சந்திராயன் திட்டத்தின் மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவால் கல்வியில் மாற்றம் ஏற்படும். செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்றபடி மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தயாராக வேண்டும்.
எளிதான விண்வெளிப் பயணம்
முதலில் விமானப் பயணமே சவாலாக இருந்தது. தற்போது அது எளிதாகிவிட்டது. இப்போது விமானப் பயணம் போல் விண்வெளி பயணமும் எளிதாகிவிட்டது. இந்த பயணங்கள் மிகவும் சகஜமாக நிகழும் வகையில், சுனிதா வில்லியம்ஸ் இதைவிட அதிக நாள்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார்.
பன்னாட்டு விண்வெளி மய்யம் ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்ளும் விதமாக இருக்கிறது. இந்திய விஞ்ஞானிகள் ககன்யான் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்று ஒரு வாரம் தங்கி ஆராய்ச்சி செய்யும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேறும். தனியார் துறையில் ராக்கெட் அனுப்புவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
பெரிய ஏவுதளங்கள் வேண்டும் என்று கிடையாது. குறைந்த எரிபொருள் செலவில் இருந்து அனுப்பக்கூடிய இடமாக குலசேகரப்பட்டினம் இருக்கும். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் குலசேகரப்பட்டணம் செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுனிதா
சுனிதா வில்லியம்ஸ் ஒரு பெண்ணால் விண்வெளியில் எவ்வளவு நாள்கள் இருக்க முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார். பத்து நாள்களில் திரும்பி இருக்க வேண்டியவர், அங்கு இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பன்னாட்டு விண்வெளி மய்யத்தில் தலைமை பொறுப்பு ஏற்று பணிபுரியும் அளவிற்கு உடல் நலம் சிறப்பாக இருக்கிறது.
விண்வெளிக்கு சென்று வருபவர்களுக்கு எல்லாருக்கும் உடல் நல பிரச்சினைகள் இருக்கும். உடலில் பல மாற்றங்கள் இருக்கும். பூமிக்கு வந்தால் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாள்கள் ஆகும்.” என்றார்.