பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம். அதில் ஈடுபட்டு, சிறைக்கு வந்திருந்தார் காட்டூர் முருகேசன் என்பவர், அவருக்குத் திருமணமாகிப் பதினைந்தே நாள்கள்தான் ஆகியிருந்தன. தன் மனைவி யையும், நண்பர் ஒருவரையும் சிறைக்கே வரச் சொல்லி, “எனக்காகக் காத்திருக்காதே, உன் வாழ்க்கை வீணாகிவிடும். நீங்கள் திருமணம் செய்து வாழுங்கள்” என்று வாழ்த்தி வலியுறுத்தி அனுப்பி வைத்தார்.
விடுதலை ஆனபின்னும், அவர்களைச் சந்தித்தால், அவர்கள் வருந்தக் கூடுமே என்று கருதி, சாகும்வரை ஊருக்கே செல்லாமல், திருச்சி பெரியார் மாளிகையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்தார் முருகேசன்.
பெரியார் தன்னை நம்பியே இயக்கத்தைத் தொடங்கியவர். ஆனால், அவருக்குக் கிடைத்த தொண்டர்கள், தோழர்கள் தனித் தன்மையான வர்கள். அதற்குக் காரணம் உண்டு. உத்தமமான தலைவர் கிடைக்கும்போது, உண்மையான தொண்டர்கள் இருக்கவே செய்வர்.
ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளைக் கொளுத்தும் போராட் டத்தை அறிவித்தார் பெரியார். அதுவரை இதற்குத் தண்டனை வழங்க சட்டம் இல்லை. சட்டம் போட கெடு கொடுத்தார். அந்தப் போராட்டத்திற்காக என்றே தனிச் சட்டத்தை அன்றைய மதராஸ் மாகாணம் நிறைவேற்றியது. யார் ஆட்சியில்? யாரைப் பெரியார் அரியணையில் அமரவைத்து, அந்த ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்று கடுமையாக அனைவரையும் எதிர்த்துக் கொண் டாரோ, அந்தக் காமராஜர் ஆட்சியில்! அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்தால் மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை. அழுத்தம் கொடுத்து நிறைவேற்றச் செய்தது அன்றைய ஒன்றிய அரசு.
தண்டனை இது தான் என்று தெரிந்த பின்னர், பத்தாயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3000 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது அரசு. சிறைச்சாலைகள் நிரம்பி விட்டதாக போராட்டக்காரர்களை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை பல சிறைகளில் ஏற்பட்டது. பெரும்பாலானோர் மீது வழக்கு பதியப்படவில்லை. பொதுவெளியில் போராடியவர்களை வேனில் ஏற்றி, வழியிலேயே டீ குடிக்கச் சொல்லி, இறக்கிவிட்டுப் போன போலீசை விரட்டிச் சென்று வழிமறித்து ‘எங்களையும் கைது செய்யுங்கள்’ என்று கோரியவர்கள் அரியலூர் வாலாஜா நகர் தோழர்கள். அதில் ஒருவரான தங்கராஜ் இன்னும் உயிருடன் இருக்கிறார்.
வேலூர் சிறையில் இருந்த 17 வயது கீழவாளாடி பெரியசாமி என்ற இளைஞரை, அங்கு ‘விசிட்’ வந்திருந்த அன்றைய ஆளுநர் விஷ்ணுராம் மேதி, “இளைஞனாக இருக்கிறாய். உன்னை விடுதலை செய்யச் சொல்கிறேன், வெளியில் சென்றுவிடு” என்று சொன்னபோது, “நான் மீண்டும் கொளுத்திவிட்டுச் சிறைக்குத் தான் வருவேன்” என்று சொன்னார் பெரியசாமி.
எத்தனை எத்தனைத் தொண்டர்கள்? அவர்கள் கொளுத்தியது அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் கூட இல்லை. அதன் பிரிவுகள் எழுதப்பட்ட ஒரு தாள். அதற்காக மூன்றாண்டுகள் தண்டனையையும் விரும்பி அடைந்தார்கள். 18 பேர் சிறைச்சாலையிலும், இன்னும் 30-க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களிலும் இறந்துபோனார்கள். இத்தனையும் நடந்து, இவ்வளவையும் இழந்த பின்னும், இன்னும் உறுதியாகக் காமராசரை அடுத்த 10 ஆண்டுகள் பெரியார் ஆதரித்தார். அவர் தொண்டர்களும், பெரியார் சொல்கிறார் என்பதற்காக கொஞ்சமும் சஞ்சலமில்லாமல் ஆதரித்தார்கள்!
