கோடைகால மின் தேவையை சமாளிக்க 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 27 ‘‘கோடை மின்தேவையை சமாளிக்க 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்’’ என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்

அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்த ஆண்டு கோடை காலத்தில் மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 20,800 மெகாவாட் அளவு அதிகபட்ச மின்தேவை ஏற்பட்டது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மின்தேவையைப் பூர்த்தி செய்ய தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும். ஒரு யூனிட் ரூ.8-இல் இருந்து ரூ.9 என்ற விலையில் வாங்கப்படும்.

கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. 393 துணைமின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு அதில், 250 துணைமின் நிலை யங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இப்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வடசென்னை நிலை-3, உடன்குடி, உப்பூர் ஆகிய அனல்மின் நிலையங்கள் மூலம் 7 ஆயிரம் மெகாவாட்டும், நீரேற்று மின்திட்டம் மூலம் 14,500 மெகாவாட்டும், பேட்டரி ஸ்டோரேஜ் மூலம் 2 ஆயிரம் மெகாவாட்டும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மின்வாரிய எதிர்கால இலக்கை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் அடைய, அதற்கான உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின்சாரம்

கோடை காலத்தில் எவ்வித மின்தடையும் ஏற்படாமல், சீரான மின்விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான பூங்கா அமைக்க, இதுவரை 2,300 ஏக்கர் நிலங்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
மின்வாரியத்துக்கு இந்த ஆண்டு ரூ.338 கோடி அளவுக்குத்தான் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். மின்வாரியத்தின் சொந்த மின்னுற்பத்தி உற்பத்தியை 50 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

முன்னதாக இக்கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ஜெ.ராதா கிருஷ்ணன், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், மின்தொடரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் இந்திராணி, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *