நான் பெரியார் வாரிசு அல்ல, கொள்கை வாரிசு; அதனால், சாரங்கபாணி, வீரமணியானேன்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியா- சிட்னி எஸ்.பி.எஸ். ஒலிபரப்பிற்கு அளித்த பேட்டி
சிட்னி, மார்ச் 27 நானோ சின்ன பையன், மாணவன். சிங்கம் போன்ற தோற்றத்தில் உள்ள பெரியாரைப் பார்த்த வுடன், ஓர் அச்சமும், வியப்பும், எல்லா உணர்வுகளும் கலந்ததுபோன்று இருந்தது எனக்கு. முதன்முதலாகப் பெரியாரைப் பார்த்து வியந்தேன். சாரங்கபாணி எப்படி வீரமணியானார்? என்று கேட்டீர்கள். கொள்கை வாரிசாக ஆனதால், சாரங்கபாணி, வீரமணியானார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
எஸ்.பி.எஸ். ஒலிபரப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்
ஆஸ்திரேயாவிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 15.3.2025 அன்று சிட்னியில் உள்ள SBS ஒலிபரப்பிற்குப் பேட்டியளித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து ரைசலும், குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள்.
அவர்களது உரையாடல் வருமாறு:
மதிப்பிற்குரிய திரு.வீரமணி அய்யா அவர்களே, ஆஸ்திரேலியாவிற்கு முதன்முறையாக வந்திருக்கி றீர்கள். உங்களை எஸ்.பி.எஸ். ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து உரையாடுவதில் மிக்க மகிழ்ச்சி.
திராவிடக் கொள்கையில் உங்களுடைய பயணம் எப்படித் தொடங்கியது?
கேள்வி: நீங்கள் பெரியாரின் வாரிசு. திராவிட அரசியல் அல்லது திராவிடக் கொள்கையில் உங்களுடைய பயணம் எப்படித் தொடங்கியது?
சாரங்கபாணி எப்படி வீரமணி ஆனார்?
நான் பெரியாரின் கொள்கை வாரிசு
தமிழர் தலைவர்: ஒரு சிறிய திருத்தத்தோடு சொல்கிறேன். பெரியாரின் வாரிசு என்பது வேறு; பெரியாரின் கொள்கை வாரிசு என்பது வேறு. ஆகவே, நான் பெரியாரின் கொள்கை வாரிசு என்று நீங்கள் சொல்வீர்களேயானால், அதை நான் மறுக்கமாட்டேன்.
நடைமுறையில் என்னைப் பொறுத்தவரையில், என்னுடைய 9 ஆம் வயது காலத்திலிருந்து பெரியாருடைய கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.
கொள்கை வாரிசாக ஆனதால், சாரங்கபாணி, வீரமணியானேன்!
சாரங்கபாணி எப்படி வீரமணியானேன்? என்று கேட்டீர்கள். கொள்கை வாரிசாக ஆனதால், சாரங்கபாணி, வீரமணியானேன்.
என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள்தான் என்னுடைய 10 ஆவது வயதில் இந்தக் கொள்கையில் ஈடுபடுத்தினார். அவர் எனக்குக் கல்வி போதித்தார். கல்வி போதித்ததோடு சேர்த்து இந்தக் கொள்கையையும் போதித்தார்.
அப்படி வந்தபோது, இந்தக் கொள்கையில் பகுத்தறிவு உணர்வு, மொழி உணர்வு, பண்பாடு இவையெல்லாம் இயைந்து வந்த காரணத்தினால், சாரங்கபாணி என்ற என்னுடைய பெயரை வீரமணி என்று மாற்றினார். பெயர் மாற்றம் எனக்கு மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில், தந்தை பெரியாருடைய தொண்டர்கள் எல்லாம் தம்முடைய பெயரை தனித்தமிழில் மாற்றிக் கொண்டார்கள்.
என்னுடைய பெற்றோர் வைத்த பெயர் சாரங்கபாணி என்பது வடமொழிப் பெயர். வீரமணி என்ற பெயரை என்னுடைய ஆசிரியர் திராவிடமணிதான் வைத்தார்.