போராட்டத்தில் ஈடுபடுவோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெரியார் ஓர் அறிக்கை விடுவார். காவல்துறையினர் தாக்கினால், அடிப்பதற்கு வசதியாகக் குனிந்து முதுகைக் காட்ட வேண்டும். நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்க்கக் கூடாது; பெயரைத் தெரிந்துகொள்ளக் கூடாது. அது தனிப்பட்ட பகைமையாகத் தோன்றும். அவர் அரசாங்கத்தின் வெறும் கருவிதான் என்பதைத் தொண்டர்களுக்குப் புரியவைத்துப் போராட்டத்திற்கு அனுப்பியவர் அவர். திராவிடர் இயக்கம் ஓர் இனவெறி இயக்கமாக மாறியிருக்கக் கூடும் – அதைப் பெரியார் வழிநடத்தாமல் போயிருந்தால்.
சொத்துக்கு உயில் எழுதி வைப்பதைப் பார்த் திருப்போம். கொள்கைக்கு உயில் வைத்தவர்கள் பெரியார் தொண்டர்கள். என் இறப்பிற்குப் பிறகு என் உடலுக்கு எந்தச் சடங்கும் செய்யாமல், என் மனைவிக்கு எந்தச் சடங்கும் செய்யாமல், எரியூட்ட வேண்டும் அல்லது புதைக்க வேண்டும் என்று எழுதி கையொப்பமிட்டு, சாட்சிக் கையெழுத்து பெற்று, தங்கள் புகைப்படத்துடன் வீட்டில் பிரேம் மாட்டித் தொங்கவிட்டவர்கள் பலர்.
சில ஆண்டுகளுக்கு முன், “என்னுடைய மறைவிற்குப் பின், என் உடலைப் பார்த்து மரியாதை செய்ய வருவோர், மாலை வாங்கிவரக் கூடாது. அதற்குப் பதிலாக, அதற்குச் செலவிடும் காசை, என் உடல் அருகில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் போடுங்கள். அது பெரியார் கொள்கைப் பரப்புதலுக்குப் பயன்பட வேண்டும்” என்று வாழும்போதே வேண்டுகோள் விடுத்தார் பெரியார் பெருந்தொண்டர் அம்மையார் ஏ.பி.ஜெ.மனோரஞ்சிதம்! அப்படியே நடந்தது, அதன் பின்னர் பலராலும் அது தொடர்ந்தது.
கூட்டம் நடத்த வேண்டுமென்றால், ஊரெங்கும் நன்கொடை திரட்டுவது வழமை. ஆனால், குறித்த தேதியில் கூட்டம் நடத்த இயலவில்லை என்றதும், தஞ்சையில் கடை கடையாக ஏறி, வாங்கிய நன்கொடையைத் திருப்பிக் கொடுத்த நாணயத்தைத் தன் தோழர்களுக்கு உருவாக்கியவர் பெரியார்.
எப்போதும் இயக்கம், கொள்கை, சமூகநீதி, பெரியார் என்றே சிந்திப்பவர் ஆசிரியர் கி.வீரமணி. பெரியாரின் கொள்கையை ஏற்று பத்து வயதில் தொடங்கி, இன்று 92 வயதிலும் அதிலிருந்து சிறிதும் வழுவாமல் நடைபோடுவது அவரின் தனிச் சிறப்பு. கொள்கைக்காகத் தன் குடும்பத்திற்கு வரவேண்டிய சொத்தை இழந்திருக்கிறார். எத்தனையோ இழிசொல்லுக்கும், பழிப்புக்கும் ஆளாகியிருக்கிறார். ஆனாலும் ‘பொதுவாழ்க்கைக்கு வருகிறவன், நல்ல பெயர் எடுக்க ஆசைப்படக் கூடாது’ என்று பெரியார் சொன்னதைத் தானும் கடைப்பிடித்து, தன் தோழர்களுக்கும் அதையே பாடமாகக் கற்றுக் கொடுக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யாவை மேடையில் வைத்துக் கொண்டே ஒருமுறை சொன்னார். “நீங்கள் எப்போது அழைத்தாலும் வருகிறார்கள். நன்கொடைகளைத் தருகிறார்கள். வரிசையில் நின்று பணம் செலுத்தி புத்தகங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். இவ்வளவுக்கும் இவர்களுக்கு ஒரு பதவி, பணம் எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஆச்சரியமாக இருக்கிறது” என்று!
அரசியலுக்குச் செல்லாமல், பதவியை நாடாமல், ஓர் இயக்கம் பிற அரசியல் கட்சிகளுக்கு நிகராக இயங்கிக் கொண்டே இருக்கிறதென்றால், அதற்கு இந்த மனவலிமையும், நாணயமும், பற்றும், இயக் கத்தின் மீதுகொண்ட உறுதியும் தானே காரணம். இதுதானே விசுவாசம்?
– ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
துணைப் பொதுச்செயலாளர்,
திராவிடர் கழகம்
நன்றி: ‘அந்திமழை’ –
பிப்ரவரி 2025