முனைவர் வா.நேரு
தலைவர்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
தந்தை பெரியார் அவர்கள் காந்தியடிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டு காங்கிரசில் பணியாற்றிய காலத்தில் ,ஈரோட்டில் நடைபெற்ற மறியல் போரில் அவரின் மனைவி நாகம்மையாரும்,தங்கை கண்ணம்மாளும் கலந்து கொண்டதும்,காந்தியார் தன் போராட்டத்தை நிறுத்தவேண்டுமென்றால் ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்களிடம் (நாகம்மையார்,கண்ணம்மா) கேட்கவேண்டும் என்று கூறியதும் வரலாறு. அதுபோல வைக்கம் போராட்டத்தில் அன்னை நாகம்மையாரின் பங்களிப்பும் மற்ற பெண்களின் பங்களிப்பும்.பெண்கள் பிரச்சாரத்திற்கு வருவதும், உண்மையை எதற்கும் அஞ்சாமல் எடுத்துக் கூறுவதும் கடந்த 100 ஆண்டு காலமாக நடைபெறும் நிகழ்வு.
தொண்டறம்
‘கருஞ்சட்டைப்பெண்கள்’ என்ற நூலை ‘புதிய குரல்’ அமைப்பின் நிறுவனர் தோழர் ஓவியா எழுதியிருக்கிறார்.அதில் சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்பகால கட்டங்களில் இருந்த மூவலூர் இராமிர்தம் அம்மையார் உள்ளிட்ட ஆளுமைகள் பற்றி மிகச்சிறப்பாக எடுத்துக்காட்டி இருப்பார்.மார்ச் மாதம் என்பது நாத்திக இயக்கத்தின் தலைவராக இருந்த ஒரே பெண்மணியான அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளும்(மார்ச் 10), நினைவு நாளும்(மார்ச் 16) வருகின்ற மாதம்.அன்னை மணியம்மையார் அவர்கள் பற்றித் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் தொண்டறம்’ என்னும் அற்புதமான நூலைக் கொடுத் திருக்கிறார்கள். வாசிக்க,வாசிக்க அன்னை மணியம்மை யாரின் தொண்டறத்தை நினைத்து நினைத்து நெகிழ்ந்துபோகுமளவிற்கு தரவுகளைக் கொண்டுள்ள நூல் அது.
நான் திராவிடர் கழகத்தில் இணைந்து பணியாற்றும் இந்த 40 ஆண்டுகால இயக்கப்பணியில் எத்தனையோ கருஞ்சட்டைப் பெண்களைச் சந்தித்திருக்கிறேன். சில பேரோடு சேர்ந்து மேடைகளில் உரையாற்றி இருக்கிறேன்.அவர்களின் உள்ளத்தின் உரத்தையும் எதற்கும் துணிந்து அவர்கள் பணியாற்றும் தன்மையையும் கண்டு வியந்திருக்கிறேன். திராவிடர் கழகத்தின் பொருளாளராக இருந்த மறைந்த அம்மா டாக்டர் பிறைநுதல் செல்வி போன்றவர்கள், மருத்துவம் படித்து டாக்டராக பெரும் பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அதை விடுத்து,விருப்ப ஓய்வில் வந்து முழு நேரக் கழகப் பணியாளராக பணியாற்றிய நிகழ்வெல்லாம் கண்ணில் வருகிறது,எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பது நிறைவேறுவதற்காக,தந்தை பெரியாரின் மனித நேயக்கொள்கை மண்ணில் பரவவேண்டும் என்பதற்காக அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையை ஏற்றுப் பணியாற்றிய கருப்பு மெழுகுவர்த்திகள் எல்லாம் கண்முன்னே நினைவுகளாக வருகிறார்கள்.அம்மா மனோரஞ்சிதம்,அம்மா பார்வதி,அம்மா திருமகள் இறையன்,மதுரை அன்னத்தாயம்மாள் தேவசகாயம் எனப் பலர் நினைவுகளில் நிற்கிறார்கள்.இன்றைக்கும் வாழும் தோழர்கள் தங்கமணி குணசீலன்,பொறியாளர் இன்பக்கனி,கண்மணி தமிழரசன் போன்றோரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
உண்மையைச் சொல்கிறோம்
மறைந்த அய்யனார்குளம் பவுன்ராசா அவர்கள், உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள தனது ஊரில் திராவிடர் கழகம் மிக வலுவாக அமைந்ததற்குக் காரணம் திராவிடர் கழகத்தில் அன்றைக்கு இருந்த பேச்சாளர் கண்மணி தமிழரசன் என்பார். நாங்கள் சிறுவர்கள் இணைந்து அய்யா பெரியகுளம் ம.பெ.முத்துக்கருப்பையா, போடி இரகுநாகநாதன் ஆகியோரின் வழிகாட்டுதலோடு திராவிடர் கழகக்கூட்டத்தை முதன்முதலில் நடத்தினோம்.அதில் சிறப்புரை கண்மணி தமிழரசன் அவர்கள்.ஜாதி ஆதிக்கம் மிகுந்த எங்கள் ஊரில் கண்மணி தமிழரசன் பேச ஆரம்பித்தார். எங்கிருந்தோ ஒரு கல் வந்து கண்மணி தமிழரசன் அவர்களின் நெற்றியில் விழுந்தது.நெற்றியில் அடிபட்டு இரத்தம் வழிய ஆரம்பித்தது. சட்டென்று தன் சேலையின் முந்தானையின் ஒரு பாகத்தைக் கிழித்து நெற்றியில் இரத்தம் வழியும் இடத்தில் கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.இரண்டு மணி நேரம் பேசினார்.கனலாய்ப் பேசினார்.உங்களுக்காகத்தான் பேச வந்திருக்கிறோம். ஆனால் எங்களை இரத்தக் காயப்படுத்தி விட்டீர்கள்.. பரவாயில்லை. நாங்கள் பயந்து ஓட மாட்டோம். உண்மையைச்சொல்கிறோம் கேளுங்கள் என்று பேசினார்.நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திராவிடர் கழகத்தில் இணைந்தனர். நாம் வளர்ந்தோம் என்பார்.
