காஞ்சிபுரம், மார்ச் 26- 16.3.2025 அன்று மாலை 5.30 மணியளவில், காஞ்சிபுரம் மாவட்ட ஆலடி வீதி கழகக் காப்பாளர் ச. வேலாயுதம் இல்லத்தில், அன்னை மணியம்மையார் நினைவு நாள் வீரவணக்கம், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் ஆகியவை, காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமையில் நடைபெற்றது. காஞ்சி கதிரவன் கடவுள் மறுப்பு கூறினார்.
வரவேற்புரை
காஞ்சிபுரம் மாவட்ட கழக இளை ஞரணி அமைப்பாளர் வீ. கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
தலைமையுரை
மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி, அன்னை மணியம்மையார் நினைவு நாள் குறித்தும் இயக்க வளர்ச்சிப்பணிகள் குறித்தும் காஞ்சிபுரத்தில் தமிழர் தலைவரால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு படி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.
அன்னையார் படத்திறப்பு
கழக ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி பன்னீர்செல்வம், அன்னை மணியம்மையார் படத்தைத் திறந்து வைத்தார். தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி வாழ்க! என்ற ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அன்னை மணியம்மையாரின் தனித்துவமான இராவணலீலா நிகழ்ச்சி குறித்தும் அன்னை மணியம்மையார் ஆற்றிய தொண்டுகள் குறித்தும் தமிழர் தலைவரால் வடிக்கப்பட்ட சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களைச் செயற்படுத்துவது குறித்தும் கிளைக் கழகங்கள் உருவாக்குதல் குறித்தும் இயக்க ஏடுகளுக்கு சந்தா சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.
மாநில இளைஞரணி செயலாளர் உரை
கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, இளைஞரணியின் கட்டமைப்பு, பிரச்சாரங்கள், கிளைக் கழகங்கள் உருவாக்குதல் முதலிய செய்திகளை விரிவாக எடுத்துரைத்தார்.
தோழர்கள் கருத்துரை
தலைமை செயற்குழு உறுப்பினர் பு. எல்லப்பன், மாவட்ட காப்பாளர்கள் டி.ஏ.ஜி. அசோகன், ச. வேலாயுதம், மாவட்ட கழகச் செயலாளர் கி. இளையவேள், மாநில இளைஞரணி துணைசெயலாளர் மு. அருண்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா. இளம்பரிதி, மாவட்ட மகளிரணி அ. ரேவதி, வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் எஸ். செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் இ. ரவீந்திரன், போளூர் பன்னீர்செல்வம், தோழர் லெனின், தோழர் அருண்குமார் ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்தனர். தோழர் கமல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நிறைவுரை
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா. கதிரவன், கழக வளர்ச்சிக்கான பிரச்சாரங்கள் குறித்தும் மாணவர் கழகம், இளைஞரணி கட்டமைப்பை வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ‘விடுதலை’ பரப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழர் தலைவரின் செயற்கைக்கோள் குறித்தும் உரையாற்றினார்.
தீர்மானங்கள்
சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களைச் செயற்படுத்துவது, மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது, கிளைக் கழகங்கள் உருவாக்குவது, விடுதலை ஏட்டுக்கு சந்தா சேர்ப்பது, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது, கொள்கை துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, காஞ்சிபுரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு படிஅமைத்து ஒழுங்குபடுத்துவது என்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகளிரணித் தோழர் அ.ரேவதி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.