ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் நடைபெற்ற ‘‘பன்னாட்டு மகளிர் உரிமை நாள்’’ விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்!
மெல்போர்ன், மார்ச் 25 ‘‘மனித சமத்துவத்திற்காக பாடு படுகின்ற இயக்கம்தான், சுயமரியாதை இயக்கம். இந்த இயக்கம் உலகம் முழுவதும் தேவை’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில்
‘‘பன்னாட்டு மகளிர் உரிமை நாள்!’’
கடந்த 22.3.2025 அன்று ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சார்பில் நடைபெற்ற ‘‘பன்னாட்டு மகளிர் உரிமை நாள்’’ விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
நாம் கூடியிருக்கின்ற இந்த நிலப்பரப்பின் பாரம்பரிய உரிமையாளர்களும், காப்பாளர்களும், இம்மண்ணின் மைந்தர்களே என்பதை நான் ஏற்றுக்கொள்வதோடு, இந்த நாட்டின் பூர்வக் குடிமக்களான கடந்த கால, நிகழ்கால மூத்தோருக்கு என் வணக்கத்தைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
அன்பார்ந்த தோழர்களே, பெருமதிப்பிற்குரிய பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் என்ற ஆற்றல்மிகு இந்த அமைப்பு ஒரு சமூக மாற்றத்திற்கான, சமூகப் பாதுகாப்பிற்கான, சகோதரத்துவத்தையும், மானுடத்தையும் காப்பாற்றவேண்டும் என்ற உணர்வு படைத்த கொள்கைகளைக் கொண்டு மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பெரியாரும், அம்பேத்கரும், பெண்ணியத்தையும், மனிதநேயத்தையும்தான் வலியுறுத்தினார்கள்!
அடிப்படையில், இந்த அமைப்பினுடைய கொள்கையை, பெரியாரும், அம்பேத்கரும் எதை வலியுறுத்தினார்கள் என்று ஒரு வரியில் சொல்ல வேண்டும், தத்துவத்தை விளக்கவேண்டும் என்று சொன்னால், அந்தத் தத்துவம் “பெண்ணியமும், மனிதநேயமும்’’தான். சுயமரியாதை இயக்கம் இதற்காகத்தான் தோன்றியது.
நீங்கள் இந்தக் கூட்டத்தை அருமையாக ஏற்பாடு செய்து, அமைதியாக, நீங்களும் உற்சாகமாகி, எங்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். கடல் கடந்து வந்து இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எனக்கு இது மிகப்பெரிய ஒரு வாய்ப்பு.
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
டாக்டர் மிஷேல் ஆனந்தராஜா எம்.பி., டாக்டர் கரீனா கார்லண்ட் எம்.பி., ஜான் முலே எம்.பி., என்று மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கே வந்து சுருக்கமாகப் பேசினார்கள். நாடாளுமன்றத்தில் பேசுகின்ற உறுப்பினர்களுக்கு, அவைத் தலைவரின் அனுமதி வேண்டும். சுருக்கமான நேரம்தான் அவர் கொடுப்பார். அப்படி இல்லையென்றால், பெல் அடித்துவிடுவார்.
இந்தக் கூட்டத்தினுடைய வெற்றி என்னவென்றால், ‘‘பன்னாட்டு மகளிர் உரிமை நாள்’’ விழாவில், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில், ஒருவர் ஆண்; இரண்டு பெண் எம்.பி.,க்கள். மகளிர்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.
மகளிரின் உரிமைக்காகப் போராடுகின்ற இந்த இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்!
இது மகளிரின் உரிமைக்காகப் போராடுகின்ற இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். நிகழ்ச்சியின் தொடக்கமே நல்ல தொடக்கமாக அமைந்திருந்தது. ஏற்பாடு செய்தவர்களுக்கும், இங்கே வந்து சிறப்பாக கருத்துகளைச் சொன்னவர்களுக்கும், இக்கூட்டத்திற்கு வந்திருப்பவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளபடியே எனக்கு அதிகம் பேசவேண்டும் என்கிற உணர்வு அதிகமாக இருந்தாலும், பேசவேண்டிய அவசியமே இல்லை.
இதுதான் எங்களுடைய கடைசித் தேர்வு என்றார் தாயுமானவன் பாஸ்கரனார். இங்கே தேர்வுத் தாளுக்கு யார் மதிப்பெண் போடுவது என்றால், நீங்கள்தான் போடவேண்டும். இது நீட் தேர்வு போன்று இருக்காது.
இங்கே வந்திருப்பவர்கள் எல்லாம், அருமையாகக் கருத்துகளைக் கேட்கிறீர்கள். மகளிர் 61 பேர் இருக்கி றீர்கள். இதைப் பார்த்ததும் எனக்கு மட்டமற்ற மகிழ்ச்சி. ஏற்பாடுகள் செய்த அத்துணைப் பேரையும் பாராட்டு கிறேன்.
விருந்தினராக வரவில்லை, உங்கள் உறவுக்காரர்களாக வந்திருக்கின்றோம்!
இதைப் பார்க்கக் கூடிய எனக்கு எப்படி பெரிய மகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது என்று சொன்னால், நாங்கள் இங்கே வந்து உங்களை யெல்லாம் சந்திக்கின்றபோது, விருந்தினராக வரவில்லை. உங்கள் உறவுக்காரர்களாக வந்தி ருக்கின்றோம்.
திராவிடப் பண்பாட்டினுடைய அடிப்படையே, ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ என்பதுதான்.
‘‘பன்னாட்டு மகளிர் உரிமை நாள்’’ நிகழ்ச்சியில் சில சிந்தனைகளை நாம் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
மற்ற நாடுகளில், மகளிருக்கான உரிமையைப் பாதுகாக்கவேண்டும் என்று சொல்லி, போராடுகிறார்கள். அதன் வெற்றியை இன்னும் அடையவில்லை. போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எந்த மண்ணிலிருந்து இங்கே வந்து, சிறப்பாகப் படித்து, நீங்கள் எல்லாம் நல்ல பணியாற்றி, வாழ்க்கை முறையை சிறப்பாக அமைத்துக் கொண்டி ருக்கின்றீர்களோ, அங்கே நம்முடைய நிலை என்ன?
அருள்மொழி அவர்கள் சொன்னதைப்போல, இந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழா.
இங்கே நம்முடைய பெரியார்- அம்பேத்கர் சிந்தனை வட்டத்தில் உள்ள மகளிர் உரையாற்றியதைக் கேட்டு, மகிழ்ச்சியடைந்தோம்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் தொகுப்பாளர் ராதிகா அவர்கள், ஆங்கிலமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும் மிக அருமையாக செய்தார்.
ஒரு ராதிகா அல்ல; பல ராதிகாக்கள் தயாராக இருப்பார்கள்!
ஒரு ராதிகா அல்ல; அடுத்த முறை நாங்கள் இங்கே வரும்போது பல ராதிகாக்கள் தயாராக இருப்பார்கள் என்பது நிச்சயம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிமுகம் செய்த மிதுன் அவர்களின் ஆங்கிலம் மிகச் சிறப்பாக இருந்தது.
அருள்மொழி, எங்கள் கொள்கைச் சொத்து. ஆனால், இங்கே பல அருள்மொழிகள் உருவாகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகின்றோம்.
அதில் குறிப்பாக சொல்லவேண்டுமானால், இங்கே அருமையாக உரையாற்றிய ரம்யா மனோகரன் அவர்கள்.
