சோழிங்கநல்லூர் கழக மாவட்டம் – மடிப்பாக்கத்தில்
மடிப்பாக்கம், மார்ச் 27- அன்னை மணியம்மையாரின் 106 – ஆம் ஆண்டு பிறந்த நாளும், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினின் 72 – ஆம் ஆண்டு பிறந்த நாளும் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தித் திணிக்கப்படுவதை எதிர்த்தும் சோழிங்கநல்லூர் கழக மாவட்டத்தின் சார்பாக எழுச்சியுடன் தெருமுனைக் கூட்டம் மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் 22.03.2025 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு சோழிங்கநல்லூர் கழக மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமை தாங்கினார். கூட்டத்தில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிட முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட முரசொலி வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் வழக்குரைஞர் தடா ஒ.சுந்தரம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கழக மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் மு.நித்யாநந்தன் வரவேற்புரை ஆற்றிட நிறைவாக நூத்தஞ்சேரி பகுதி கழக நா.குணசேகர் நன்றி கூறினார்.
கூட்டத்திற்கு மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீர பத்திரன், மாவட்ட துணைத் தலைவர் க.தமிழினியன், மாவட்ட மகளிர் அணித் தலைவர் தேவி சக்திவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் த.ஆனந்தன், கழக பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஆர்.கலைச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். இக்கூட்டத்திற்கு பெரிய அளவில் உதவி செய்த தி.மு.க. வட்டச் செயலாளர் எம்.கே.ஜெய், தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அனுகிரக எல்.கண்ணன், திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள் எஸ்.அரி கிருஷ்ணன், வெ.மணிகண்டன். வெற்றி வீரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுதிச் செயலாளர் எஸ்.சுரேஷ் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள், ராதா பாண்டு, ஆர்.சதீஷ்குமார், வழக்குரைஞர் வே.பா.அறிவன், கிருஷ்ணகுமார், திருநாவுக்கரசு, ஆனந்தகுமார், சரவணன், ரமேஷ், சதீஷ் மற்றும் வங்கிப் பணியாளர்கள் அ.கிருஷ்ணன், அருணாசலம், சி.சுப்பிரமணி, புனிதவதி – சந்திரசேகர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அன்னை மணியம்மை யார் கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்:
தந்தை பெரியார் மறைவிற்குப் பின் கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று அய்ந்து ஆண்டு காலம் கழகக் கட்டமைப்பினை கட்டிக் காத்த பெருமை அன்னை மணியம்மையாரையே சாரும். அய்ந்தாண்டு காலம்தான் தலைவராக வழிநடத்தி மறைந்தார். 60 வயது கூட அவருக்கு நிறை வடையவில்லை அப்போது. தனது உடல்நிலையினைப் புறந்தள்ளி கொண்டு தந்தை பெரியாரை நீண்ட காலம் வாழ வைத்தவர் அன்னை மணியம்மையார்.
அய்ந்தாண்டு காலம்:
இரண்டு செய்திகள்
முதல் செய்தி: அன்னை மணியம்மையார் முன்னின்று நடத்திய ராவண லீலா. டில்லியில் ஒவ்வொரு ஆண்டும் ராம லீலா நடத்தி இராவண பொம்மைக்கு தீயிட்டு கொண்டாடும் பழக்கம் இன்றைக்கும் நிலவி வருகிறது. குடியரசு தலைவர் முதல் பிரதமர் தொடங்கி அதிகாரம் படைத்த பலரும் பங்கேற்றுக் கொண்டாடுகிறார்கள். தென்னக மக்களான திராவிடர்களின் தலைவனான இராவணனை எரிப்பது, தென்னக மக்களுக்கு இழிவு என்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இராவண லீலாவை அன்னையார் நடத்தினார். முறையாக பிரதம மந்திரி தொடங்கி அனைவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, சென்னையில் திராவிடர் கழகத்தின் தலைமை யகமான பெரியார் திடலிலேயே நடத்திட முனைந்தார். கருப்புச் சட்டை தோழர்கள் திரளாக வரத் தொடங்கினர். அன்றைய கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் முக்கியப் பொறுப்பாளர்களை முதல் நாள் இரவே தடுப்பு காவல் நடவடிக்கையாக கைது செய்துவிட்டனர்.
