்பெதல்லாம் ஏற்பாடுதான்; செயற்கையானதுதான் தத்துவ ரீதியாகப் பார்த்தோம் என்றால் மானுட பரப்பு என்பதுதான் இயற்கையானது.
நாடுகளும், நம்முடைய வசதிக்காகத்தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால், அந்த நாட்டிலிருந்து வந்தாலும், எல்லோரும் கேள்வி கேட்கிறீர்கள். அது பயனுள்ளதாக இருக்கிறது. உங்களையெல்லாம் பார்க்கின்றபோது, பாசமும் ஏற்படுகிறது. நீண்ட நாள்கள் பழகியதுபோன்று, ஒரு சில மணித்துளிகளிலேயே நாம் ஒன்றாகிவிட்டோம்.
இந்த உணர்வுகள் எல்லாம் இருப்பதினால், உங்களையெல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பயணக் களைப்போ, சோர்வோ எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
நண்பர்கள் எல்லாம் என்னிடம் கேட்டார்கள், ‘ஜெட் பேக்’ இல்லாமல் எப்படி வந்தீர்கள்? என்று.
செய்கின்ற பணிகளில் ஈடுபாடு, உறுதிப்பாடு, கொண்ட கொள்கையில் ஆர்வம் இவை அத்தனையும் இருக்கிறது.
தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்றி ருந்தால்தான், அந்தக் கவலை, இந்தக் கவலை என்றெல்லாம் இருக்கும்.
நல்வாய்ப்பாக, நான் பொதுத் தொண்டில் இருந்த போது, எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை பெரியார் அவர்கள் ஏற்பாடு செய்தார்.
என்னுடைய திருமணம்
ஜாதி மறுப்புத் திருமணம்!
ஜாதி மறுப்புத் திருமணம்!
என்னுடைய திருமணம் ஜாதி மறுப்புத் திருமணம். என்னுடைய துணைவியார், வழமையான குடும்பக் கவலைகள், பொறுப்புகளையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இங்கே வரும்போது எப்படி நான் விருந்தாளி போன்று வருகின்றேனோ, அதுபோன்றுதான் வீட்டிற்குச் செல்வேன். அதனால் எனக்கு, பிள்ளைகளாலும், மற்ற வர்களாலும் தொல்லைகள் இல்லை.
பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று, அவர்க ளைக் கேட்டுத்தான் நானே தெரிந்துகொள்வேன்.
எங்களுடைய தோழர்கள், என்னுடன் பணி செய்யக் கூடியவர்கள் எல்லாம் கட்டுப்பாடான தோழர்கள். நான் நினைத்ததை உடனடியாக செயல்படுத்துவார்கள். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
மிசா கைதியாக சிறைச்சாலையில் இருந்திருக்கின்றேன்!
கடுமையான நெருக்கடி காலத்தின்போது, மிசா கைதியாக சிறைச்சாலையில் இருந்திருக்கின்றேன். அங்கே அடிபட்டு இருக்கிறேன். நாங்கள் பார்த்த பார்வையே வேறு. நிறைய தாக்கங்கள் எல்லாம் இருந்தன.
அதில் என்ன லாபம் என்று பார்த்தால், நீங்கள் கேட்டதுபோன்றே, அமெரிக்காவிலும் ஒருவர் கேள்வி கேட்டார்.
என்னுடைய வாழ்க்கையின் சிறந்த பகுதி!
உங்களுக்கு பெஸ்ட் பார்ட் ஆஃப் யுவர் லைப் எது? என்று.
‘‘மிசா காலம், அடிபட்ட காலம்தான் பெஸ்ட் பார்ட் ஆஃப் மை லைப்’’ என்று சொன்னேன்.
சிறைச்சாலையில்தான் எங்களை எவ்வளவு மோசமாக நடத்த முடியுமோ, அந்த அளவிற்கு நடத்தினார்கள். உணவுகளில் கலப்படம்; எட்டடி கொட்டடியில் எட்டு பேரை அடைத்தார்கள். வெளியில் விடமாட்டார்கள்.
அதை ஏன் என்னுடைய வாழ்க்கையின் சிறந்த பகுதி என்று நான் சொல்கிறேன் என்றால், இனிமேல் எனக்குக் கஷ்டம் ஏற்பட்டால், அதைவிட கீழே போக முடியாது.
இதுபோன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது.
மூன்று மாத காலத்திற்குப் பிறகு நிலைமை மாறியது. புத்தகங்களைப் படிப்பது, எழுதுவது போன்ற செயல்களை செய்தோம்.
