சுமதி பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் கேன்பெர்ரா
ஏறக்குறைய 80 ஆண்டு கால பொது வாழ்க்கை, சுயமரியாதையின் ஆணிவேராகிய திராவிடர் கழகத்தின் தலைவர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என்னும் மூன்று சகாப்தங்களின் நீட்சி, ஆசிரியர் கி.வீரமணிக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்.
ஒரு தலைவர் தன் தொண்டர்களுக்கும், தன் மக்களுக்கும் இரண்டு இன்றியமையாத பரிசுகளை கொடுப்பார். தன் நேரம், தன் அறிவு. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக, ‘பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா’விற்காக தனது நேரத்தையும், அறிவையும் செலவு செய்து கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் நிர்வாகக் குழுவில், அதன் தலைவர் தோழர் அண்ணா மகிழ்நனுக்கு அடுத்து, ஆசிரியருடன் அதிக நேரம் செலவிடக் கூடிய சந்தர்ப்பம் எனக்குத் தான் அமைந்தது (அல்லது அமைத்துக் கொண்டேன்).
இரண்டு முழு நாள்கள். ஆசிரியரின் பணி மற்றும் ஓய்வு நேரத்தை தவிர மற்ற அனைத்து நேரத்திலும் அவருடன் இருந்தேன். கருப்புச் சட்டை அணிந்து கம்பீரமாய் பேசும் திராவிடர் கழகத்தின் தலைவரைத் தான் பார்த்திருக்கிறேன். இந்த முறை, கருப்புச் சட்டை அணியாத ஒரு பெரியாரின் தொண்டருடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கருப்புச் சட்டை அணிந்த அவரிடம் நிறைய அரசியல் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால், கருப்புச் சட்டை அணியாத பெரியாரின் தொண்டரிடம் நான்கு முக்கிய வாழ்க்கை பாடங்களைக் கற்றுக் கொண்டேன்.
வாழ்க்கைப் பாடங்கள்
பாடம் 1: அய்யாவை வெளியில் அழைத்து செல்ல காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று விட்டேன். அய்யா கிளம்பிக் கொண்டிருந்தார். அன்று முழுவதும் அவருடன் இருப்பதை தாண்டி வேறு வேலைகள் எதுவும் இல்லை. அய்யா வரும் வரை தோழர் அருள்மொழியுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். வெறும் பத்தே நிமிடங்கள் தான் தாமதம். என்னைப் பார்த்தவுடன் அய்யா இரண்டு கரங்களையும் கூப்பி ‘வாங்க’ என்று சொன்னார். அடுத்து அவர் சொன்ன வார்த்தை ‘சாரி’.
ஒருவர் எந்த உயரத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு பெரிய இயக்கத்திற்கு வேண்டுமானாலும் தலைவராய் இருக்கலாம். எவ்வளவு அறிவு முதிர்ச்சி பெற்றவராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு வயது முதிர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தன்னால் ஒரு சாமானியனுக்கு ஒரு சிறு இடைஞ்சல் ஏற்பட்டாலும், அதற்காக மனம் திறந்து மன்னிப்புக் கேட்டாக வேண்டும் என்ற பண்பை வேறு எந்த தலைவர் செயலில் காட்டிவிட முடியும்!
பாடம் 2 : ஆசிரியரின் நினைவுக் கூர்மை அனைவரும் அறிந்ததே. நினைவுக் கூர்மை அதிகம் உள்ள பல பேரை சந்தித்திருப்போம். ஆனால் அந்த நினைவுக் கூர்மையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியரிடம் தான் கற்றுக் கொண்டேன், இரண்டு சம்பவங்களின் மூலம்.
