கேள்வி: தி.க.வினரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?
பதில்: தேர்தலில் நிற்காமல், தேர்தலில் வெற்றி பெறும் கழகத்துக்கு ஜால்ரா போட்டே தங்கள் கட்சியை நடத்துவது!
– ‘துக்ளக்‘, 2.4.2025,
பக்கம் 9
அப்படியா ‘துக்ளக்’கே? 13 ஆண்டுகாலம், எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை திராவிடர் கழகம் எதிர்த்ததுதான் ஜால்ரா தட்டுவது என்பது என்று அக்கிரகார அகராதியில் அர்த்தம் எழுதி வைத்துள்ளீர்களா!
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த – பிற்படுத்தப்பட்டோருக்கு ஆண்டு வருமானம் ரூ.9000 என்றால், இட ஒதுக்கீடு கிடையாது என்ற ஆணையை எ(ரி)திர்த்ததோடு அல்லாமல், அந்த ஆணையைப் பின்வாங்கச் செய்து – அதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்து வந்த 31 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக எம்.ஜி.ஆர். ஆட்சி உயர்த்தியதற்குக் காரணமாக இருந்ததும்கூட, உங்கள் பாைஷயில் ஜால்ராதானா?
1952 இல் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியில் நுழைந்த ராஜகோபாலாச்சாரியார் (எந்தத் தேர்தலிலும் நிற்காமல் ஆட்சி அதிகாரத்தில் ருசி கண்ட பூனை) குலக்கல்வித் திட்டத்தைத் திணித்த நேரத்தில், வாய்தா காலம் அவரை ஆளவிடாமல் விரட்டியது யார்?
தந்தை பெரியாரும், தி.க.வும்தானே!
ஒரு கட்சி எப்படி ஆளவேண்டும், எவற்றை எல்லாம் செயல்படுத்தவேண்டும் என்பதைத் தேர்தலில் நிற்காத திராவிடர் கழகம் தான் வழி நடத்தியிருக்கிறது என்கிற வரலாறு தெரிந்தும், தமக்கே உரித்தான வன்மங்கொண்ட ஆரியப் புத்தியால் மூடி மறைக்கலாம் என்று நினைக்கிறது முப்புரி ‘துக்ளக்.’
ஆச்சாரியாரை ஆட்சியைவிட்டு விரட்டிய பின், காமராசரை ஆட்சியில் அமர வைத்து, அக்கிரகாரவாசிகள் அலறும் வண்ணம் குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்கச் செய்து, மேலும் 12,000 பள்ளிகளைத் திறக்கச் செய்தது எல்லாம் தெரியுமா, தெரியாதா? இதையெல்லாம் மனதிற்கொண்டு, கதர்ச்சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று
கார்ட்டூன் போட்டது யார்? ‘கல்கி’ கூட்டம்தானே!
கருப்புக் காக்கையை அதாவது காமராசரைக் கல்லால் அடிக்கவேண்டும் என்று ஆச்சாரியார் (ராஜாஜி) ஆத்திரம் கொள்ளும் அளவுக்கு – ‘தகுதி’, ‘திறமை’ என்ற பெயரால் இட ஒதுக்கீட்டைக் குறை சொன்ன கூட்டத்தை நோக்கி, ‘உன் தகுதியும், திறமையும் எனக்குத் தெரியும், என்னைஅழிக்க நினைத்தால், உங்கள் அஸ்திவாரத்தை அழித்துவிடுவேன்’ என்று காமராசர் கர்ச்சித்தது எந்த அடிப்படையில்? யார் பின்னணியில்?
‘‘இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை’’ என்று முதலமைச்சர் அண்ணாவும், ‘‘பெரியார்தான் தி.மு.க. அரசு, தி.மு.க. அரசுதான் பெரியார் அரசு’’ என்று கலைஞரும், ‘‘நேற்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி, எங்களுக்கு வழிகாட்டுவது பெரியார் திடல்தான்’’ என்று தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்ததும் எந்த
அடிப்படையில்?
ஜால்ராவா – சாதனையா, கடுகளவு புத்தியும், நேர்மையும் இருந்தால் ‘துக்ளக்‘ யோசிக்கட்டும்!
பார்ப்பனர் இல்லாத அமைச்சரவை மட்டுமல்ல – 234 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் பெயர் சொல்லுவதற்குக்கூட ஒரே ஒரு பார்ப்பனர் இல்லையே!
‘துக்ளக்கு’களுக்கு தி.க.மீது ஆத்திரம் வரத்தானே செய்யும்!
– மயிலாடன்