எனக்கு மட்டுமல்ல, என்னை சார்ந்த பிள்ளைகள் அனைவருக்கும் பெயர் மாற்றினார்.
தொடக்க காலத்தில், நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனார்; ராமையா அன்பழகன் ஆனார்; சோமசுந்தரம் மதியழகன் ஆனார்; சீனி வாசன் செழியன் ஆனார்.
இப்படி பல பெயர்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருந்த அந்த சூழ்நிலையில், தமிழ்ப் பெயர் மாற்ற இயக்கமே இருந்தது. வேலூரில் கோ.மு.அண்ணல்தங்கோ என்ற ஓர் அற்புதமான தமிழ் இன உணர்வாளர், மொழி உணர்வாளரான அவர் குழந்தைகளுக்கான வடமொழி பெயர்களை தமிழில் மாற்றிக் கொண்டிருந்தார்.
1943 ஆம் ஆண்டு கடலூரில், பொது மேடையில் ஏறி பேசினேன்!
ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்க்கக் கூடிய இயக்கமாக, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் அமைந்த காரணத்தினால், என்னுடைய ஆசிரியர் அவர்கள், எனக்கு வீரமணி என்று பெயர் வைத்து, 1943 ஆம் ஆண்டு கடலூரில், பொது மேடையில் ஏற்றி பேச வைத்தார். அப்போது, அவர் எழுதிக் கொடுத்ததைத்தான் நான் படித்தேன்.
எங்களைப் போன்ற மாணவர்கள் எல்லோரும் ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘திராவிட நாடு’, ‘பகுத்தறிவு’ போன்ற பத்திரிகைகளைப் படிப்பது – பெரியாரைப்பற்றி தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்புகள் வந்தன.
‘சந்தித்தேன்’ என்பதைவிட, ‘பார்த்தேன்’ என்பதுதான் சரியான வார்த்தை!
அதற்கடுத்து 1944 ஆம் ஆண்டு, ஒரு ஆறு மாத கால அவகாசத்தில், தென்னார்க்காடு மாவட்டத் திராவிட மாநாடு நடைபெற்றது. அன்றுதான் தந்தை பெரியாரை முதன்முதலாகப் பார்த்தேன். ‘சந்தித்தேன்’ என்பதைவிட, ‘பார்த்தேன்’ என்பதுதான் சரியான வார்த்தை. ஏனென்றால், ‘சந்திப்பு’ என்பது சமதளத்தில் இருக்கக்கூடியவர்கள் சந்தித்தால்தான் சந்திப்பு. நான் ஒரு சாதாரண மாணவன். அன்று பரபரப்பு மிகுந்த மனநிலையில் நான் இருந்தேன்.
இவர் உண்டதெல்லாம் பெரியாருடைய பகுத்தறிவுப்பால்: அண்ணாவின் பாராட்டு!
மணியம்மையார் அவர்கள், பெரியாருடைய செயலாளராக வந்திருந்தார். அந்த மாநாட்டிற்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. நான் 10 வயது சிறுவன். அந்த மாநாட்டின் காலை நிகழ்வில் நான் பேசினேன். அதில் அறிஞர் அண்ணா அவர்களும் கலந்துகொண்டார். அவர் உரையாற்றுகையில், தொடக்கத்திலேயே, ‘‘சற்றுமுன் உரையாற்றிய பகுத்தறிவுச் சிறுவன் – வேறுவிதமாக அதாவது குண்டலம் எல்லாம் அணிந்திருந்தால், இவர் ஞானப்பால் உண்டார்; பார்வதியின் முலைப்பால் உண்டார் என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால், இவர் உண்டதெல்லாம் பெரியாருடைய பகுத்தறிவுப்பால்’’ என்று என்னைப்பற்றி பாராட்டிப் பேசினார்.
அண்ணா அவர்களுடைய அறிமுகம் என்பது, அன்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா அவர்களின் ‘திராவிட நாடு’ பத்திரிகைக்குப் பணம் வசூலித்துக் கொடுத்தோம், என்னுடைய ஆசிரியர் மூலமாக. அந்தக் கூட்டம் கடலூரில் நடந்தது.
தொண்டர்களின் கோபத்தை ஆசுவாசப்படுத்திய பெரியார்!
