*சேயன் இப்ராகிம்
தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து நிதிஉதவி வழங்கி செயல்படுத்துகின்ற சமக்ரா சிக்ஷா அபியான் என்ற திட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை தனது பங்களிப்பை தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை. தமிழகக் கல்வி அமைச்சர் நேரில் சென்று சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்திய பின்னரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சருக்கும் பிரதமருக்கும் கடிதங்கள் எழுதிய பின்னரும் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்திட்டால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே பேசினார்.
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வித் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இரு மொழிக் கொள்கையைக் கடந்த 57 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறைப்படுத்தி வருகின்ற தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. புதிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இதனை ஏற்க முடியாதென தமிழ்நாடு அரசுதெளிவாகத் தெரிவித்து விட்டது. எவ்வளவு நிதி இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவாகவே அறிவித்து விட்டார்.
தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் இருப்பது குறித்து எதுவும் கூறவில்லை. மாறாக தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அவர்களின் வாதமும் நமது பதில்களும்
1. தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பள்ளிகளிலும், தனியார்கள் நடத்துகின்ற பள்ளிகளிலும் இந்தி மொழி கற்பிக்கப்படுகின்ற போது, அரசுப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கற்றுக் கொடுக்க ஏன் மறுக்க வேண்டும்? என்பது அவர்களது முதன்மையான கேள்வியாகும்.
தமிழ்நாட்டில் இப்போது இருக்கின்ற திமுக அரசும் சரி, இதற்கு முன்னர் பொறுப்பில் இருந்த அதிமுக, திமுக அரசுகளும் சரி இருமொழிக் கொள்கையையே கடைப்பிடித்து வந்தனர்.
மக்கள் இதனை நன்றாகத் தெரிந்து தான் அவர்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த் தியுள்ளனர். இருமொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த மக்களின் Mandate அவர்களுக்கு இருக்கிறது. எனவே தங்களது அரசின் நேரடி உதவி பெற்று இயங்கி வருகின்ற அரசுப் பள்ளிகளில் அவர்கள் இந்தியைக் கற்பிக்கவில்லை. மும்மொழிக் கொள்கையை நாங்கள் நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்று கூறி வரவிருக்கின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் பாஜக ஈடுபடட்டும். மக்கள் அந்தக் கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்து ஆட்சிக்கு வந்தால் பள்ளிக் கூடங்களில் இந்தி மொழியைக் கற்பிக்க வழிவகை செய்யட்டும்.
2. இந்தி மொழியைக் கற்றுக் கொள்வதில் என்ன தவறு? ஒரு மொழியைக் கூடுதலாகக் கற்றுக் கொள்வதில் என்ன தவறு? ஒரு மொழியைக் கூடுதலாக மாணவர்கள் படிப்பதை ஏன் தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்? என்பது அவர்களின் இரண்டாவது கேள்வி.
இன்னொரு மொழியை அதுவும் இந்தி மொழியைக் கற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்தி மொழியைப் படிக்க விரும்புகின்ற மாணவர்கள் அம்மொழியைக் கற்றுக் கொள்ள தமிழ்நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்திப் பிரச்சார சபை மூலமாகப் பயின்று ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மாணவர்கள் சான்றிதழ் பெற்று வருகிறார்கள். ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி, ஒன்றிய அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவற்றிலும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்தி கற்கின்றனர். இதனை தமிழ்நாடு அரசு தடை செய்யவில்லையே!
3. சென்னையைத் தாண்டி வடக்கே சென்றால் இந்தியில்தானே உரையாட வேண்டியதிருக்கிறது. கழிப்பறைக்குச் செல்ல வேண்டு மானாலும் இந்தி மொழி தெரிய வேண்டுமே! என்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ரயிலில் ஒருவன் இந்தி மொழியில் திட்டினால் அதனைப் புரிந்து கொள்ளவாவது இந்தி தெரிய வேண்டாமா? என்கிறார் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வடநாட்டில் வேலை பார்க்கச் செல்ல வேண்டுமானால் இந்தி மொழி தெரிய வேண்டாமா? என பாஜகவினரும் இந்தி ஆதரவாளர்களும் கேள்விகள் எழுப்பினர். ஆனால் தற்போது தமிழ்நாட்டிலிருந்து வடமாநிலங்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடிச் செல்கின்ற தமிழர்கள் மிக மிகக் குறைவு. வடமாநிலங்களிலிருந்து தான் ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கட்டுமõனத் தொழில்களிலும், பனியன் உற்பத்தித் தொழிலிலும் இன்ன பிற தொழிற்சாலைகளிலும் பணியாற்றுகின்றனர். இப்போது நிலைமை மாறி விட்ட காரணத்தால், பாஜகவினர் அதனைப் பற்றி பேசாமல் கழிப்பறைகள் பற்றியும் வசைமொழிகளுக்குப் பதில் சொல்வது குறித்தும் பேசி வருகின்றனர்.