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தைச் சுற்றிப் பார்க்க ஆசிரியருடன் சென்றேன். அனைத்தும் பார்த்து விட்டு கடைசியாக நாடாளுமன்றத்தின் மேற்தளத்திற்குச் சென்றோம். அங்கிருந்து பார்த்தால் ‘War Memorial ‘ என்று சொல்லக்கூடிய ராணுவ வீரர்களின் நினைவுக் கட்டடம் இருக்கும். நாடாளுமன்றத்திற்கு War Memorial கும் இடையில் ஒரு வெள்ளை மாளிகை இருக்கும். அது பழைய நாடாளுமன்றம். அதை ஆசிரியருக்குக் காட்டிவிட்டு, மதிய உணவருந்திவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து கொண்டோம். சாயங்காலம் ஆசிரியரை தேசிய நூலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். கிளம்பும்போது கொஞ்ச தூரத்தில் ‘இந்த இடத்தில் தானே பழைய நாடாளுமன்றம் இருக்கிறது’ என்றார். நான் பதில் ஏதும் சொல்லவில்லை. ஏனென்றால் எனக்கு விடை தெரியாது. அவர் சொல்லி ஓரிரு நிமிடங்களில் வெள்ளை மாளிகை வந்தது. GPS உதவியால் வழி கண்டுபிடித்து வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த எனக்கு, ஊருக்கு வந்த ஒரே நாளில் இந்த இடத்தில் தான் பழைய நாடாளுமன்ற கட்டடம் இருக்கும் என்று கணித்த ஆசிரியரின் மதிநுட்பத்தை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
தீர்வு காணும் வேகம்
அடுத்த நாள் ஆசிரியர் வேறு மாநிலத்திற்கு கிளம்புகிறார். விமான நிலையம் சென்று விட்டோம். பெட்டிகளின் எடையை சரிபார்க்கும் பொழுது தான் கவனித்தோம், இயக்கத்தின் பதாகையை இன்னொரு வாகனத்தில் தவற விட்டுவிட்டோம் என்று. அந்த வாகனத்தை அழைத்து உடனே அதை கொண்டு வரச் சொன்னோம். வாகனம் பாதி தூரம் போயிருந்தது. அது திரும்பி வருவதற்குள் விமானம் புறப்பட்டுவிடும். என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிப்பதற்குள் குறுக்கிட்ட ஆசிரியர் ‘அதான் வேறு ஒரு தோழர் நாளை அங்கே வருவதாக சொல்லி இருந்தாரே. அவரிடம் எடுத்து வரச் சொல்லலாம்’ என்றார். அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பிப்பதற்குள்ளேயே அதற்கான தீர்வை அவரால் மட்டுமே சொல்ல முடியும்.
தேடல் முக்கியம்
பாடம் 3: ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் ‘Magna Carta ‘ என்ற ஆவணம் இருக்கிறது. முதன்முறையாக சில சட்டங்கள் இயற்றுவதற்கான மன்னரின் ஆணை அது. சட்டத்தை விட மன்னரும், அவரது அரசும் உயர்ந்தவர்கள் இல்லை என குறிப்பிடும் ஆவணம். அந்த ஆவணத்தின் கீழ் 1215 என்று எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்த ஆசிரியர் ‘இது என்ன ஆண்டா?’ என்று கேட்டார். அவரை சுற்றி நின்ற நாங்கள் ‘இல்லை அய்யா. அது ஆணை எண்ணாக இருக்கும்’ என்றோம். ஒன்றும் சொல்லாமல் அந்த நிழற்படத்தில் இருந்ததை படித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு வரியில் 1215ஆம் ஆண்டு என்றிருந்தது. ‘ஆண்டு தான்’ என்றார்.
ஒரு தகவல் நமக்கு தெரியவில்லை என்றால், அது இதுவாகத் தான் இருக்கும் என்று நாமே அனுமானிக்காமல், அதன் உண்மைத் தன்மை என்ன என்று தெரியும் வரை நம் தேடலை நிறுத்தி விடக் கூடாது என்று சொல்லாமல் உணர்த்தினார்.
பாடம் 4: அய்யா எவ்வளவு சுறுசுறுப்பானவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த சுறுசுறுப்பு பன்மடங்கு கூடுமே என்றால், அது இரண்டே சமயங்களில் தான். ஒன்று மேடைப் பேச்சின் போது. மற்றொன்று நூல்களை பார்க்கும் பொழுது.