பெரியார் திடலுக்கு காவல் ஆணையர் உட்பட காவல்துறைப் பட்டாளம் வந்து விட்டனர். ராமன், சீதை, இலட்சுமணன் பொம்மைகளை எரிப்பதற்கு தயாராகி விட்டார்கள். மணியம்மையாரிடம் காவல் ஆணையர் கேட்கிறார். போராட்டத்தை கைவிடுங்கள் என்று வேண்டியும் உறுதியான மனம் கொண்ட மணியம்மையார் மறுத்து விடுகிறார்.
இறுதியில் காவல் துறை ஆணையர் அன்னையாரிடம் சொல்கிறார். “அம்மா, இப்படி நாங்கள் பெரியார் அய்யா அவர்களிடம் கேட்டிருந்தால் நிச்சயம் எங்களது வேண்டுகோளுக்கு சம்மதம் தெரிவித்து இருப்பார்” என தொடர்ந்து பேசினார்கள். சற்றும் சளைக்காமல் அன்னையார், “ஆம் நான் பெரியார் இல்லையே” என்ற ஒரு வார்த்தையில் பதில் சொல்லி தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவிட்டார். சற்றும் தாமதிக்காமல் தீயிடப்பட்டது. ராவண லீலாவினை எழுச்சியுடன் தோழர்கள் கொண்டாடினர். ராமலீலாவிற்கு எதிர்ப்பு உத்தியாக கொண்டாடினார்கள். அன்னையார் கைது செய்யப்பட்டார்.
அதற்கு முன்பு, ‘தோழர்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, அமைதி காத்து இராவண லீலாவின் நோக்கத்தினை பிறர் உணரச் செய்திட வேண்டும்’ என கட்டளையிட்டார் அன்னையார்! திராவிடர் கழகம் நடத்திய ராவண லீலாவின் காரணத்தை, நியாயத்தைப் புரிந்து கொண்ட வட மாநில பத்திரிகைகள் எழுதின; ‘Why not Ravana Leela?’ வடபுலத்தில் தென்னக மக்களுக்கு – திராவிடப் பெருமக்களுக்கு ஏற்பட்ட இழிவை எதிர்க்கும் வெளிப்பாடுதான் ‘ராவணலீலா’ என புரிய வைத்தவர் அன்னை மணியம்மையார்.
இரண்டாம் செய்தி:
நெருக்கடி நிலை அமலில் இருந்த நேரம். ஒரு கட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கலைக்கப்படுகிறது. அதையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னிலைப் பொறுப்பாளர்கள், தோழர்கள், தடுப்புக் காவல் நடவடிக் கையில் மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆட்சி கலைக்கப்பட்ட நேரத்தில் அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி இருவரும் திண்டிவனம் கூட்டத்தில் இருந்தார்கள். அம்மையார் பேசிக் கொண்டு இருக்கும்போது ஆட்சி கலைக்கப்பட்ட தகவலை துண்டு காகிதத்தில் எழுதி அன்னையாரிடம் ஆசிரியர் காட்டுகிறார்.
படித்த அன்னையார் எந்த வேகத்தில் பேசத் தொடங்கினாரோ அதே வேகத்தில் பேசி கூட்டத்தை முடிக்கிறார். சென்னைக்கு திரும்பு கிறார்கள். பெரியார் திடலுக்குள் நுழையும் பொழுதே காவலர் படை சூழ்ந்திருப்பதைக் கண்டனர். ஆசிரியர் வீரமணி அவர்களைச் சந்தித்த காவல்துறை உயர் அதிகாரி ‘We have come to perform an unpleasant duty’ மகிழ்ச்சியற்ற பணி ஒன்றை செய்திட வந்துள்ளோம்.