ஆகவேதான், நம்முடைய நோக்கு, அதனைத் தீர்மானிப்பதுதான் போக்கு.
இங்கே இருந்து திரும்பிச் செல்லும்போது, இளமையாகச் செல்வேன்!
ஆகவே, நீங்கள், நான் இளமையாக இருக்கிறேன் என்று சொன்னால், அதைக் கேட்டு நான் மகிழ்ச்சி யடைகிறேன், உற்சாகமடைகிறேன். வரும்போது வேண்டுமானால், ஒருவேளை வயதானவனாக வந்திருப்பேன். ஆனால், உங்களிடம் உரையாடியதற்குப் பிறகு, இங்கே இருந்து திரும்பிச் செல்லும்போது, இளமையாகச் செல்வேன்.
பெரியாருடைய ஆக்கங்கள் ஏன் இன்னும் தேச உடைமை ஆக்கப்படவில்லை?
கேள்வி: பெரியாரைப்பற்றி பேசும்போது உங்களுடைய கண்களில் பிரகாசம் தெரிகிறது. அவருடைய நூல்களை சிறுவயதில் மட்டுமல்ல, இப்போதுகூட படிப்பதாகச் சொன்னீர்கள். பெரியாருடைய ஆக்கங்கள், அவருடைய எழுத்துகள், கட்டுரைகள் போன்றவை ஏன் இன்னும் தேச உடைமை ஆக்கப்படவில்லை. அதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?
தமிழர் தலைவர்: பெரியாருடைய ஆக்கங்கள், நூல்களை தேச உடைமை ஆக்கினால் என்ன ஆகும் என்றால், எந்த அரசு ஆட்சியில் இருக்கிறதோ, அந்த அரசு அதனை உடைமையாக்கிக் கொண்டு, வெளிவராமலேகூட செய்துவிடுவார்கள்.
பெரியாருடைய கருத்துகளை வெளியிடாமல் செய்துவிடுவார்கள்!
பல நேரங்களில், ஜனநாயகத்தில் மாறி மாறி ஆட்சிகள் வருகின்றன. அந்நிலையில், பெரியாருடைய கருத்துகளை வெளியிடாமல் செய்துவிடுவார்கள். இது ஒரு காரணம்.
இன்னொரு காரணம் என்னவென்றால், பெரியார் நூல்களை நாங்கள் வெளியிடுகின்றோம். மலிவுப் பதிப்பாக பெரியார் அறக்கட்டளை – பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக நூல்களை வெளியிடுகின்றோம், பெரியார் காலத்திலிருந்து.
ஒன்றை நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம். பெரியா ருடைய நூல்களை வெளியிடவேண்டும் என்று எங்களிடம் யாராவது அனுமதி கேட்டால், அதற்கு நாங்கள் அனுமதி கொடுக்கின்றோம். அதற்கு என்ன நிபந்தனைகளை விதிப்போம் என்றால், ‘‘பெரியாருடைய வாசகங்கள் அப்படியே இருக்கவேண்டும்’’ என்பதுதான் அது.
இப்பொழுதே பெரியாருடைய கருத்துகளை எப்படி வெளியிடுகிறார்கள் என்றால், முன்னால் இரண்டு வாக்கியங்களை விட்டுவிட்டு, பின்னால் இரண்டு வாக்கியங்களை விட்டுவிட்டு, ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்குகிறார்கள்.
இப்போது நான் கொடுக்கின்ற பேட்டியில்கூட, இரண்டு, மூன்று சொற்களை மாற்றிப் போடலாம். அப்படி போட்டுவிட்டு, இவர் தவறாகச் சொன்னார் என்றும் சொல்லலாம். அதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அதுபோன்ற நிலை வந்துவிடக்கூடாது.
பார்ப்பனர் – பிராமணர் இரண்டு சொல்லுக்கும் வித்தியாசம் இருக்கிறது!
ஒரு சிறிய உதாரணம் சொல்லவேண்டுமானால், பெரியாருடைய சிந்தனை ஓட்டத்தில், பார்ப்பனர் என்ற சொல்லும், பிராமணர் என்ற சொல்லும் வெவ்வேறு. இரண்டு சொல்லுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
பார்ப்பனர் என்பது இலக்கியத்தில் பயன்பட்ட ஒரு சொல். உதாரணமாக, வள்ளுவர் குறள், பாரதியாருடைய பாட்டு, சங்க இலக்கியங்களில் எதிலும் “பிராமணாள்’’ என்கிற வார்த்தை இல்லை.