எங்கெல்லாம் நூல்கள் இருந்தனவோ அங்கெல்லாம் அவ்வளவு நேரம் நூல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். பார்ப்பதென்றால், ஒவ்வொரு நூலின் தலைப்பு, ஆசிரியர் பெயர். அந்த நூல் ஆர்வத்தைக் கொடுத்தால், அதை கையில் எடுத்து பின் அட்டையில் இருக்கும் அந்த நூலின் சாராம்சத்தைப் படிப்பார். இவ்வளவு நேரம் தான் என்றெல்லாம் இல்லை. அனைத்து நூல்களையும் பார்த்த பின் தான் அந்த இடத்தை விட்டு வெளியேறுவார்.
புத்தகங்களின் மீதான காதல்
ஆஸ்திரேலியா தேசிய நூலகத்திற்குச் சென்ற பொழுது, அங்கே இலவசமாக ஒரு சிறிய நோட்டு புத்தகமும், பென்சிலும் இருந்தன. அதில் ஒன்றை எடுத்து கொண்ட அய்யா, அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நூல்களில் தனக்குப் பிடித்த நூலின் பெயரையும், ஆசிரியரின் பெயரையும் குறிப்பெடுத்துக் கொண்டார்.
அடுத்த நாள் விமானநிலையத்தில், விமானம் தாமதம் ஆனது. உடனே அங்கிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து விட்டார். அங்கே வைக்கப்பட்டிருந்த நூல்களில் ஒரு நூலை தேர்வு செய்தார். அதற்கு பணம் செலுத்தச் சென்ற பொழுது அங்கு பணி செய்து கொண்டிருந்த பெண் , ‘இது அருமையான நூல். அதிகம் பேர் இந்த நூலைத் தான் வாங்குவார்கள். இது ஒரு series . ஒரு நூலை படித்தால், அதன் தொடர்ச்சியாக மற்ற நூல்களையும் வாங்கிவிடுவாய்’ என்றார். அதை அப்படியே அய்யாவிடம் வந்து சொல்லியதும், அந்த நூலைத் தான் எப்படி தேர்ந்தெடுத்தேன் என்று விளக்கினார்.
‘நூலின் ஆசிரியரின் பெயரைப் பாருங்கள். இது ஜப்பானிய பெயர். ஜப்பானிய மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்படும் நூல்கள் பெரும்பாலும் நன்றாக இருக்கும். இந்த நூல் வெளியான ஆண்டைப்பாருங்கள். பல ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் இந்த நூல் இன்னும் Best Seller இடத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் இந்த நூல் நன்றாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்’ என்றார்.
அந்த நூலை வாங்கி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டோம். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க, எங்கள் பேச்சை கவனித்துக் கொண்டே 4 பக்கங்களை படித்து முடித்துவிட்டார்.
ஆசிரியர் ஒரு பல்கலைக் கழகம்
ஊருக்கு வந்த அன்றைக்கு ஒரு நூல் பரிசளித்தேன். தங்கும் விடுதிக்கு சென்று மதிய உணவருந்தி கொஞ்சம் ஓய்வு எடுத்த அய்யாவை சாயங்காலம் சந்திக்கும் பொழுது , ‘நீங்கள் கொடுத்த நூல், சங்கி சிந்தனை கொண்ட ஒருவர் எழுதிய நூல்’ என்றார். அந்த சிறிய இடைவெளியில் அறிமுக உரையை படித்து முடித்து, அதன் சாரத்தையும் அறிந்து வைத்துள்ளார்!!!
“செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்” எனும் குறள் நெறியை இதை விட வேறு எப்படி சிறப்பாக சொல்லிவிட முடியும்!
வெறும் இரண்டே நாள்களில் நான்கு முக்கிய பாடங்களை கற்றுக் கொடுத்த அய்யா, வெறும் ‘ஆசிரியர்’ மட்டுமல்ல. அவர் ஒரு ‘பல்கலைக்கழகம்’!!!!
பி.கு : ஆஸ்திரேலியா தேசிய நூலகத்தில் ஆசிரியர் அய்யாவின் மூன்று நூல்கள் இடம்பெற்றிருந்தது தனிச் சிறப்புடையதாகும்.