அந்த மாநாட்டில், பெரியார் அவர்கள் உரை யாற்றும்போது எதிர்ப்பு இருந்தது. அதைக் கண்டு தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால், அதைப்பற்றி பெரியார் அவர்கள் கொஞ்சம்கூட சலனப்படாமல், அவர்களையெல்லாம் அமைதிப்படுத்தினார்.
எதிர்ப்புத் தெரிவித்தவரை நெருங்கி, தொண்டர்கள் அவரை தாக்குவதற்காக வேகமாகச் சென்றார்கள்.
உடனே பெரியார் அவர்கள், அப்படியெல்லாம் செய்யக்கூடாது. அவர் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு நான் பதில் சொல்கிறேன் என்று தொண்டர்களை சாந்தப்படுத்தினார். அதேபோன்று அவருடைய கேள்விக்கும் பதில் சொன்னார்.
இந்த நிகழ்வு என்னுடைய பிஞ்சு உள்ளத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
பெரியார்மீது பாம்பை வீசினார்கள்!
அதற்குப் பிறகு மாலையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலும் கடுமையாக பெரியார் அவர்கள் உரையாற்றினார். மழை பெய்ததினால் அந்தக் கூட்டம் முழுமையாக நடைபெறவில்லை. அந்த மஞ்சக்குப்பம் கூட்ட மைதானத்திலிருந்து பெரியார் அவர்கள் வெளியே வந்தார். அன்றைய காலகட்டத்தில் கைரிக்ஷாதான் இருந்தது. அந்த ரிக்ஷாவில் பெரியார் அவர்கள் வந்தார். அப்போது மின்சார விளக்குகள் அணைந்தன. அப்போது, பெரியார்மீது பாம்பை வீசினார்கள். எல்லோரும் ‘‘பாம்பு, பாம்பு’’ என்று சத்தம் போட்டனர். அது தண்ணீர்ப் பாம்பு.
கடலூர் கெடிலம் நதி பாலத்தில் இருட்டில் வந்த ரிக்ஷாவில் இருந்த பெரியார் அவர்கள், ‘‘ரிக்ஷாவை திருப்புங்கள்’’ என்றார்.
எதற்காக ரிக்ஷாவை திருப்பச் சொல்கிறார் என்று தெரியாமல், ரிக்ஷா திரும்பிச் செல்கிறது. கொஞ்சம்தூரம் சென்றதும், மீண்டும் ரிக்ஷாவை திருப்பச் சொன்னார்.
சென்னைக்கு செல்லவிருப்பதால், திருப்பாதிரி புலியூர் ரயில் நிலையத்திற்கு பெரியார் அவர்கள் வந்தார். புகைவண்டி வருவதற்கு அதிக நேரம் இருந்தது. அப்போது மின்சாரமும் வந்துவிட்டது. பெரியார் அவர்கள், எப்போதும் ஒரு கைப்பெட்டி வைத்திருப்பார்.
தோழர்களை உற்சாகப்படுத்திய தந்தை பெரியார்!
கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடம் பெரியார் அவர்கள், ‘‘மழை வந்ததைப்பற்றி கவலைப்படாதீர்கள். காலையில் நடந்த மாநாடு மிகவும் சிறப்பாக நடந்தது’’ என்று தோழர்களை உற்சாகப்படுத்தினார்.
நான் அதை கவனித்துக் கொண்டிருந்தேன். அன்று காலைதான், பெரியார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு என்னை அழைத்துச் சென்று, அவரிடம் ஏ.பி.ஜனார்த்தனம் அறிமுகப்படுத்தினார்.
இந்தப் பையன், நம் இயக்கத்தில், திராவிட மணியினுடைய தயாரிப்பு. இவர் மேடைப் பேச்சு பேசுவார் என்று அறிமுகப்படுத்தினார்.
நானோ சின்ன பையன், மாணவன். சிங்கம் போன்ற தோற்றத்தில் உள்ள பெரியாரைப் பார்த்தவுடன், ஓர் அச்சமும், வியப்பும், எல்லா உணர்வுகளும் கலந்தது போன்று இருந்தது.