பாலைவனத்தில் ஒரு சோலையைப் போன்று…
பெரிய பாலைவனத்தில், ஒரு சோலை போன்று பத்திரிகையாளர் துறையில், அதிகம் பெண்களைப் பார்க்க முடியாது. அப்படியே பெண்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் உயர்ஜாதிப் பெண்களாக இருப்பார்களே தவிர, சமூகத்தில் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற, அடக்கப்பட்ட, உரிமை ஒடுக்கப்பட்ட, மனித உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வர முடியாது. அப்படியே வந்தாலும், வெளியே விடமாட்டார்கள். அப்படியே திறமையின் காரணமாக வெளியே வந்தாலும், எப்படியெல்லாம் அவர்களுடைய காலைப் பிடித்து இழுக்கவேண்டுமோ அல்லது எப்படியெல்லாம் அவர்களை இருட்டடிப்பு செய்யவேண்டுமோ அத்தனையும் செய்வார்கள்.
அருள்மொழிக்கு அறிமுகம் தேவையில்லை!
அதேபோன்று, நம்முடைய ரேணு கிருஷ்ணபாபு அவர்கள்.மிக அருமையாக உரையாற்றினார். முஜிபுர் ரஹ்மான், முஜ்பூர் ரகுமானாகவே பேசினார். அருள்மொழிக்கு அறிமுகம் தேவையில்லை. எங்களால் வளர்க்கப்பட்டு, ஆளாகி, மிகப்பெரிய திறமையினால், எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், சிறப்பாக செய்கின்ற எங்களுடைய கொள்கைச் சொத்துகளில் ஒருவர்.
உங்களையெல்லாம் பார்க்கின்றபோது, எங்களு டைய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்கிறோம். நீங்கள் இந்த நாட்டிற்கு வந்தாலும், எங்கள் உறவுகள் என்கின்ற மகிழ்ச்சி எங்களுக்கு இருக்கிறது.
அதைவிட மிகச் சிறப்பு என்னவென்றால், நம்முடைய தோழர்கள் அரங்க.மூர்த்தி, மற்ற நண்பர்களைப் பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம், உற்சாகமடைகிறோம்.
எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன்
இந்த ஏற்பாடு மிகவும் அற்புதம். இதற்கெல்லாம் காரணமானவர், அடித்தளம் எழுத்தாளர் முத்துக் கிருஷ்ணன் அவர்கள்தான். அடித்தளம், அடிக்கட்டு மானம் என்பது மண்ணுக்குள் புதைந்துதான் இருக்கும். வெளிப்படையாக கண்ணுக்குத் தெரியாது.
தோழர்களே, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா என்கிற பெருமைமிகுந்த இந்த ஆண்டில், ‘‘பன்னாட்டு மகளிர் உரிமை நாள்’’ விழாவை இங்கே கொண்டாடுகின்றோம்.
நம்மவர்கள் எப்படி வெளிநாடுகளுக்குப் போனார்கள்?
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு, முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால், நம்மவர்கள் எப்படி வெளிநாடுகளுக்குப் போனார்கள் என்றால், வெறும் கூலிகளாக, தோட்டத் தொழிலாளர்களாக, அடுத்து பலர் கங்காணிகள் என்று சொல்லக்கூடிய நிலைக்குப் போனார்கள்.
தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்த பெரியார்!
பெரியார் அவர்கள், தமிழ்நாட்டில் என்னென்ன பிரச்சாரத்தைச் செய்து, தமிழ்நாட்டு மக்களைத் திருத்தவேண்டும் என்று நினைத்தாரோ, ஜாதியிலிருந்து காப்பாற்றப்பட, பெண்ணடிமையிலிருந்து காப்பாற்றப்பட அந்தப் பிரச்சாரத்தைச் செய்ய 1929 ஆம் ஆண்டில் பெரியார் மலேயாவிற்குச் செல்கிறார், அன்னை நாகம்மையார் அவர்களோடு. பெரியார் அவர்கள், மலேசியாவில் உள்ள பெரிய பெரிய நகரங்களுக்குச் செல்லவில்லை. முதலில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார்.
அதேபோன்று இலங்கைக்குச் செல்லும்போதும் அதே பணியைத்தான் செய்தார். எங்கே சென்றாலும், தொழிலாளர்களைச் சந்தித்தார். கூலிகள் என்று அவர்களைச் சொல்வார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றி, இன்றைக்கு உங்களையெல்லாம் பார்க்கும்போது, நீங்கள் ஒவ்வொரு துறையிலும், நாங்கள் மற்றவர்களுக்குச் சமமாக இருக்கின்றோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றீர்களே, உங்களுக்கு ஆயிரம் வாழ்த்துகள்! உங்களுடைய பெற்றோருக்கு வாழ்த்துகள்!
எங்களுக்குக் கல்வி கொடுத்தவர் தந்தை பெரியார்தான்!
அண்மையில் ஒரு நண்பர் சொன்னார், ‘‘எனக்கு எங்கப்பா உணவு கொடுத்தார்; எனக்கு எங்கம்மா வந்து சோறு போட்டார். ஆனால், எங்களுக்குக் கல்வி கொடுத்தவர் யார் என்றால், தந்தை பெரியார்தான்’’ என்று மிக அழகாகச் சொன்னார்.
நாங்கள் பதவிக்கோ, பட்டத்திற்கோ ஆசைப்பட்டவர்கள் அல்ல!
உங்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு உற்சாகமாக இருக்கின்றது. நாங்கள் உண்மை யைப் பேசுபவர்கள். நாங்கள் பதவிக்கோ, பட்டத்திற்கோ ஆசைப்பட்டவர்களோ, கைதட்டு தல் வாங்குவதற்காகவோ பேசுபவர்கள் அல்ல.
வெளிநாட்டிற்குப் போய் எத்தனை பேரை சந்திக்கப் போகின்றோம்? எப்படி இருந்தாலும், அவர்களை நாம் சந்தித்து வரலாம் என்றுதான் இங்கே வந்தோம்.
நாங்கள் சுற்றுலாவிற்கு வரவில்லை.
முழுக்க முழுக்க கற்றுலாவிற்காகத்தான் வந்திருக்கின்றோம். தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இருக்கின்றன; தெரி விக்கப்படவேண்டிய செய்திகள் இருக்கின்றன. அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் இருக்கின்றன. அறிவிக்கப்பட வேண்டிய செய்தி கள் இருக்கின்றன.
பெற்றுக்கொள்ள இங்கே வரவில்லை; கற்றுக்கொள்ள வந்திருக்கின்றோம்!
இங்கே பெற்றுக்கொள்ள இங்கே வரவில்லை; கற்றுக்கொள்ள வந்திருக்கின்றோம். அதேநேரத்தில், ஒருபடி தாண்டி, நோய் இருந்தால், அதற்குப் பெரியார் என்ற மாமருந்தை, ஊசியில் செலுத்தி, நீங்கள் பயன் பெறுவதற்குக் கற்றுக் கொடுக்கவும் வந்திருக்கின்றோம்.
என் உற்சாகத்திற்குக் காரணம் என்ன என்று கேட்கிறார்கள்!
இங்கே நான் வரும்போது எனக்கு 92 வயது. நான் இங்கே இருந்து திரும்பிப் போகும்போது, 29 வயது. அதற்குக் காரணம் நீங்கள்தான்.
இங்கே நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது எல்லோரும் கேட்கிறார்கள், ‘‘என்னங்க, இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்களே, அதற்கு என்ன காரணம்?’’ என்று.
வேறு எந்தக் காரணமும் இல்லை, நீங்கள்தான் காரணம். நீங்கள் என்றால், எல்லா இடங்களிலும் உள்ள நம்முடைய தோழர்கள்தான்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய, மானுட நேயத்தினுடைய முதல் குறிக்கோள்!
ஒரு காலத்தில் எங்களை வரவேற்றது பொன்னாடைகள் அல்ல. பெரியாரை வரவேற்றது பொன்னாடைகள் அல்ல. கற்கள்தான். இன்னுங்கேட்டால், பெரியாருடைய இயக்கத்தில், முற்போக்குக் கருத்துகள், புரட்சிகரமான கருத்துகள் என்றால், ஜாதி ஒழியவேண்டும்; பெண்ணடிமை நீங்கவேண்டும். இந்த இரண்டையும் இணைத்து ஒரே வார்த்தையில் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள், ‘‘பிறவி பேதம் ஒழிக்கப்படவேண்டும்.’’ அதுதான், சுயமரியாதை இயக்கத்தினுடைய, மானுட நேயத்தினுடைய முதல் குறிக்கோள்.
பிறவி பேதம் என்று சொல்லுகின்ற நேரத்தில், பல பேர் வெறும் ஜாதியை நினைக்கலாம்.
தொடக்கூடியவன், தொடக்கூடாதவன்
பார்க்கக் கூடியவன், பார்க்கக் கூடாதவன்
படிக்கக் கூடியவன், படிக்கக் கூடாதவன்,
பிராமணன், சூத்திரன் என்று பிரித்து வைத்தி ருந்தார்களே, அதைச் சொல்லுவார்கள்.
தந்தை பெரியார் சொல்லும் பிறவி பேதம்!
ஆனால், தந்தை பெரியார் அவர்கள், இன்னொரு விளக்கத்தைச் சொன்னார். ‘‘நான், பிறவி பேதம் என்று சொல்லும்போது, வெறும் ஜாதியைப்பற்றி மட்டும் சொல்லவில்லை. ஆண் உயர்ந்தவன்; பெண் தாழ்ந்தவள் என்கிற பிறவி பேதத்தையும் சேர்த்துத்தான்’’ என்றார்.
இதுதான் மானிடப் பற்று என்பது. இதற்கு இந்த நாடு, அந்த நாடு என்கிற எல்லை கிடையாது. நாடு என்பது அரசியல் எல்லை உடையது. அந்த அரசியல் எல்லையைத் தாண்டி, உலகளாகிய அளவிற்கு, பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் பரவிக் கொண்டிருக்கின்றது.
சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம்!
சிறுகனூர் என்று திருச்சிக்குப் பக்கத்தில் இருக்கின்ற ஊரில், 30 ஏக்கர் பரப்பளவில், பெரியார் அறக்கட்டளையின் சார்பாக, 100 கோடி ரூபாய் திட்டம் வரையறுக்கப்பட்டு, 95 அடி உயர சிலை – 60 அடி பீடம். அதில் ஆய்வகம், நூலகம், பெரியாருடைய சாதனைகள், அவரால் ஏற்பட்ட மாறுதல்கள்; எப்படிப் பெண்கள் அடிமையாக இருந்தார்கள்; எப்படி மக்கள் ஜாதியால் பிரிக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் விளக்கி, இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சொல்லவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு “பெரியார் உலகம்’’ அமைக்கப்பட்டு வருகிறது.
வரலாறு என்பது என்ன? ‘ரூட்ஸ்’ என்ற புத்தகத்தை பல பேர் அறிந்திருப்பீர்கள். நம்முடைய வரலாற்றை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும்.
நம்முடைய நாட்டில் இன்றைக்கு அருமையான சாலைகள் போடப்பட்டு இருக்கின்றன. அதன் காரணமாக, வேக வேகமாக வருகிறோம். இங்கே யாருமே எவ்வளவு மைல் என்று சொல்வதில்லை. எவ்வளவு நேரம் என்றுதான் சொல்கிறார்கள். அதேபோன்று, நேவிகேட்டரில் எத்தனை நிமிடம் என்பதைத்தான் பார்க்கிறார்கள்.
அறிவு வளர்ச்சி – ஆறாவது அறிவு வளர்ச்சி!
அப்படிப்பட்ட ஒரு வளர்ச்சி இன்றைக்கு வந்தி ருக்கின்றது என்றால், அதற்குக் காரணம் அறிவு வளர்ச்சி – ஆறாவது அறிவு வளர்ச்சி. பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு. ஆகவே, அந்தப் பகுத்தறிவை வளர்க்கவேண்டும்.
வரலாற்றை மறக்கக் கூடாது. நம்முடைய சாதனைகளைப் பெருக்கவேண்டும். தன்னம்பிக்கை இருக்கவேண்டும்.
சுயமரியாதை என்பது, மூடநம்பிக்கைக்கு எதிரான தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடியது. அந்த அடிப்படையில்தான் இந்த இயக்கம் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றது.
இங்கே பார்த்தீர்களேயானால் மகளிர் எல்லாம் மிக அருமையாகப் பேசினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசினார்கள். இந்த நாட்டில் அப்படி பேசுவதுகூட அதிசயமில்லை.
சமூக அநீதியிலிருந்து மீண்டு வருவதுதான் சமூக நீதி!
நம்முடைய நாட்டிலிருந்து வந்தவர்கள்; கிராமத்தி லிருந்து வந்தவர்கள் பேசுகிறார்களே, அதுதான் மகிழ்ச்சி! நேற்று நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கேட்டேன். அங்கே இருப்பவர்களின் பாட்டிகளில் எத்தனை பேர் பட்டதாரிகள் என்று? யாருமே கிடையாது. ஆனால், இன்றைய தலைமுறையினர் நன்றாகப் படித்திருக்கின்றார்கள்.
பெரியார் என்ன செய்தார் என்றால், இதைத்தான் செய்தார்.
சமூகநீதி என்பது என்னவென்றால், இதுதான்.
சமூகநீதிக்கு என்ன விளக்கம் என்றால், சமூக அநீதியிலிருந்து மீண்டு வருவதுதான்.
சுயமரியாதை என்பது தன்மானம். அந்த உணர்வு. எல்லோருக்கும் வரவேண்டும்.
ஜாதீய அமைப்பில் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள். உயர்ந்த ஜாதி பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நாலாஞ்ஜாதி.
சூத்திரப் பட்டம் என்றால் என்னவென்று, மனுதர்மத்தைப் பார்த்தால் இழிவான பட்டம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ஆனால், அதற்கும் கீழே பெண்கள்.
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார். மற்ற நாடுகளில் இருக்கின்ற பேதத்திற்கும், இந்தியாவில் உள்ள பேதத்திற்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.
‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்களாம்!’
அது என்ன வேறுபாடு என்றால், மற்ற நாடுகளில் இன்-ஈக்குவாலிட்டிதான் – சமத்துவமின்மைதான் ஆனால், நம்முடைய நாட்டில், கிரேடட் இன்-ஈக்குவா லிட்டி – படிக்கட்டு ஜாதிமுறை.
பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்கிற படிக்கட்டு ஜாதிமுறைதான். இந்த பேதத்தை யாராலும் மாற்றவே முடியாது.
பகவத் கீதையில், ‘‘நீ என்ன செய்தாலும், வர்ணக் கலப்பு ஏற்படச் செய்யக்கூடாது’’ என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள்’’ என்று கொச்சைப்படுத்திச் சொல்லி யிருக்கிறார்கள்.
சமத்துவத்திற்காகத்தான் இயக்கத்தைத் தொடங்கினார் பெரியார்!
பெரியாருக்கு, மதத்தின்மேலோ, கடவுளின்மேலோ கோபம் வந்து, அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வ தற்காக இந்த இயக்கத்தைத் தொடங்கவில்லை. சமத்துவத்திற்காகத்தான் இந்த இயக்கத்தைத் தொடங்கினார்.
அப்படி இயக்கத்தைத் தொடங்கும்போது, எது எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ, அந்தத் தடைகளையெல்லாம் கொஞ்சம்கூட மனதில் பேத மில்லாமல் அகற்றவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
தந்தை பெரியார், கடவுளையும், மதத்தையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது ஏன்?
அப்போது, அதன் குறுக்கே கடவுள் பெயரைக் கொண்டு வந்து போட்டார்கள்; சாஸ்திர, சம்பிர தாயங்களைக் கொண்டு வந்து போட்டார்கள். மற்ற மற்றவற்றைக் கொண்டு வந்து போட்டார்கள்.
அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள், கடவு ளையும், மதத்தையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், அய்ந்தாம் ஜாதியாக பஞ்சமரை வைத்தார்கள். பஞ்சமர்கள் அவர்ணஸ்தர்கள்.
உயர்ஜாதிப் பெண்கள் உள்பட!
கடைசியாக யார் என்று சொன்னால், பெண்கள்தான். பெண்கள் என்றால், எல்லா ஜாதிகளையும் சேர்ந்த பெண்கள்; உயர்ஜாதிப் பெண்கள் உள்பட.
நன்றாக நினைத்துப் பாருங்கள், இந்த இயக்கம் பெண்கள் விடுதலைக்காக ஏன் பாடுபட்டது? என்று நீங்கள் கேட்கலாம்.
அது பிறவி பேதம் என்பதினால்தான்.
அடுத்து ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம்; இந்தியாவில் பெண்களுக்கு அந்த நிலை என்றால், ஆஸ்திரேலியாவில் இவருக்கு என்ன வேலை? அதுபோன்ற நிலை இங்கே இல்லையே? என்று.
இல்லைதான். ஆனால், அண்மைக் காலத்தில் அந்த ஆபத்து வந்திருக்கிறது.
ஏன் பெரியார் தேவைப்படுகிறார்?
ஏன் அம்பேத்கர் தேவைப்படுகிறார்? என்று சொன்னால், இங்கே நுழையக்கூடாத சக்திகள் உள்ளே நுழைந்திருக்கின்றன.
ஒரு காலத்தில், சமத்துவத்தோடு, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்று இருந்தது.
அதேபோன்று, சங்க இலக்கியத்தில் – புலவர்க ளைப்பற்றி சொன்னார் அருள்மொழி. இருந்தும் ஏன் பெண்களைப் படிக்கக்கூடாது? என்று சொன்னார்கள். எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக ஏன் பெண்கள் இருந்தார்கள்? மூத்த தாய்மார்களுக்கு அன்றைய நிலை தெரியும்.
உங்கள் பாட்டிமார்களுக்குக் கணக்கு எழுதத் தெரியாது. பால் பாக்கி எவ்வளவு என்று கேட்டால், அதற்கு நம்மூரில் உள்ள சுவர்கள்தான் சாட்சி. அதில், கோடு போட்டு வருவார்கள், எத்தனை நாள்கள் பால் போட்டிருக்கிறார்கள் என்று கணக்கு வைத்துக் கொள்வதற்கு.
ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்ல!
அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை அடியோடு மாற்றி, எல்லா துறைகளிலும் பெண்களால் முடியும்; ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் குறைந்த வர்கள் அல்ல என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
நம்முடைய தோழர் முத்துகிருஷ்ணன் அவர்கள் மிக அருமையாக இங்கே சொன்னார்.
நோய் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் பரவும் என்பது இயல்பு!
ஆணாதிக்கம் என்பது உலகளாவிய அளவிற்கு இருக்கும். ஆனால், நம் அளவிற்கு மோசமில்லை. இந்த ஆபத்து அந்த நாட்டிலும்தானே இருக்கிறது என்றால், நோய் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் பரவும் என்பது இயல்பு. இப்போது பரவ ஆரம்பித்திருக்கின்றது. அதனால்தான், பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்ட அமைப்பை அகலப்படுத்தவேண்டும்; ஆழப்படுத்தவேண்டும். இது பெருகவேண்டும். இது சுயநலத்திற்காக வந்தது அல்ல. அல்லது பதவிகளைப் பெறவேண்டும் என்பதற்காக வந்தது அல்ல.
‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு!’’
முழுக்க முழுக்கத் தன்மானத்தைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான். ‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்றார் தந்தை பெரியார் அவர்கள்.
அழகுக்கு விளக்கம் சொன்னால், அழகு சாதனங்கள், அழகுக் கலைகள் என்று சொல்வார்கள். அழகிப் போட்டி வைக்கிறார்கள் உலகம் முழுவதும். ஆனால், எங்கேயாவது அறிவுப் போட்டி வைக்கிறார்களா? என்பதை நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அறிவு வளர வளரத்தான் மனிதனுக்கு விடுதலை!
வயது ஏற ஏற எல்லோருடைய உருவங்களும் மாறும். என்னதான் அழகு சாதனங்களைப் போட்டு வெள்ளையாக இருக்கின்ற முடியை, கருப்பாக ஆக்கினாலும்கூட பொருந்துகின்றதா? ஆனால், அறிவுப் போட்டி என்பது அறிவை வளர்க்கக் கூடியது. அறிவு வளர வளரத்தான் மனிதனுக்கு விடுதலை.
அப்படி வருகின்றபோது, மற்ற நாடுகளுக்கும், நமக்கும் உள்ள வேறுபாடுகளை உணர முடியும்.
மகளிர் உரிமைக்காக தந்தை பெரியார் அவர்கள் அதிகமாகக் கவலைப்பட்டது ஏன்? புரட்சிகரமான சிந்தனைகளைச் சொன்னது ஏன்?
ஏற்கவேண்டியவர்கள் ஏற்கலாம்; தள்ளவேண்டியவர்கள் தள்ளலாம்!
பெரியார் கூட்டங்களில் தனது உரையைத் தொடங்கும்போது, பகுத்தறிவுக்கு முதலில் இடம் கொடுப்பார். பேசி முடித்தவுடன், ‘‘நான் சொன்ன வற்றை நீங்கள் அப்படியே நம்பவேண்டும் என்று சொல்லவில்லை. அது அவசியமும் அல்ல. இது எனக்குச் சரியென்று பட்ட கருத்து. ஏற்கவேண்டியவர்கள் ஏற்கலாம்; தள்ளவேண்டியவர்கள் தள்ளலாம்.
இன்னுங்கேட்டால், நான் சொல்வதை நம்பா விட்டால் நரகத்திற்குப் போவீர்கள்; நம்பினால், சொர்க்கத்திற்குப் போவீர்கள் என்று சொல்லி பய முறுத்துவதோ, அச்சுறுத்துவதோ கிடையாது’’ என்பார்.
நம்மூரில் ஒரு பழமொழி உண்டு ‘‘நம்பியவனுக்கு நடராஜா! நம்பாதவனுக்கு எமராஜா’’ என்று சொல்வார்கள்.
அடுத்து யார் சாகப் போகிறீர்கள் என்றால், சாவதற்கு நம்மாள் தயாராக இருப்பார்களா?
ஆக, இப்படிப்பட்ட ஓர் அச்சத்தை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சமுதாயத்தில், துணிவு, அதேநேரத்தில் உரிமைக் குரல். இவை அத்தனை யையும் உருவாக்கி, மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பு களைக் கொண்டு வந்தார்.
வருமுன்னர் காப்பதுதான் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்ட அமைப்பு
நம்முடைய நாட்டில் இருக்கின்ற அந்த ஆபத்து, இந்த நாட்டிற்கு வருமுன்னர் காப்பது தான் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்ட அமைப்பு.
