ஏழை, எளிய மக்களைக் கல்வியில் இருந்து வெளியேற்றும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஓரணியில் நிற்கும்போது, தமிழக பா.ஜ.க. மட்டும் புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து, பரப்புரை செய்து வருகிறது. தப்பித்தவறியும்கூட புதிய கல்விக்கொள்கையில் என்னதான் நன்மை இருக்கிறது என்றோ, தமிழ்நாடு ஏற்கெனவே பின்பற்றிக் கொண்டிருக்கும் கல்விக்கொள்கையில் என்ன பாதகம் இருக்கிறது என்றோ எங்கும் பேசுவதில்லை. பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நிறுத்தப் படும் என்றும் இக்கூட்டங்களில் பேசுகிறார்கள்.
ஏற்கெனவே, பா.ஜ.க. பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. அங்கெல்லாம் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை நிறுத்திவிட்டார்களா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 2014-ஆம் ஆண்டில் 1,62,228 அரசுப் பள்ளிகள் இருந்தன. ஆனால், இப்போது இருப்பதோ 1,37,102 அரசுப் பள்ளிகள் மட்டுமே. அதாவது, 10 ஆண்டுகளில் 25,126 அரசுப் பள்ளிகளைக் குறைத் திருக்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை 77,330-இல் இருந்து 96,635-ஆக உயர்த்தி இருக்கிறார்கள். குஜராத், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா எனப் பல மாநிலங்களிலும் இதுதான் நிலைமை.
ஒட்டுமொத்தமாக நாடு முழுக்கப் பார்த்தால், 2014-ஆம் ஆண்டில் 11 லட்சத்து 7 ஆயிரத்து 101-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 660-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 88 ஆயிரத்து 164-இல் இருந்து 3 லட்சத்து 31 ஆயிரத்து 108-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், தமிழ்நாட்டிலோ அ.தி.மு.க. ஆட்சியின் இறுதி ஆண்டான 2020-2021-இல் 37,589-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, அடுத்த 3 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசால் 37,672-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் யாவும் ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி நாடாளுமன்றத்தில் அளித்தவைதான். இவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால், தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை நிறுத்திவிடுவார்கள் என்பது, எத்தனை அபத்தமான பேச்சு!
நன்றி: ‘முரசொலி’ 26.3.2025