அரசியல் காரணங்களுக்காக தலைவர்களைக் கைது செய்யும் பொழுது அப்படித்தான் சொல்வது காவல்துறையினர் வழக்கம். ஆசிரியரை கைது செய்து கொண்டு போனார்களே தவிர எங்கு கொண்டு செல்கிறார்கள் என்ற எந்த தகவலையும் சொல்லவில்லை. கைது செய்யப்பட்ட அனைவருக்குமே அந்த நிலைதான். சிறையில் பல்வேறு அடக்குமுறைகள் நடந்தேறின. இன்றைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மணம் முடித்து சில வாரம் கூட நிறைவடையவில்லை; அவரையும் கைது செய்து அடித்துச் சிறைக் கொட்டடியில், ஆசிரியர் மற்றும் சிலர் இருந்த இருட்டுக் கொட்டடியில் தள்ளப்பட்டார்.
விழுந்தவரை தாங்கிப் பிடித்தார் ஆசிரியர் அவர்கள். தளபதிக்கு ஆசிரியர் சொன்ன ஆறுதல்; இதுதான் “நீங்கள் பொது வாழ்வில் உயர்ந்து செல்ல உள்ளதை அடையாளப்படுத்திடும் தழும்புகள்தான் உங்கள் மீது விழுந்த அடி” என்று தேற்றினார்.
ஏறக்குறைய ஓராண்டு காலம் சிறைவாசம். அப்பொழுது வெளியில் இருந்து இயக்கத்தை நடத்தியவர் அன்னை மணியம்மையார். வெளியில் இருந்தாலும் பல்வேறு அடக்குமுறைகளை, குறிப்பாக பத்திரிகை தணிக்கை என்ற வகையில் பல்வேறு சவாலான சூழல்களை நேர்கொண்டார்.
காரணகாரியமின்றி, தடுப்புக் காவலில் தோழர்களை எப்படி சிறையில் – நீண்ட காலம் அடைத்திட முடியும் என்ற எழுச்சியில் அன்னையார் நேராக உள்துறை அமைச்சராக இருந்த பிரம்மானந்த ரெட்டியைச் சந்தித்தார். சந்தித்து தங்களது கட்சித் தோழர்கள் எந்தவித காரணமும் சொல்லப்படாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்கிறார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, பிரம்மானந்த ரெட்டி கூறுகிறார்:
“உங்கள் கட்சித் தோழர்களை விடுவித்து விடுகிறோம். அதற்கு நீங்கள் ஒன்றே ஒன்றை உறுதிமொழியாக தர வேண்டும் எனச் சொல்லுகிறார்!’ ‘சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும்’ கேட்கிறார் மணியம்மையார். “வேறுஒன்றுமில்லை. நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளித்துவரும் ஆதரவினை திரும்பப் பெற்றுக் கொண்டால் போதும்; உங்களது தோழர்கள் நாளையே விடுவிக்கப்படுவார்கள்” என்றார் ஒன்றிய உள்துறை அமைச்சர்.
சற்றுநேரம் அமைதியாக இருந்து, பின்னர் எழுந்து நின்று பேசினார் அம்மையார். நீங்கள் கேட்கும்படி உறுதிமொழி அளித்தால் தான் எங்களது தோழர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்றால் அப்படிப்பட்ட விடுதலை எங்களுக்கு தேவையில்லை. தி.மு.க.வை ஆதரிக்கும் எங்கள் நிலைப் பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. எங்களது தோழர்கள் ஓராண்டென்ன? அதற்கு மேலும் சிறையில் இருப்பார்கள். அங்கேயே செத்து மடியவும் தயாராக இருப்பார்கள்” எனக் கூறி ராஜ்பவனை விட்டு வெளியில் வந்தார். அப்பொழுது தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த மோகன்லால் சுகாதியா இருந்தார்.
அப்படிப்பட்ட உறுதிப் பாட்டிற்குப் பெயர்தான் ‘மணியம்மையார்’. உறுதிப் பாட்டை துணிச்சலுடன் வெளிப்படுத்து வதற்குப் பெயர்தான் ‘மணியம்மையார்’.
5 ஆண்டுகள் மட்டுமே திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து கழகத் தோழர்களை வழிநடத்தி இன்று கட்டுப்பாடு காத்து போராடும் லட்சிய இயக்கமாக திகழுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தார் அன்னையார் மணியம்மையார் என அவர் உரையாற்றினார்.