‘‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்’’
மருத்துவத்தில்கூட இரண்டு வகை உண்டு. ஒன்று, நோய் வருவதற்குமுன் தடுக்கின்ற முறை. இன்னொன்று நோய் வந்த பின்பு சிகிச்சை. அதுபோன்றதுதான் சுயமரியாதை இயக்கம் என்பது வருமுன் தடுப்பதுதான்.
ஆக, அந்தப் பணியைச் செய்யும்போது புரியாமல் சிலர் சொல்வார்கள், ‘‘நல்லாதானே இருக்கிறோம்’’ என்று சொல்வார்கள்.
நல்லாதான் இருக்கிறோம். எப்போது பன்றிக் காய்ச்சல் வரும் என்று சொல்ல முடியாது. எப்போது கோவிட் தொற்று வரும் என்று சொல்ல முடியாது.
கோவிட் தொற்றுதான் முடிந்து போய்விட்டதே என்று சிலர் சொல்லலாம்.
அது கோவிட் 19. இன்றைக்கு வந்துள்ளது வேறு கோவிட் – வேறொரு ரூபத்தில் வருகிறது என்று!
அதுபோன்று, நாம் இன்றைக்கு வளர்ந்திருக்கின்றோம்; இந்த நாட்டில் இருக்கின்றோம் என்று சொன்னாலும், ஆபத்து உருவாகிக் கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில், இந்த நாடு உள்பட பல நாடுகளில் ஜாதி, கிடையாது, அதற்காகப் பாராட்டலாம். ஆனால், இப்போது அப்படியா?
நம் சங்ககாலத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. முற்பகுதி – பிற்பகுதி என்று.
பண்பாட்டுப் படையெடுப்பினால், மாற்றப்பட்டது, அழிக்கப்பட்டது!
இந்திய நாட்டைப் பொறுத்தவரையில், அங்கே இருந்து வருகின்றபோது, சங்க காலப் பெருமைகளைச் சொல்கிறார்கள். ஆனால், இன்னொரு பண்பாட்டுப் படையெடுப்பினால் அது மாற்றப்பட்டது, அழிக்கப்பட்டது.
அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு இன்றைக்கும் பல வடிவங்களில், வேறொரு உருவத்தில் வந்து கொண்டிருக்கின்றது. அதனால்தான், இங்கே சிறப்பான வகையில் செய்த பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் – வருண தர்மத்தைப் பாடத் திட்டத்தில், பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைக் கலக்கக்கூடாது என்று சொல்லி தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள். அந்த உற்சாகம் பெருகட்டும்.
என்ன ஜாதி என்பதை நேரடியாகச் சொல்லாமல், படத்தின்மூலம் காட்டுகிறார்கள்.
ஆணவக் கொலைகள் – கைகளில் வண்ணக் கயிறுகள்!
திராவிட ஆட்சியில்கூட, அவர்களுக்குத் தெரியா மல் நடக்கின்ற ஜாதி ஒழிப்புக்கு எதிரான ஆணவக் கொலைகளைப்பற்றிச் சொன்னார்கள்.
இன்னொரு பக்கத்தில், பள்ளி மாணவர்களின் கைகளில் வண்ணக் கயிறு கட்டுவதன்மூலம், என்ன வண்ணம், என்ன ஜாதி என்பதை மறைமுகமாகச் சொல்லக்கூடிய அளவிற்கு செய்கிறார்கள்.
எனவே, சுயமரியாதை இயக்கம், பெரியாருடைய இயக்கம், முழுக்க முழுக்க அம்பேத்கருடைய கொள்கை கள், ஆக்கங்கள் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு.
ஆனால், வருண தர்மம் மக்களை வேறுபடுத்து வதற்கு, பிரித்து வைப்பதற்கு!
மானுடம் எழுந்து நிற்கவேண்டும்!
அந்தந்த நாட்டில், அந்தந்தப் பிரச்சினைகள் இருக்கலாம். கருப்பு – வெள்ளை பேதம் இருக்கின்ற நாட்டில்கூட, கருப்பினத்தவர் படிப்பதைத் தடுக்க வில்லை. தனியேதான் படிக்கவேண்டும் என்று சொன்னான். அதுவே தவறுதான்.
ஆனால், இங்கே அந்த நிலை இல்லை. கீழ்ஜாதிக்கா ரன் படிக்கவே கூடாது. படித்தால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று சொன்னார்கள்.
படித்தால் தண்டனை என்று சொல்வதை எங்கும் பார்க்கவில்லை!
அதனால்தான் அம்பேத்கர் அழகாக எழுதினார், ‘‘நான் எவ்வளவோ உலக நாடுகளைப் பார்த்திருக்கிறேன், அவற்றைப் படித்திருக்கிறேன். ஆனால், ‘படித்தால் தண்டனை’ என்று சொல்வதை எங்கும் பார்க்கவில்லை. பெண்கள் அறவே படிக்கக்கூடாது என்று இங்குதான் இருக்கிறது’’ என்று எழுதினார்.
அதுதான் காலங்காலமாக இருக்கிறது. அதற்குப் பெயர் ஸநாதனம் – அதை மாற்ற முடியாது என்று சொன்னால், அதை எதிர்த்தால்தானே மானுடம் தப்ப முடியும்.
மனிதர்களுக்குள் பிரிவு காட்டவேண்டும் என்று நாம் சொல்லவில்லையே. பிரித்து வைத்திருக்கவேண்டும் என்று ஸநாதனவாதிகள்தான் சொல்லுகின்றார்கள்.
ஏன் இன்றைக்கும்
இந்த இயக்கம் தேவைப்படுகிறது?
அந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது நண்பர்களே, ‘‘பன்னாட்டு மகளிர் உரிமை நாளில்’’ இங்கே நம்முடைய சகோதரிகள், ‘‘என்ன செய்தார் பெரியார்? என்ன செய்தது இந்த இயக்கம்? ஏன் இன்றைக்கும் இந்த இயக்கம் தேவைப்படுகிறது?’’ என்பதற்கு இரண்டு, மூன்று காரணங்களைச் சொன்னார்கள்.
இங்கே உரையாற்றிய அருள்மொழியும், மற்ற நண்பர்களும் ராஜாராம் மோகன்ராயைப்பற்றி சொன்னார்கள். சதி, உடன்கட்டை ஏறுதலை ஒழித்தார் என்று.
தந்தை பெரியார் அளவிற்குப் பெண்கள் பிரச்சினையில் யாரும் கவனம் செலுத்தியதில்லை!
நம்முடைய நாட்டில் என்ன பிரச்சினை என்றால், பெண்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளைப்பற்றி யாரும் தந்தை பெரியார் அளவிற்குக் கவனம் செலுத்திய தில்லை. கடைசி எல்லைவரையில் சென்று அதனைச் சந்தித்தார். ஆனால், கடைசி எல்லை என்று அவர் சொல்லவில்லை. அறிவுக்கு எல்லை கிடையாது. காலத்திற்கேற்றாற்போல் மாறும் என்று சொன்னார்.
இராமசாமி என்ற ஒரு பிற்போக்குவாதி இருந்தான் என்று சொல்வார்கள்!
தன்னுடையை கருத்தைப்பற்றிச் சொல்லும்போது, ‘‘என்னுடைய கருத்து மிகவும் முற்போக்கான கருத்து என்று சொல்கிறார்கள்; இன்னும் நூறாண்டுகள் கழித்து வருகிறவர்கள், இராமசாமி என்ற ஒரு பிற்போக்குவாதி இருந்தான் என்று சொல்வார்கள்’’ என்றார்.