4. இந்தி மொழி தெரிந்திருந்தால் நல்லதுதானே. வட மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்வோருக்கு அம்மொழி அறிவு சாதகமாகத்தானே இருக்கும் என சில அப்பாவிப் பொதுமக்கள் கேட்கின்றனர்.
இந்தக் கேள்வி இன்றையச் சூழலில் சற்றும் பொருத்தமற்றது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு உடலுழைப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்ற வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டா இங்கு வந்தார்கள்? அவர்களுக்கு முன்னர், பல வடஇந்திய சேட்மார்களும், வட்டி வியாபாரம் செய்கின்றவர்களும் தமிழ்நாட்டுக்கு வந்து வெற்றிகரமாகத் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்களே! அவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டா இங்கு வந்தார்கள்? இங்கு வந்து தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டார்கள். மகிழ்ச்சியாகத் தொழில் செய்கிறார்கள். தமிழ்நாடு தங்களுக்குப் பாது காப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்தும், இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று பணியாற்றி வருகிறார்களே! அவர்களெல்லாம் அரபு மொழியைக் கற்றுக் கொண்ட பிறகா அங்கு சென்றார்கள்? சில மாதங்களிலேயே குறைந்தபட்சம் அரபு மொழியில் பேசப்படுவதைப் புரிந்து கொள்ளக் கற்றுக் கொண்டார்கள். உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். தேவை என்று வரும் போது மக்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் விரைந்து கற்றுக் கொள்வார்கள். அது இயல்பாகவே நடக்கும்.
5. நாட்டிலுள்ள பிற மாநிலங்களிலெல்லாம் மும்மொழிக் கொள்கை நடைமுறையில் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் இருமொழிக் கொள்கை ஏன்? தமிழ்நாடு மட்டும் இந்தியை எதிர்ப்பதேன்?இதுவும் பாஜகவினர் எழுப்புகின்ற வினா.
ஏனைய பாளையக்காரர்கள் எல்லாம் ஆங்கிலேய அரசிற்குக் கப்பம் கட்டி கை கட்டி நின்ற போது கட்டபொம்மன் மட்டும்தான் கப்பம் கட்ட மறுத்தான். மைசூர் மகாராஜா ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த போது அருகிலிருந்த சிறீரங்கப்பட்டினம் திப்பு சுல்தான் ஆங்கிலேய அரசிற்கு எதிராகப் போர் தொடுத்து வீர மரணம் அடைந்தான். மானமும் வீரமும் உள்ளவர்கள் அப்படித்தான் செய்வார்கள். அதுபோல்தான் ஏனைய மாநிலங்கள் ஏற்றுக் கொண்ட இந்தி மொழியைத் தமிழ்நாடு ஏற்க மறுக்கிறது. இனமானமுள்ளவர்களும் மொழிமானமுள்ளவர்களும் அப்படித்தான் செய்வார்கள்.
இந்தி பேசுகின்ற மாநிலங்களில் மும் மொழித் திட்டம் இருப்பதாக பாஜகவினர் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும். அங்குள்ள பள்ளிகளில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே உள்ளன. அதிலும் ஆங்கிலம் பெயரளவுக்குத்தான் கற்பிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் பார்த்தால் அந்த மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கையே நடைமுறையில் உள்ளது. வேறு எந்த தென்னிந்திய மொழியும் அல்லது வேறு இந்திய மொழிகளும் அங்கு கற்றுக் கொடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. அங்குள்ள பள்ளிகளில் மூன்றாவது மொழி கற்றுக் கொடுப்பதற்கு மொழியாசிரியர்கள் யாரும் நியமனம் செய்யப்படவில்லை.
ஆனால் தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் கட்டாய இருமொழிக் கல்வி அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் மும்மொழிக் கொள்கை இருப்பதாகச் சொல்லப்படும் (அதுவும் பொய்யான கூற்றுதான்) வடமாநிலங்கள் இருமொழிக் கல்வி கற்பிக்கப்படும் தமிழ்நாட்டை விட எந்த வகையில் முன்னேற்ற நிலையில் உள்ளன? ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தாலே புரியும். பள்ளிக் கல்வியிலும், கல்லூரிக் கல்வியிலும் தமிழ்நாடு மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கிறது. வடமாநிலங்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இந்தி மொழி தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையில்லாத ஒரு மொழி, தேவையில்லாத சுமை. அதை அரசுப் பணத்தில் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை.
