50 ஆண்டுகாலமானாலும் யாரும் அசைக்க முடியாது!
சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி உறுதி!
சென்னை, மார்ச் 27 – சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் நேற்று (26.3.2025) பதிலளித்து அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் பேசுகையில்,
பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் எல்லோரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காக, அதாவது அனைவரும் ஜாதி, சமயமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தந்தை பெரியார் அவர்களின் பெயரால் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை உருவாக்கினார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
முதலில் 148 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன.
அதற்குப் பிறகு வந்த அரசு அத்திட்டத்தை செயல்படுத்த வில்லை. அதற்குப் பிறகு 88 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன. 148+88 என 226 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன. நான் இந்தத் துறைக்கு பொறுப்பேற்ற பிறகு, இந்த ஆண்டு 8 சமத்துவபுரங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின்கீழ் சுமார் 20,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த 20,000 வீடுகளும் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் விளங்குகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை இன்னும் 50 ஆண்டுகாலமானாலும் யாரும் அசைக்க முடியாது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ்வாறு அமைச்சர் தமது பதிலுரையில் குறிப்பிட்டார்.