ஏனென்றால், அவர் எந்த விமர்சனத்திற்கும் பயப்பட வில்லை. ‘என்னுடைய கருத்தை ஏற்கவேண்டும்’ என்று அவர் சொல்லவில்லை. ‘என்னுடைய கருத்து, இன்றைக்குச் சரியானதாக இருக்கலாம். ஆனால், காலங்கள் வளர வளர, அது மாறிவிடும்’ என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.
மற்ற நாடுகளில் பெண் குழந்தைகள் பிறப்பதற்குக்கூட உரிமை அற்று இல்லை!
அதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன்.
ஒன்று, மற்ற நாடுகளில் பெண் குழந்தைகள் பிறப்ப தற்குக்கூட உரிமை அற்று இல்லை. பிறந்த பிறகுதான், கொடுமைகள் இருந்திருக்கும்; சமத்துவமின்மை இருந்திருக்கும்.
ஆனால், நம்முடைய நாட்டில் அந்நிலை இருந்தது. இந்த இயக்கம், அதனுடைய பணியை, அமைதியாக, ஆர்ப்பரிப்பில்லாமல் செய்ததினால்தான், இன்றைக்கு மாறியிருக்கின்றது.
மக்கள் தொகையில், மகளிர் சரிபகுதியாக இருப்ப வர்கள். அந்த சரி பகுதியினரான, பெண் குழந்தை பிறப்பதற்கே உரிமையில்லாமல் இருந்தது. அந்த மனப்பான்மை மாறவேயில்லை.
பெண் குழந்தையா பிறந்திருக்கிறது? என்று ஆர்வமற்று கேட்கின்ற நிலை. தாய்ப்பால் கொடுத்து வளர்க்கவேண்டிய பெண் குழந்தைக்குக் கள்ளிப்பால் கொடுத்து சிசுக்கொலை செய்கிறார்கள். இந்தியாவில், வடநாட்டில் இன்னும் அதிக மோசமான நிலைதான்.
தென்னாட்டில் இந்தியாவினுடைய வரலாற்றைப் பார்த்தீர்களேயானால், பெண் குழந்தையாகப் பிறந்தால், கங்கை நதியில் தூக்கி எறிந்து கொலை செய்துவிடுவார்கள்.
வங்காளத்தில், வயல்வெளியில் பயிர்கள் நன்றாக வளரவேண்டுமா? பெண் குழந்தையை நரபலி கொடுக்கவேண்டும்.
பெண் குழந்தை என்றால், கருவிலேயே அழிக்கக்கூடிய நிலை இருந்தது!
இன்னமும்கூட நரபலி என்கிற மூடநம்பிக்கை. தமிழ்நாட்டிலும்கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு பகுத்தறிவு பூமியில், பெரியார் பூமியில்கூட அதனை எதிர்த்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கக்கூடிய அவசியம் இருக்கிறது. அதில் விழிப்பாக இருக்கவேண்டும்.
பெண் குழந்தைக்குப் பிறக்கவே உரிமை யில்லை. ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று கருவிலேயே கண்டறிந்து, பெண் குழந்தை என்றால், கருவிலேயே அழிக்கக்கூடிய நிலை இருந்தது.
அதனால்தான், கருவில் இருப்பது ஆணா? பெண்ணா?என்று பார்க்கக்கூடாது என்று ஒரு சட்டமே வந்தது. நன்றாக நினைத்துப் பாருங்கள், ஒரு சட்டம் வருகின்ற அளவிற்கு இருக்கிறது என்றால், எவ்வளவு மோசமான நிலை இருந்திருக்கும் என்று.
சட்டத்தை மீறி, இன்று மருத்துவர்கள் யாராவது கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று சொன்னால், அவர்கள் தண்ட னைக்குரியவர்களாவார்கள்.
பெண் குழந்தை பிறந்தால், அந்தப் பெண் குழந்தைக்கு வாழ்வதற்கு உரிமை உண்டா? உடுத்துவதற்குக்கூட உரிமையில்லையே அவர்களுக்கு.
ஓரிடத்தில் தொடங்கிய நோய்,
மற்ற இடங்களுக்கும் பரவும்!
தாய்மார்களே, சகோதரிகளே, அந்த ஆபத்து இந்த நாட்டிற்கும் வரக்கூடாது என்று நாங்கள் ஏன் கவலைப்படுகின்றோம் என்றால், அந்த ஆபத்து வந்துவிட்டால், நீங்கள் எல்லாம் நிம்மதியாக இருக்க முடியாது. ஓரிடத்தில் தொடங்கிய நோய், மற்ற இடங்களுக்கும் பரவும்.
‘‘உண்டிச் சுருங்குதல், பெண்டிர்க்கு அழகு’’ என்று சொன்னார்கள். குறைவாகச் சாப்பிட்டால், நல்லது என்று வியாக்கியானம் சொன்னார்கள்.
பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்களே, அது நல்லதுதானே என்று சொன்னார்கள்.
ஆணுக்கு ஒரு நீதி? பெண்ணுக்கு ஒரு நீதியா?
உடனே பெரியார் சொன்னார், ‘‘நல்ல கருத்துதான், ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒன்றே ஒன்று. பெண் மட்டும்தான் அப்படி இருக்கவேண்டுமா? ஆண் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமா? ஆணுக்கு ஒரு நீதி? பெண்ணுக்கு ஒரு நீதியா?’’ என்றார்.
உண்ணுவதற்கு உரிமை பெண்களுக்கு இல்லை. விதவை இவற்றையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று சொன்னார்கள்.
பெண்களுக்குப் பிறப்பதற்கு உரிமையில்லை. வாழ்வதற்கும் உரிமையில்லாத நிலை இருந்தது.
அதேபோன்று, குழந்தை மணம், தேவதாசி முறை என்று சொல்லி, பெண்களுக்குப் பொட்டுக் கட்டி கோவிலுக்கு விடுகின்ற முறையை ஒழிக்க வேண்டும் என்று போராடினார்கள்.
பெண்களைவிட்டே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்!
தேவதாசி முறையை ஒழிக்கவேண்டும் என்று சொல்லும்போது, பெண்களைவிட்டே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். தேவதாசிகளாக இருக்கின்ற பெண்கள், ‘‘அய்யய்யோ, எங்களுடைய தொழில் உரிமையே போய்விடுமே; ஆகவே, இதனை ஏற்கக்கூடாது’’ என்று சொன்னார்கள்.
நம்முடைய நாட்டில் இன்றைக்குப் பெண்கள் படித்திருப்பதால், அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது; ஓரளவிற்கு அவர்கள் பேசுகிறார்கள்.
ஒரு நூறாண்டிற்கு முன்பு என்ன நிலை?
சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பு, ஒரு நூறாண்டிற்கு முன்பு என்ன நிலை?
பெண்கள் படித்ததில்லை. அப்போது ஆணா திக்கம்தான். ஆணாதிக்கக் கணவர் சம்பாதிப்பதினால், என்ன சொல்வார், ‘‘எதிர்த்துப் பேசாதே’’ என்று சொல்வார்கள்.
பேசினால் என்னாகும்? என்று கேட்டால், ‘‘உங்கப்பன் வீட்டிற்கு அனுப்பிடுவேன்’’ என்று சொல்வார்கள்.
இதுபோன்று இன்றைக்கு உங்களைப் பார்த்துச் சொல்ல முடியுமா?
கல்வி வாய்ப்பினால் வந்தது; சுயமரியாதை உணர்வினால் வந்தது!
உடனே என்ன சொல்வீர்கள், ‘‘நீ வேண்டுமானால், உன் அப்பன் வீட்டுக்குப் போ; நான் என்னுடைய சொந்தக்காலில் நிற்பேன்’’ என்று.