அப்போது எத்தனையாவது படிக்கிறீங்க? என்று கேட்டார் பெரியார்.
நான்காவது படிக்கிறேன் என்றேன்.
அப்பா என்ன செய்கிறார்? என்றெல்லாம் கேட்டார்.
பெரியாரைப் பார்த்து வியந்தேன்!
நானோ சின்னப் பையன், ஆனால், பெரியார் அவர்கள் என்னிடம், ‘‘என்ன படிக்கிறீங்க?’’ என்று மரியா தையோடு, பாசத்தோடு கேட்டு, என் குடும்பத்தினர் குறித்து விசாரித்ததைப் பார்த்து வியந்து போனேன்.
அடுத்தது, கூட்டத்தில் பெரியார் அவர்கள் உரையாற்றும்போது, ‘‘இராமசாமி நாய்க்கா, பேசாதே?’’ என்று குரல் எழுப்பியவரை, ஆத்திரப்பட்டு தாக்கச் சென்ற தோழர்களை அமைதிப்படுத்திவிட்டு, பதில் சொன்னதைப் பார்த்தும் வியந்து போனேன்.
திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில், பெரியார் அவர்கள் புகைவண்டிக்காக காத்திருந்தபோது, அருகில் மணியம்மையார் அவர்களும் இருந்தார். தோழர்களும் பெரியாரைச் சுற்றி இருந்தார்கள்.
அப்போது பெரியார் அவர்கள், ‘‘பாலத்தில் வரும்போது, ரிக்ஷாவை திருப்பச் சொன்னேனே, எதற்கு என்று யாராவது கேட்டீர்களா?’’ என்றார்.
அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஒருவர் மட்டும் பதில் சொன்னார், ‘‘என்ன காரணம் என்று எங்க ளுக்குத் தெரியவில்லை. இருட்டாக இருந்தது’’ என்றார்.
பெரியார் கையில் இருந்த கைப்பெட்டியைத் திறந்து காட்டினார். அதில் இரண்டு செருப்பு இருந்தது.
‘‘என்னங்க அய்யா’’ என்று தோழர்கள் கேட்டனர்.
கைரிக்ஷாவில் நான் வரும்போது, ஒரு செருப்பு என்மீது வந்து விழுந்தது. ஒரு செருப்பை வீசிவிட்டு, இன்னொரு செருப்பை மட்டும் வைத்துக்கொண்டு வீசியவர் என்ன செய்வார்? என்று யோசித்துக் கொண்டே வந்தேன். அதற்குப் பிறகுதான் ரிக்ஷாவை திருப்பச் சொன்னேன்.
நான் நினைத்தது வீண்போகவில்லை. இன்னொரு செருப்பும் என்மீது வந்து விழுந்தது. டக்கென்று எடுத்து வைத்துக்கொண்டேன் என்றார்.
‘‘செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைக்கும்!’’
அந்த இடத்தில், பல ஆண்டுகள் கழித்து, 1971 இல் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, பெரியாருக்கு சிலை அமைத்துத் திறந்து வைத்தார். அந்த கூட்டமும் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் நான் வரவேற்புரை யாற்றினேன். அப்போது நான் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்தேன்.
கவிஞர் கருணானந்தன் அவர்கள் ஒரு கவிதை எழுதினார்,
‘‘செருப்பொன்று போட்டால்
சிலை ஒன்று முளைக்கும்!’’ என்று.
சாரங்கபாணி, வீரமணியாக இன்றைக்குப் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்
கடலூரில் பெரியார் சிலை இப்போதும் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு கல்வெட்டு இருக்கும். அந்தக் கல்வெட்டில், ‘‘இதே இடத்தில்தான், 1944 ஆம் ஆண்டு பெரியார்மீது செருப்பு வீசப்பட்டது. அதற்குப் பிறகு 1971 ஆம் ஆண்டு சிலை எழுப்பப்பட்டது’’ என்று பொறிக்கப்பட்டு இருக்கும்.
இந்தத் தாக்கங்கள் எல்லாம் சேர்ந்துதான், சாரங்கபாணி, வீரமணியாக இன்றைக்குப் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.
(தொடரும்)