அக்கம் பக்கம் அக்கப் போரு!

3 Min Read

குண்டக்க மண்டக்க குத்து வாங்கிய ‘ராஜ்பவன்’!

திரைப்பட இயக்குநர் நடிகர் ரா.பார்த்திபன் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது சர்ச்சையானது. ஆளுநர் மாளிகையில் பார்த்திபனா? என்று அதைப் பலரும் எதிர்பாராத நிலையில், நிகழ்ச்சி முடிந்து நேற்று அது குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் பார்த்திபன்.
எதுக்கு கூப்பிட்டு குத்து வாங்கிக் கொண்டுள்ளது ஆளுநர் மாளிகை? என்று தான் எண்ணத் தோன்றுகிறது. உள்குத்துடன் பேசியவற்றை புரிந்தால் புரிந்துகொள்ளட்டும் என்று அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவதுதான் வழக்கம். ஆனால், எந்தெந்த இடத்தில் ஊமக்குத்தாய்க் குத்தினேன் என்று பட்டியல் போடுவதெல்லாம் வேற ரகம்.
சடகோபம் கொடுத்தால் எல்லா தமிழர்களும் சாய்ந்துவிடுவார்கள் என்று எண்ணிக் கொண்டதோ ஆரியம்? ’பொத்துனாப்புல மொத்திவிட்டு’ வந்ததை எப்படி பார்த்திபன் விளக்குகிறார் பாருங்கள்!

“நேற்றைய ஆளுநர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண் டேன். உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக “தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்” என்று துவங்கி “தமிழக ஆளுநருக்கு மரியாதை” எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும் பயன்படுத்தினேன். “பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போல” என்று சொல்லும் போது ஒருவேளை அப் பையன் சரியாக படிக்காதவனாயிருந்தால் உள்ளுக்குள்ள உறுத்தும்! அப்படித்தான் தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனியில் நான் பேசுவதை கேட்ட நீதியரசர் சந்துரு ஒருமுறை “இது ஒரு வகையான positive politics’’ என்றார்.

பேச்சின் இடையே எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் ‘கவர்னர் பீடி’ என்று கலாய்த்தேன் , சபை சலசலப்பை உருவாக்கி குலுங்கியது. அவர் புரியாமல் பார்த்தார் sorry to say this எனக் கூறி அதையே ஆங்கிலத்தில் கூற அவருக்கு புரிந்திருக்கும், புகைந்திருக்கும்! தொடர்ந்து எங்கப்பாவை பீடி குடிக்கிறதை நிறுத்துங்கன்னு சொன்னா ”கவர்னரே பீடி குடிக்கும் போது நான் குடிச்சா என்னன்னு” கேப்பாரு என்று கேட்பாரற்று பேச, காட்டாறாக சிரிப்பொலி. பீடிக்கு கவர்னர் பீடி என பெயர் வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றேன். காச நோயை கூட குணப்படுத்திவிடலாம் இந்த காசுநோய் உயிர்க்கொல்லி என்றேன். ”பணக்காரன் ஏழைக்கு உதவுவதை விட, ஏழைக்கு ஏழைதான் அதிகமாக உதவுகிறான்” என்பதாக கூறி “கவர்னருக்கு கொஞ்சம் தமிழ் புரியும் மேலும் தமிழை அவர் கற்று வருகிறார் என்று அவர் P A கூறினார். எனவே அவர் தமிழன் பெருமை உணர தமிழின் செழுமையை வாசிக்க புத்தகம் வழங்கினேன். தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை காப்பதற்கு நன்றி” எனக் கூறி விடை பெற்றேன்.
இந்(தி)த கோட்டைக்குள் சென்று ஆனந்தமாய் 1-தமிழ் 2-தமிழ் 3-தமிழ் என செம்மொழியில் கர்ஜித்து விட்டே வந்தேன். வாய்ப்பை ஒதுக்கி ‘சங்கீ’தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல். இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: பத்ம விருதோ, கட்டு கட்டாக காந்திகளோ- ஏன்? ஒரு கட்டு கவர்னர் பீடியோ கூட தட்சணை யாகப் பெறவில்லை. மாறாக, நான் என் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு அம் மாளிகையில் தமிழ்க் கொடியேற்றி விட்டு வந்தேன்! ஒவ்வொருவருக்கும் சொல்லும் பாணியென்று ஒன்று உண்டு. அதனால் மட்டுமே அவரை வசைமொழியில் சங்கீ’தமாய் பாடக்கூடாது.”
இந்த முறை வடிவேலுவுக்குப் பதில் ’குண்டக்க மண்டக்க’ மாட்டிக் கொண்டது கவர்னர் மாளிகை.

– குப்பைக்கோழியார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *