நாவலர் இரா. நெடுஞ்செழியன்
இவ்வாறாகத் திராவிட மக்கள் வேண்டாத – அவர்களுக்குப் பயன்படாத – நாட்டிற்குப் பொருந்தாத இந்தியினை சென்னை அரசியலார் பாடத்தில் சேர்த்துவிட்டனர். சேர்க்கும் முறையில் சங்கடம், சஞ்சலம், குழப்பம், நிறைந்திருப்பதை முன்னரே விளக்கிக் காட்டினோம். ‘வடநாட்டிற்கு எப்பொழுதும் பணி செய்து கிடப்பதே எம் கடன்!’ என்ற கொள்கையை ஏற்று நடக்கும் மந்திரிசபை வடநாட்டுத் தலைவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டது. இந்தியைப் புகுத்துவதின் அவசியத்தை எந்த மந்திரியும் இதுவரையில் நேர்மையான காரணங்களால் விளக்கிக் காட்டவில்லை. எப்படிக் காட்டுவார்கள்? அவர்கள்தாம், ‘வடக்கு இடும் கட்டளையை நிறைவேற்றுவதைத் தவிர வேறொன்றறியோம் பராபரமே!’ என்று பராபரக்கண்ணியை உள்ளத்தில் தாங்கி நடக்கும் உத்தமர்களாக இருக்கிறார்களே! மக்கள் கேள்வி கேட்டால் மழுப்புகிறார்கள். மனதில் அச்சம் தோன்றும்போது, மவுன குருநாதர்களாக ஆகிவிடுகிறார்கள், சிறிது விவேகம் தோன்றும்போது.
மூன்றாவது மொழி
அரசியலார் வகுத்திருக்கிற மொழித் திட்டப்படி: – முதல் மொழி ஒன்று. அதுதான் நாட்டு மொழி – அதாவது தமிழ். அதை எல்லோரும் கட்டாயம் கற்றுத் தீரவேண்டும். இரண்டாவது மொழி பல. அதாவது இந்தி, உருது, அராபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் பிற இந்திய மொழிகள். இதில் ஏதேனும் ஒன்றைக் கட்டாயம் கற்றே தீர வேண்டும். மூன்றாவது மொழி ஒன்று. அதுதான் ஆங்கிலம். இதையும் கட்டாயம் கற்றே தீரவேண்டும். இந்த முறை சென்னை மாகாணப் பள்ளிகளில் முதல் மூன்று பாரங்களுக்குமுள்ள மொழிப்பாடத் திட்டமாகும். நான்காவது பாரத்திலிருந்து ஆறாவது பாரம் வரையிலும் இரண்டாவது, மொழிப் பிரிவு இஷ்டப் பாடமாகும்.
பெருந்தன்மை எங்கே?
அதாவது மாணவர்கள் விரும்பினால் ஏதாவது ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளலாம், விரும்பாவிடில் முதல் மொழியையே அதற்குப் பதிலாக மேலுஞ் சில வகுப்புக்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். நான்காவது பாரத்திலிருந்து ஆறாவது பாரம் வரையிலும் வைக்கப்பட்டிருக்கும் பாடத் திட்டமுறை முதல் மூன்று பாரங்களுக்கும் கடைப்பிடிக்கப்படுமாயின், மொழியைப் பொறுத்து அரசியலார்க்குப் பெருந்தன்மை ஏற்பட்டிருப்பதாக ஒப்புக் கொள்ளலாம். அப்படிப்பட்ட பெருந்தன்மை இப்படிப்பட்ட பெரியவர்களுக்கு எப்படி வரும்?
கொல்லைப்புற வழியாக…
ஆகவே தான், மந்திரிசபையார், குறிப்பாகக் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கனார் பரம்பரையாகக் கடைப்பிடித்துப் பழக்கப்பட்ட ‘கொல்லைப்புற’ வழியை இந்தியைப் புகுத்தும் முயற்சியில் பின்பற்றியுள்ளார். முதல் மூன்று பாரங்களுக்கு, இந்தியை, மறைமுகமாக – ஆனால் பாமரர் யாரும் புரிந்து கொள்ளாத வகையில் தந்திரமாகக் கட்டாயப்படுத்தியுள்ளார். இக்காரணத்தை நன்கு புரிந்துகொண்ட இந்தி எதிர்ப்பாளர்கள் ‘இந்தி’ ஏட்டில் இஷ்டப் பாடமாக ஆக்கப்பட்டிருக்கிறதேயொழிய, நடைமுறையில் கட்டாயப் பாடமாகத் தான் இருக்கிறது என்பதை விளக்கி வருகிறார்கள். ஆனால் கோலேந்தும் அமைச்சரிலிருந்து, கொடி தாங்கும் சாதாரணக் காங்கிரஸ் தொண்டன் வரையில் இந்தி இஷ்டப்பாடமே யொழிய கட்டாயப் பாடமில்லை என்று கிளிப்பிள்ளை மாதிரி ஒரே பல்லவி பாடி வருகின்றனர். இந்தி எப்படிக் கட்டாயப் பாடமாக புகுத்தப்பட்டிருக்கிறது என்பதை விளக்கினால் உண்மை புலப்படும்.
சலுகை ஏன்?
அரசாங்கம் இந்தி இஷ்டப்பாடம் என்று உத்தரவிட்டதோடு, பள்ளிதோறும் இந்தி ஆசிரியர் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற மறைமுகமான உத்தரவையும் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடைமுறை ஆண்டிற்கு ஆயிரம் இந்திப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வேண்டும் என்றும், அவர்களுக்குப் பாதியளவு சம்பள உதவி (கிராண்ட்) செய்ய அரசாங்கம் தயாராயுள்ளது என்றும் வெளியிட்டுள்ளது.
இரண்டாவது பிரிவு மொழிகளில் இந்திக்கு மட்டும் இவ்வளவு சலுகை ஏன்? மற்ற மொழிகளுக்கு மட்டும் இத்தகைய சலுகைகள் காட்டாததன் காரணம் என்ன? இரண்டாவது பிரிவில் அடங்கிய மொழிகளில் இந்தி சமஸ்கிருதம் இருமொழி தவிர்த்த மற்ற மொழிகளில் ஒன்றைப் படிக்க மாணவன் விரும்புவானேயானால், அந்த மொழி பயிலுவதற்கான வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்ற காரணங்காட்டி மாணவனை இந்தி மொழிப் பக்கம் திருப்புகிறார் தலைமையாசிரியர்.
வேறு வழியில்லாமல்…
சமஸ்கிருதத்தை எடுத்துப் படிக்க மாணவர்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள். காரணம் அதனால் யாது பயனும் கிடையாது என்பதை அவர்கள் நன்கு உணர்கிறார்கள். இந்த நிலையில் இரண்டாவது பிரிவில் ஏதாவதொன்றைக் கட்டாயமாகப் படித்துத் தீரவேண்டுமென்று ஏற்படும்போது, இந்தி மொழி ஒன்று மட்டுமே வசதி படைத்ததாய் விளங்குகிறது. வேறு வழியில்லாத காரணத்தால், மாணவன் இந்தியை இரண்டாவது மொழியாக எடுத்துப் படிக்கும்படி கட்டாயப் படுத்தப்படுகிறான். இந்தி எடுத்துப் படிக்க அவன் சற்றுத் தயங்கினால், ஆசிரியர்களால் பயமுறுத்தப்பட்டு இந்தி வகுப்பில் கட்டாயமாகச் சேர்க்கப்படுகிறான்.
கட்டாயப்படுத்தி…
இந்த நிகழ்ச்சிகள் சாதாரணமாக எல்லாப் பள்ளிகளிலும் அன்றாடம் நிகழ்ந்து வருகின்றன. இந்தி, சமஸ்கிருதம் இரண்டிற்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால் ஏனைய மொழிகள் எதற்கும் எந்தப் பள்ளிக்கூடத்திலும் ஆசிரியர் இல்லை. எனவே தான் தந்திர முறைகளால் இந்தி மறைமுகமாகக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது என்று எதிர்ப்பாளர்கள் தெளிவுபடக் கூறுகிறார்கள்.
இந்தியை எதிர்த்து நிற்கும் பேரறிஞூர்களும், சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாகாண மாநாட்டில் கலந்துகொண்டு தங்கள் வெறுப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம் மொழிப் போராட்டம் மட்டுமல்ல; அது கலாச்சாரப் போராட்டம், பிரிவினைப் போராட்டமுமாகும் என்பதைத் தலைவர்கள் எல்லோரும் வலியுறுத்தியிருக்கிறார்கள். திரு.வி.க. அவர்கள் பேசும்போது,
“இந்தி நுழைப்பு மொழிப் போராட்டமல்ல; கலைப் போராட்டம், கலாச்சாரப் போராட்டம் என்பது நன்கு விளங்கும். தமிழ் மொழிக்குள்ள பண்பில், லட்சத்தில் ஒரு பங்கு கூட இந்தி மொழியில் இல்லை! இல்லை!! இல்லை!!! என்பதை அமைச்சரே ஒப்புக் கொள்ளுவர்” என்று கூறினார். பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பேசும்போது கூட,
கலாச்சாரப் போராட்டம்
“இந்தி மொழிப் போராட்டம் மட்டுமல்ல; கலாச்சாரப் போராட்டம், மானாபிமானப் போராட்டம் என்று கூடச் சொல்வேன். இது உரிமை வேட்கைப் போராட்டமுமாகும். இந்தப் போராட்டத்தின் போது எந்த ஒரு திராவிடனாலும், எந்த ஒரு உண்மைத் தமிழ் மகனாலும், தூங்கிக் கொண்டிருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றும் பேராசிரியர் மறைமலை அடிகள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி இந்திக் கட்டாய நுழைவு தமிழர் பண்பாட்டைக் கெடுக்கும் என்று கூறினார். தோழர்கள் சி.என்.அண்ணாதுரை, புரட்சிக்கவிஞர், ம.பொ.சிவஞானம், நாரண துரைக்கண்ணன் ஆகியோர் போராட்டத்திற்குப் போர் முரசுகொட்டி அரசியலாரின் இந்திக் கல்வித்திட்ட முறையைக் கண்டித்தார்கள். போராட்டம் துவங்கிவிட்டது! வெற்றி புரி நோக்கி நடந்து கொண்டிருக்கிறது.
திணிக்கும் கொடுமை
கல்வித் திட்டமாவது கல்வித் துறை அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. முதல் மூன்று பாரங்களில் பயிலும் இளஞ்சிறார்கள் மீது மூன்று மொழிகளைக் கட்டாயமாகத் திணிக்கும் கொடுமை உலகில் வேறு எந்த காட்டுமிராண்டி நாட்டிலுங்கூட இருக்காது.
மூன்று மொழிகள் ஏற்றப்படும் உள்ளம் எதையும் சரிவரத் தாங்கமுடியாமல் வளைந்து போகுமே! இதை உணரும் தன்மை ஏனோ கல்வி அமைச்சருக்கு இல்லாமற் போயிற்று! வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று மணிநேர அளவில் மூன்று ஆண்டுகளில் (விடுமுறை நாட்கள் ஏறத்தாழ பாதி ஆண்டுகள் போக) பயிற்சி பெறும் பாடம் எவ்வளவு தேர்ச்சியை அறிந்துவிடப் போகிறது! அந்தக் குறுகிய காலப் பயிற்சி மனதில் தொடர்ந்து தங்கியிருக்குமா என்பதும், பயன்படக் கூடிய அளவில் வளம் பெற்றதாக இருக்குமா என்பதும் அய்யப்பாடேயாகும்.
அறிவுடைமையா?
இம்மாதிரியாகப் பல வழிகளிலும் குறையுடைய இந்தி பாடத்திட்டத்தைப் புகுத்துவது மந்திரி சபையின் வீண் வீம்பையும், ஆணவத்தையும் காட்டுவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறதேயொழிய, அறிவுடைமையைப் புலப்படுத்துவதற்குரிய அறிகுறியாக விளங்கவில்லை.