6. ஆங்கிலம் அந்நிய மொழி; இந்தி நமது நாட்டு மொழி. எதற்காக ஆங்கிலம் கற்க வேண்டும். அதற்குப் பதில் இந்தி கற்கலாமே எனச் சில வலதுசாரி அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இக்கூற்று சரியா?
ஆங்கிலம் அந்நிய மொழி என்றால் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் மக்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே! ஆங்கிலம் இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இரு நூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது. இன்று வரை அரசு நிர்வாகம் பெருமளவு ஆங்கிலேத்திலேயே நடத்தப்படுகிறது. ஆங்கிலம் அறிவியல் மொழி. உலக இணைப்பு மொழியாகவும் அது இருக்கிறது. அதன் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆங்கிலம் இந்தியாவின் அலுவல் மொழியாக இருந்தால் அதனால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்கள் அனைத்தும் இந்திய மக்கள் அனைவருக்கும் சமமாகவே இருக்கும். இந்தி அலுவல் மொழியானால் இந்தி மொழி பேசுகின்ற மாநிலங்களுக்கு அது சாதகமாகவே இருக்கும். மற்ற மொழி பேசும் மாநிலங்களுக்கு அது பாதகமாக இருக்கும். அந்தந்த மாநிலங்களில் அதனதன் தாய்மொழி, உலக மக்களோடு தொடர்பு கொள்ள ஆங்கில மொழி. இந்த இரு மொழிக் கொள்கையே ஏற்றுக் கொள்ளத்தக்கது. ஏற்றம் அளிக்கக் கூடியது. ஆங்கில மொழி யைப் படித்ததனாலேயே தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களும், பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இன்றைக்கு உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பணியாற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அந்த நாடுகளில் தங்களது திறமையால் முத்திரை பதித்து வருகின்றனர்.
7. நாங்கள் மாநிலங்களிலுள்ள மொழிகளுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கிறோம் எனப் பாஜகவினர் கூறுவதில் உண்மை இருக்கிறதா?
இல்லை. இது வஞ்சகம் நிறைந்த வடிகட்டிய பொய். ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொகை ஒதுக்கப்படுகிறது. ஆனால் மாநில மொழிகளுக்கு (தமிழ் உட்பட) மிக மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தியாவில் சமஸ்கிருத மொழி பேசுகின்ற மக்களைக் கொண்ட எந்த மாநிலமும் இல்லை. அது ஆலய மொழியாகவே இருக்கிறது. அந்த மொழியில் எழுதப்பட்டுள்ள வேத நூல்களைப் பிராமணப் பெண்கள் கூடப் படிக்க முடியாது. அந்நிலையில் அந்த மொழிக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதற்கு எந்தவிதமான நியாயமும் இல்லை. எனினும் ஆர்எஸ்எஸ்ஸின் செயல்திட்டத்தில் இந்தியைப் பொது மொழியாக்க வேண்டும். அதன் பின்னர் படிப்படியாக சமஸ்கிருதத்தை அந்த இடத்திற்குக் கொண்டு போய் நிறைவேற்றும் நோக்கிலேயே ஒன்றிய அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்த வஞ்சக நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக…
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் இருப்பது அதன் ஆணவப் போக்கைக் காட்டுகிறது. பொருளாதாரப் போர் தொடுப்பதன் மூலம் தமிழ்நாடு அரசைப் பணிய வைக்க முடியும் என நினைக்கிறார்கள். ஒன்றிய அரசின் இந்தப் போக்கு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. பள்ளிக் கல்விக்கான செலவு முழுவதும் மாநில அரசின் நிதியிலிருந்தே வழங்கப்படுகிறது. எனவே பள்ளிக் கல்வி யைப் பொறுத்த அளவில் என்னென்ன மொழிகளைக் கற்பிக்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டு. அந்த உரிமையை ஒன்றிய அரசு மறுக்க இயலாது. எனவே சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூபாய் 2152 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகும். இந்தியாவில் 14 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக இருக்கும் போது இந்தி மொழிக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பது ஒருமைப்பாட்டிற்கு எதிரானது. ‘செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுயடையாள்’ என்று இந்தியாவின் பன்முகத் தன்மையை மகாகவி பாரதியார் வியந்து பாடியுள்ளார். செப்பும் மொழி ஒன்றுடையாள் என்ற பலவந்தமான அந்த நிலையை ஒன்றிய அரசு கொண்டு வந்தால், சிந்தனை பதினெட்டு டையாள் என்ற நிலை ஏற்பட்டு விடாதா?
நன்றி: ‘சமரசம்’ 16–31 மார்ச் 2025