வடமொழி வந்த பிறகுதான், “பிராமணாள்’’ என்ற வார்த்தை வந்தது.
அவர்களைப் பார்ப்பனர்கள் என்று சொன்னால், இல்லை, இல்லை அப்படி சொல்லக்கூடாது; ‘பிராம ணர்கள்’ என்று சொன்னால்தான் உயர்வு என்கிறார்கள்.
ஏனென்றால், ஜாதி வேறுபாடு. அவர்கள் ‘பிராமணர்’ என்றால், இன்னொருவர் ‘சூத்திரர்’ என்று வரும்.
சூத்திரர் என்பதற்கு இழிவான பொருள்.
இந்த இயக்கத்திற்குத் தனிப்பட்ட பார்ப்பனர் யாரும் விரோதி அல்ல!
பெரும்பாலும் பார்த்தீர்களேயானால், பார்ப்பனர், என்று பெரியார் சொல்லும்போது, தத்துவத்தைக் குறிப்பார். தனிநபர் யாரும் அவருக்கு விரோதியல்ல; இன்றைக்கும் இந்த இயக்கத்திற்குத் தனிப்பட்ட பார்ப்பனர் யாரும் விரோதி அல்ல. இதை பலமுறை பெரியார் அவர்கள் சொல்லியிருக்கிறார். இன்றைக்கும் எங்களுடைய இயக்கத்தின் கொள்கை அதுதான்.
ஆனால், அந்த சொல்லாட்சி வரும்போது, ‘பிராமணர்’ என்ற வார்த்தையை அவர் சொல்ல மாட்டார்.
‘பார்ப்பானை, ‘பிராமணன்’ என்று அழை யாதே, உன்னுடைய சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டு மானால்’ என்று எழுதியிருப்பார்.
பெரியாருடைய கருத்துகளை வெளியில் இருப்பவர்கள் அச்சிடுபவர்கள், ஒரு வார்த்தையை மாற்றி போட்டுவிட்டார்கள் என்றால், அவ்வளவு தான்.
இன்றைய அரசுகளுக்கு – பெரியாருடைய தத்துவங்கள்தான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன!
அதற்கு உதாரணம் என்னவென்றால், பெரியார் அவர்கள் உருவத்தால் மறைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், பெரியாரைக் கொச்சைப்படுத்துகிறார்கள். அவரை எப்படி இருட்டடிப்பு செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால், பெரியார்தான் அடிப்படை, இன்றைய அரசுகளுக்கு – பெரியாருடைய தத்துவங்கள்தான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றது.
தென்னாட்டில் மட்டும் இருந்தவர், வடநாடு, இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் பரவி உள்ளார்.
‘‘உலகம் பெரியார் மயம்
பெரியார் உலக மயம்!’’
பெரியார் உலக மயம்!’’
எல்லா நாடுகளிலும் பெரியார் கூட்டமைப்பு இருக்கின்றது. இங்கே பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் என்று இருக்கிறது.
உலகம் முழுவதும் பெரியார் கொள்கை பரவியிருக்கிறது
அமெரிக்கத் தலைநகர் சிகாகோவைத் தலைமையிடமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இப்படி உலகம் முழுவதும் இருக்கிறது.
ஆகவே, பெரியாருடைய கருத்துகள் எல்லா இடங்களுக்கும் போகும்போது, அவருடைய கருத்து, எழுத்துகளை மாற்றிவிட்டால், அவருடைய அடிப்படைக் கருத்தே மாறிவிடும்.
பெரியார் அவர்கள் கூட்டத்தில் உரையாற்றும்போதுகூட, இதுதான் என்னுடைய கருத்து என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லக்கூடியவர். ஆகவே, அதை நாங்கள் மட்டும்தான் அச்சிட முடியும்.
‘விடுதலை’யில் மட்டும்தான் பார்ப்பனர் என்ற வார்த்தையை அச்சிடுவோம்!
‘விடுதலை’யில் மட்டும்தான் பார்ப்பனர் என்ற வார்த்தையை அச்சிடுவோம். அதேநேரத்தில், என்னுடைய உரையை மற்றவர்கள் வெளியிடும்போதுகூட, ‘பிராமணர்கள்’ என்கிற வார்த்தையைப் போடுவார்கள்.