மகளிர் பட்டாளம்
இப்படித்தான் இன்றைக்கு இருக்கும் மகளிர் அணி பொறுப்பாளர்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் இருக்கும்.இன்றைய கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் தோழர் அருள்மொழி அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன் தோழர் சொக்கர் ஏற்பாடு செய்த எழுமலைக் கூட்டத்தைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசினார். நெகிழ்வாக இருந்தது.
இன்றைக்கு திராவிடர் கழகத்தில் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஒரு பெரும் மகளிர் பட்டாளம் இருக்கிறது.கொள்கைக்காகத் துணிந்த பட்டாளம்.எதுவரினும் வரட்டும் என்று உண்மையைச்சொல்லும் பட்டாளம்.கொள்கைப் பகைவர்களுக்கு அஞ்சாப் பட்டாளம்.
இதில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் எதையும் மென்மையாக அதே நேரத்தில் மிக அழுத்தமாக கொள்கை சொல்லும் வழக்குரைஞர் தோழர் அருள்மொழி,சங் பரிவாரங்களை உறங்க விடாமல் பணியாற்றும் துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் தோழர் சே.மெ.மதிவதினி,மாநில மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் துணிச்சல் மிக்க தோழர் பா.மணியம்மை,மாநில மகளிர் அணிச்செயலாளராக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.அதிகாரி களத்தில், கருத்தில் துணிச்சலோடு எதையும் எதிர்கொண்டு பணியாற்றும் தோழர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன் வரிசையில் இருக்கின்றார்கள்.
பாராட்டுக்குரிய செயல்பாடுகள்
மற்றும் மாநில மகளிர் அணி பொருளாளராக திருப்பத்தூர் தோழர் அகிலா எழிலரசன், குடியாத்தம் ந.தேன்மொழி,மத்தூர் இந்திராகாந்தி,வேலூர் ஈஸ்வரி சடகோபன்,தஞ்சை அ.கலைச்செல்வி,திருவாரூர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மதுரை ராக்கு தங்கம், நாகர்கோவில் கிருஷ்ணவேணி, கடலூர் ரமாபிரபா, புதுச்சேரி விலாசினி ராஜூ,கோவை கலைச்செல்வி, தென்காசி கவுதமி தமிழரசன்,திருச்சி அம்பிகா கணேசன், காரைக்குடி பேரா.மு.சு.கண்மணி,போடி பேபி சாந்தா இரகு நாகநாதன், சென்னை வெற்றிச்செல்வி பூங்குன்றன், தாம்பரம் இறைவி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பொறுப்பாளர் பசும்பொன் செந்தில்குமாரி என்று பல மேனாள், ,இந்நாள் மாநில மண்டலப்பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் பாரட்டுக்குரியன.
அதைப்போல பகுத்தறிவு எழுத்தில் முத்திரை பதிக்கும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத்தலைவர் ம.கவிதா, மாநிலத் துணைச்செயலாளர் புதுச்சேரி வி.இளவரசி சங்கர், ஒசூர் செல்வி, தருமபுரி சங்கீதா, பெரியார் செல்வி, இலக்கியா, பானு ரேகா, அம்மா வேலுர் கலைமணி எனப் பலர் நம் பாராட்டுக்குரியவர்கள்.இவர்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துகளும் வணக்கங்களும் நன்றிகளும்.
அவமானங்களுக்கும், அவதூறுகளுக்கும் அவச் சொற்களுக்கும் அச்சப்படாமல், ஊடகப் பேச்சாளர்களாய், பேச்சாளர்களாய், எழுத்தாளர்களாய், கவிஞர்களாய், சமூக வலைத்தளப் பதிவாளர்களாய், மாநிலப் பொறுப்பாளர்களாய், பொதுக்குழு உறுப்பினர் களாய், அயராமல் பாடுபடுகின்ற களப் பணியாளர்களான தங்கள் அனைவரையும் தந்தை பெரியாரின் ,அன்னை மணியம்மையாரின்,தமிழர் தமிழர் ஆசிரியரின் ஒட்டுமொத்த துணிச்சலும் வழி நடத்தும்.
களத்தில் நிற்கும் எங்கள் மகளிரணித் தோழர்களே, என்றென்றும் கொள்கைத்துணையாய் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.வணங்குகின்றோம்.பாராட்டுகிறோம்.உங்கள் கொள்கைப் பாய்ச்சலுக்கு உறுதுணயாய் நிற்கின்றோம்.