சென்னை, மார்ச் 27 பயணிகளே ரீசார்ஜ் செய்யும் வகையிலான ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிமுகம் செய்தார்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டை மூலமாகவும் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி சார்பிலான ‘சிங்கார சென்னை’ பயண அட்டையை தலைமைச் செயலகத்தில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் உள்ளிட்டோர் முன்னிலையில் அமைச்சர் சிவசங்கர் நேற்று (26.3.2025) அறிமுகம் செய்தார்.
மெட்ரோ ரயில், மாநகர பேருந்து ஆகியவற்றில் பயணிக்க உதவும் இந்த அட்டை ரூ.100-க்கு வழங்கப்படுகிறது. இதில் ரூ.50 மதிப்பிலான கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும், இணையவழி சேவை, அலைபேசி செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியின் விற்பனை மய்யங்கள் மூலமாக எளிதாக ரீசார்ஜ் செய்யவும் முடியும்.
பின்புறம் உள்ள க்யூஆர் குறியீடை ஸ்கேன் செய்து பயணிகளே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். முக்கிய பேருந்து நிலையங்களில் இந்தப் பயண அட்டை விற்பனை செய்யப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
35 இருக்கைகளுடன் சென்னையில் இயக்கப்படும் 625 மின்சாரப் பேருந்துகள்
மே மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னை, மார்ச் 27 மின்சார பேருந்துகள் தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஜெர்மன் வங்கியின் நிதியுதவியின் கீழ் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மொத்த ஒப்பந்த முறையில் (ஜிசிசி) மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் ஒப்பந்தம் விடப்பட்டது.
மின்சார பேருந்துகள்
அதன்படி, முதல்கட்டமாக ஏசி, குளிர்சாதன வசதியில்லா பேருந்து என 625 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கை உட்பட 35 இருக்கைகள் இருக்கும்.
இந்த பேருந்துகளுக்கான மின்னேற்றம் உள்ளிட்ட வசதிகளுக்காக அடையாறு, அயனாவரம் உள்ளிட்ட 5 பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. ஓட்டுநர் மற்றும் பராமரிப்புப் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் கவனித்துக் கொள்ளும். மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த நடத்துநர் மட்டும் பேருந்தில் பணியில் இருப்பார்.
மே மாதம் முதல்
அமைச்சர் ஏற்கெனவே கூறியபடி, பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும். தாழ்தளப் பேருந்துகளாக இருப்பதால் முதியோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பேருந்துகள் தற்போது மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஆய்வில் இருக்கிறது. ஒப்புதல் வழங்கிய வுடன் மே மாதம் முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி பகுதியில் தாமிரபரணி ஆறு மாசுபடுவதை தடுக்கும் வகையில் சிறப்புத் திட்டம்
மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் தகவல்
திருநெல்வேலி, மார்ச் 27 திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆறு மாசுபடுவதை தடுக்கும் வகையில் ரூ.55.72 கோடி மதிப்பிலான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மாநகராட்சியின் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவல கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 2025-2026-ஆம் நிதியாண் டுக்கான ரூ.2.77 கோடிஉபரி பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
தாமிரபரணி ஆறு
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டுள்ள சிறப்பு மற்றும் புதிய திட்டப் பணிகள் விவரம்:
* திருநெல்வேலி மாநகராட்சி பகுதி களில் தாமிரபரணி ஆறு மாசு படுவதை கட்டுப்படுத்தும் பணிகளை, அரசு மானியமாக வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.55.72 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப் பட்டு செயல்படுத்தப்படும்.
* 100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ. 3 லட்சம் ஊக்க தொகையாக வழங்கப்படும்.
* மாநகராட்சி பள்ளிகளில் மாண வர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த சதுரங்கம், பேட் மிட்டன், ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சி வகுப்புகள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி பயன்பாட்டில் உள்ள பூங்காக்களை பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் நோக்கில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
* திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் ரூ.1.5 கோடியில் பிராணிகளுக்கான எரிவாயு தகன மேடை அமைக்கப்படும்.
* பொதுமக்கள் மாநகராட்சிக்கான சொத்துவரி மற்றும் குடிநீர் வரிகளை எளிதில் மாநகராட்சிக்கு செலுத்த ஏது வாக நடமாடும் வரி வசூல் வாகனம் ரூ.25 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும் மற்றும் பல சிறப்பம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்று இருந்தன.