அதை ஆழமாகப் படிக்கும்போது, கருத்து விளக்கத்திற்கு வரும்போது, நிச்சயமாக பெரியாருடைய கருத்துகள் மாற்றப்படும். திரிபுவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
எங்களிடம் அனுமதி கேட்டால், யாருக்கு வேண்டுமானாலும் நாங்கள் அனுமதி கொடுப்போம். அதற்காக நாங்கள் பணம் கேட்பதில்லை. ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், பெரியார் சொன்னதுபோன்று வார்த்தைகள் மாறாமல் இருக்கிறதா? என்பதை நாங்கள் பார்த்துவிட்டு, அச்சிடுவதற்கு அனுமதியைக் கொடுப்போம்.
‘நியூ செஞ்சு புக் அவுஸ்’ நிறுவனம், எங்களிடம் அனுமதி வாங்கி, நிறைய புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த அனுமதி என்பது, எல்லா நூல்களுக்கும் வைத்திருக்கக்கூடிய ஒரு இயல்பான விதிதான்.
‘நவஜீவன் டிரஸ்ட்டை’ காந்தியார் தொடங்கினார். அது அரசாங்க உடைமை ஆகவில்லை. ஏன் அதை அவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால், அவருடைய வார்த்தைகள், கருத்துகள் மாறிப் போய்விடக் கூடாது என்பதினால்தான்.
இன்றைய இளைய தலைமுறையினர், பெரியாரைக் கொண்டாடுகிறார்கள்!
பெரியாருடைய கருத்துகள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர், பெரியாரைக் கொண்டாடுகிறார்கள். முன்பெல்லாம் வடநாட்டில் உள்ளவர்கள் பெரியாரை, தங்களுடைய எதிரி போன்று நினைத்தார்கள். ஆனால், இன்றைக்கு அந்த நிலை இல்லை.
பெரியாரை, அதாவது அவரை கடவுள் மறுப்பு, அவருடைய பார்ப்பன எதிர்ப்பு என்று இரு சிமிழுக்குள் தவறாக அடக்கிவிட்டார்கள்.
அவருடைய மனிதநேயம் சிறப்பானது. ‘இனிவரும் உலகம்’, ‘பெண் ஏன் அடிமையானாள்?’, ‘ஜோதிடப் புரட்டு’, ‘ஜோதிட ஆராய்ச்சி’, ‘அறிவியல் மனப்பான்மை’ என்ற தலைப்பில் நிறைய நூல்கள் இருக்கின்றன. அவையெல்லாம் முழுமையான அளவுக்கு வெளியில் போகவில்லை.
சந்திராயன் விஞ்ஞானி
மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை
எடுத்துக்காட்டாக, சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது சொல்கிறார், ‘‘நான், சாதாரண பள்ளிக்கூடத்தில் படித்து, பெரிய அளவிற்கு வந்திருக்கின்றேன். பெரியாருடைய சிந்தனையால்தான் இந்நிலைக்கு வந்தேன்.
‘‘மாணவர்களே, செக்கு மாடுகளாக இருக்கக்கூடாது; ரேஸ் குதிரையாக இருங்கள்!’’
நிலவில் தண்ணீர் இல்லை என்பதோடு என்னுடைய ஆராய்ச்சியை நிறுத்திவிட்டேன். பெரியார்தான் சொல்வார், ‘‘மாணவர்களே, செக்கு மாடுகளாக இருக்கக்கூடாது; ரேஸ் குதிரையாக இருங்கள்’’ என்று சொன்னதைப் படித்தவுடன், எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிறகுதான் ஆராய்ச்சித் தொடர்ந்து, நிலவில் தண்ணீர் இருக்கின்றது என்பதை உறுதி செய்தோம்’’ என்றார்.
பெரியாருடைய கருத்துகள், திரிபுவாதத்திலிருந்தும், மாற்றப்படுவதிலிருந்தும் காப்பாற்றப்பட வேண்டும்!
ஆகவேதான் பெரியாருடைய கருத்துகள், திரிபுவாதத்திலிருந்தும், மாற்றப்படுவதிலிருந்தும் காப்பாற்றப்பட வேண்டும். அதை உறுதி செய்யவேண்டும். அப்படி அது உறுதியாக இருந்தால், அந்தக் கருத்துகள் பரவும் என்பதற்காகத்தான் நாங்கள் அந்த நிபந்தனையை வைத்திருக்கின்றோமே தவிர, வேறு எதுவும் இல்லை.
நாங்கள் பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காகவோ, அது எங்கள் சொத்து என்று உரிமை கொண்டாடவேண்டும் என்பதற்காகவோ அல்ல.
பெரியார், அவருடைய கருத்துகள் சரியானபடி பரவவேண்டும் என்பதற்காகத்தான்.
(தொடரும்)