இந்தத் துணிவு எப்படி வந்தது? கல்வி வாய்ப்பினால் வந்தது. சுயமரியாதை உணர்வினால் வந்தது.
இது பக்தியினால், வானத்திலிருந்து பொத்தென்று விழவில்லை நண்பர்களே, புத்தியினால் வந்தது.
மனிதர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும், மனிதம், ஹியூமனிசம் என்று சொல்லக்கூடியதைப்பற்றி கவலைப்படாமல், சில பேர் இருக்கிறார்கள்.
நம்முடைய பெண்களுக்கு அந்தக் காலத்திலிருந்து என்ன நிலை?
பெண்களுக்கு அணிகலன்களாம்!
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் பெண்க ளுக்கு அணிகலன் என்று சொன்னார்கள்.

பெரியார்தான் கேட்டார், அச்சம் என்றால் என்ன?

பெரியார்தான் கேட்டார், அச்சம் என்றால் என்ன?
பயந்துகொண்டே இருக்கவேண்டும்.
மடம் என்றால் என்ன?
புத்திசாலித்தனமாக இருக்கக்கூடாது; வெறும் அலங்கார பொம்மைகளாகவே இருக்கவேண்டும். பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே இருக்கவேண்டும். சமையலறைப் பதுமையாக இருக்கவேண்டும்.
நாணம் என்றால் என்ன?
வெட்கப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். தலைகுனிந்துகொண்டே இருக்கவேண்டும்; நிமிர்ந்து பார்க்கக்கூடாது.
பெண்ணின் குனிந்த தலையை
நிமிர வைத்தவர்கள் இரண்டு பேர்!
பல நேரங்களில், திருமண நேரத்தின்போதுகூட, மணப்பெண் தலைநிமிர மாட்டார்கள். திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, மணப்பெண்ணுக்கு மூத்தவர்கள் பாடம் எடுப்பார்கள்.
‘‘மணப்பந்தலில் அமரும்போது, தலைநிமிர்ந்து பார்க்கக் கூடாது. அப்படி நீ பார்த்தால், நீ திமிர் பிடித்த பெண் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆகவே, தலையை குனிந்துகொண்டேதான் இருக்கவேண்டும்’’ என்பார்கள்.
நான் வேடிக்கையாக சொல்வேன், பெண்ணின் குனிந்த தலையை நிமிர்த்துபவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் பெரியார், இன்னொருவர் போட்டோ கிராபர்.
மணவிழாவின்போது போட்டோகிராபர், ‘‘கொஞ்சம் தலையை நிமிருங்கள்’’ என்று அவசியத்தை முன்னிட்டுச் சொல்வார்.
ஆனால், தந்தை பெரியார் அவர்கள் பெண்களின் உரிமைக்காகச் சொன்னார்.
தோழர்களே, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைப்பற்றி பலர் பெருமையாகச் சொல்வார்கள்.
பயிர்ப்பு என்பதற்கு என்ன பொருள்?
பயிர்ப்பு என்பதற்கு என்ன பொருள்? என்று அகராதியில் பார்த்தீர்களேயானால், அசிங்கமாக இருக்கவேண்டும் என்பதுதான்.
இதை நீங்கள் நம்புகிறீர்களா?
பெண் அழகாக இருக்கக்கூடாது. அழகாக இருந்தால் என்னாகும்? உன்னுடைய கற்பே போய்விடும் என்பார்கள்.
பெரியார், கற்புக்கு எதிரியல்ல!
கற்புக்கு டிகிரி வாரியாக வைத்திருக்கிறார்கள்.
தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு என்று. கற்புக்குப் பெரியார் எதிரி என்று திரித்துச் சொல்கிறார்கள் பலர். பெரியார், கற்புக்கு எதிரியல்ல.
கற்பு என்று சொல்கிறீர்கள்; கட்டுப்பாடு என்று சொல்கிறீர்கள். நல்லதுதான் – அது ஆண் – பெண் இருவருக்கும் இருக்கவேண்டும் அல்லவா!
‘பதிவிரதை’ என்று தமிழ் வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
‘பதிவிரதை’ என்றால், ‘‘அந்தப் பெண், கணவன் என்ன சொன்னாலும் அதைக் கேட்கவேண்டும்; அடித்தாலும், உதைத்தாலும் வாங்கிக் கொள்ளவேண்டும். எதிர்த்துப் பேசக்கூடாது. பின்தூங்கி, முன் எழவேண்டும்’’ என்றெல்லாம் தத்துவார்த்தங்களைச் சொல்வார்கள்.
பெண்ணுக்கு என்ன உரிமை?
பெண்கள் படிக்கக்கூடாது, உண்ணக்கூடாது, உடை உடுத்தக்கூடாது, தோள்சீலை போடக்கூடாது என்ற நிலைதான் இருந்தது.
சுயமரியாதை இயக்கத்தின் உணர்வினால் முழுக்க முழுக்கப் பயன் பெற்றவர்கள் யார்?
பெரியாருடைய சீர்திருத்தத்தினால், சுயமரியாதை இயக்கத்தின் உணர்வினால் முழுக்க முழுக்கப் பயன் பெற்றவர்கள் யார் என்றால், உயர்ஜாதிப் பெண்களானபார்ப்பனப் பெண்கள்கூட பயன் பெற்றிருக்கிறார்கள். அதில் வேறுபாடே கிடையாது.
எப்படியென்றால், அதற்கு ஒரு நடைமுறை உதாரணத்தைச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் நடந்ததை சொன்னால்தான், இந்த ஆபத்திற்குரிய விளைவு என்ன என்று உங்களுக்குத் தெரியும்.
இன்றைய காலகட்டத்தில் “மொட்டைப் பாப்பாத்தி’’யைப் பார்க்க முடியுமா?
கணவரை இழந்த பார்ப்பனப் பெண்களை மொட்டை அடிக்கப்பட்டு, அக்கிரகாரத்தில் அவர்களை “மொட்டைப் பாப்பாத்தி’’ என்று சொல்வார்கள். யாரையும் நான் கொச்சைப்படுத்தவில்லை, நடைமுறையில் விளக்கிச் சொல்வதற்காக சொல்கிறேன்.
அப்படி இருந்த நிலை மாறி, இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், அவர்களிலேயே மறுமணம் செய்துகொள்ளக் கூடிய நிலைக்கு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது எங்கேயுமே “மொட்டைப் பாப்பாத்தி’’ என்று முக்காடு போட்டுக் கொண்டு இருப்பவர்களைப் பார்க்க முடியாது; வயதானவர்க ளில்கூட அப்படி யாரையும் கண்டுபிடிக்க முடியாது.
மொட்டைப் பாப்பாத்தியை, கமலகாசன் அவர்க ளுடைய ‘தசாவதாரம்’ திரைப்படத்தில்தான் பார்க்கலாம். நிஜ வாழ்வில் பார்க்க முடியாது.
இது யாரால் நடந்தது?
பெரியாரால் நடந்தது!
சுயமரியாதை இயக்கத்தால் நடந்தது!
எல்லோருக்கும் சமூகநீதி; எல்லோருக்கும் பாலியல் நீதி!
ஜாதி வேறுபாடில்லாமல், எல்லோருக்கும் சமூக நீதி; எல்லோருக்கும் பாலியல் நீதி. இதுதான் இந்த இயக்கத்தினுடைய மிகப்பெரிய அடிப்படை.
ஆகவே, சமத்துவம் என்பது பெண்களுக்கு வரவேண்டும்.
ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் ஒருவர்தான் பள்ளிக்கூடத்தில் சேர முடியும் என்று சொன்னால், யாரை சேர்ப்பீர்கள்? என்று பெரியாரிடம் கேட்டார்கள்.
பெண்ணுக்குத்தான் முதலில் கல்வி வாய்ப்புக் கொடுக்கவேண்டும்!
தந்தை பெரியார் சொன்னார், ‘‘பெண்ணுக்குத்தான் அந்த வாய்ப்பைக் கொடுக்கவேண்டும்; ஏனென்றால், ஆண் படிப்பதற்கும், பெண் படிப்பதற்கும் அடிப்படை யில் வேறுபாடு உண்டு. என்ன அந்த வேறுபாடு என்று சொன்னால், ஆண் படித்தால், அவரோடு சரி; ஆனால், ஒரு பெண் படித்தால், அந்தக் குடும்பமே படித்ததற்குச் சமமாகும்’’ என்றார்.
மதத்தின்மீது நமக்கு கோபம் இல்லை. அடி மைத்தனத்தின்மீதுதான் கோபம். ஒரு கோவில் கட்டுவதற்குப் பதிலாக பல கோவில்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அதுதான் பலருடைய மத வெறிக்கு அடித்தளமாக இருக்கிறது.
ஒரு பள்ளிக்கூடம் கட்டினால் அனைத்து மதத்தினரும் செல்வர்!
ஒரு கோவிலைக் கட்டினால், அந்தக் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் அங்கே போய் கும்பிடுவார்கள்.
ஒரு சர்ச் கட்டினால், அந்த மதத்தவர்தான் வழிபாடு செய்வார்கள்.
ஒரு மசூதி கட்டினால், அந்த மதத்தவர்தான் சென்று வழிபடுவார்கள்.
ஆனால், ஒரு பள்ளிக்கூடம் கட்டினால், இவரும் போவார்; அவரும் போவார்; எல்லோரும் போவார்கள். ஆகவே, அதற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று சொன்னார்.
பெண்கள் சுதந்திரமாக ஆனதற்குக் காரணமே, பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியதுதான்.
முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டின் தீர்மானம்!
1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில், சுயமரியாதை இயக்கத்தினுடைய முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், பெரியார் தீர்மானம் போடுகிறார்.
ஆண்கள் – பெண்கள் அனைவரும் சமத்துவம். சமத்துவம் என்பதோடு அவர் நிறுத்தவில்லை. ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருந்தால், இரண்டு ஆண், இரண்டு பெண் இருந்தால், அந்தக் குடும்பத்துச் சொத்துகளை நான்கு பேருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று தீர்மானமாகப் போட்டார். அதனால்தான் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்றார்.
பெண்களுக்குச் சொத்துரிமை கூடாதாம்; மனுசாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?

எந்தக் காலத்திலும் பெண் சுதந்திரமாக இருக்கக் கூடாது!

எந்தக் காலத்திலும் பெண் சுதந்திரமாக இருக்கக் கூடாது!
ஒரு பெண், எந்தக் காலத்திலும் சுதந்திரமாக இருக்கக் கூடாது. ‘‘பிறந்தவுடன், தகப்பனுடைய கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும்; பிறகு, திருமணம் ஆனவுடன், கணவனின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். பிறகு, பிள்ளை பெற்றவுடன், மகனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டும்.’’
எந்தக் காலத்திலும் பெண்கள் முழு சுதந்திரம் பெற உரிமையில்லை.
அதை அந்த நாட்டில் மீண்டும் உருவாக்கி, அம்பேத்கருடைய சட்டத்தை, அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு, மனுஸ்மிருதிதான் அரசமைப்புச் சட்டமாக்கப்பட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.
அதே உணர்வுகள் இங்கே வந்தால், நாளைக்கு அந்த நோய் இங்கே பரவாது என்று சொல்வதற்கு இடமில்லை.
எங்களுக்கு எல்லா மதமும் ஒன்றுதான்!
ஆகவேதான், பெரியாருடைய சிந்தனை என்பது மிகவும் முக்கியம். இதை நான் சொல்லும்போது, யார்மீதும் குறை சொல்லவில்லை.
உடனே என்ன சொல்வார்கள் தெரியுமா? இவர்கள் எல்லாம் ஹிந்து மதத்தைப்பற்றித்தான் பேசுவார்கள் என்பார்கள். எங்களுக்கு எல்லா மதமும் ஒன்றுதான்.
மனிதனுக்கு மதம் பிடிக்கக்கூடாது என்பதுதான் முக்கியம். யானைக்கு மதம் பிடித்தாலே, மிகவும் ஆபத்து. மனிதனுக்கு மதம் பிடித்தால் இன்னும் பெரிய அளவிற்கு ஆபத்து.
நாங்கள் பேசுகின்ற கருத்துகள், வெறுப்பினலோ, மக்களைப் பிரிக்கவேண்டும் என்பதற்காகவோ அல்ல. பிரிந்தவர்களை இணைக்கவேண்டும் என்ப தற்காகத்தான் இந்த இயக்கம்.
அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியாரின்
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
இதோ என் கைகளில் இருப்பது ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகம். இந்தப் புத்தகத்தை எழுதியது அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்.
இந்தப் புத்தகத்தில் தொடக்க காலத்திலிருந்து எப்படி பெண்கள் பிரிக்கப்பட்டார்கள்; பெண்கள் எப்படி கீழான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஏன், பெண்களுக்கு உரிமையில்லை? என்று சொல்லும்போது, இவர் தெளிவாக எழுதியிருக்கிறார்.
அதில் உள்ள ஒரு செய்தியைச் சொல்கிறேன். பெண் சொத்துரிமையைப்பற்றி அருள்மொழி இங்கே சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
அந்தச் சொத்துரிமையை பெண்களுக்குக் கொடுத்தால்தான், அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கும்.
பெண்களுக்குச் சமத்துவம் இருந்தால்தான் அவர்களுக்கான அதிகாரம், சுதந்திரம் கிடைக்கும். இங்கே நீங்கள் எல்லாம் உத்தியோகத்தில் இருக்கிறீர்கள்; சம்பாதிக்கிறீர்கள், உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், இந்த நிலை அங்கே வரவில்லை.
பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கக் கூடாது என்று அப்போது சொன்னார்கள். அரசமைப்புச் சட்டம் வரையறுக்கப்படுவதற்கு முன்பாகவே, அம்பேத்கர் அவர்கள், பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கப்படவேண்டும்; அதற்காக இந்து லா என்ற தத்துவத்தைத் திருத்தவேண்டும் என்று சொன்னார்.
அதைச் செய்வதற்கு முயன்றபோது, அன்றைக்கு இருந்த பிற்போக்குவாதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. முற்போக்குக் கருத்துள்ள பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களால்கூட, அம்பேத்கரின் கருத்தை ஏற்று நடைமுறைப்படுத்த முடியவில்லை.
அதனால்தான் அம்பேத்கர் அவர்கள், தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இதற்கு யார் காரணம்? என்ன முறையில் சொன்னார்கள் என்பதற்கு ஓர் அடையாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.
100 வயதைத் தாண்டிய இராமானுஜ தாத்தாச்சாரியார்!
100 வயதைத் தாண்டிய இராமானுஜ தாத்தாச்சாரி யார், பெரிய சங்கராச்சாரியாருக்கு மிகவும் நெருக்க மானவர். ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்த கத்தில், அவர் எழுதியதை உங்களுக்குச் சொல்கிறேன்.
பண்டித ஜவஹர்லால் நேருஜியின் மந்திரி சபையில் ‘ஹிந்து கோடு பில்’ கொண்டு வருவதுபற்றிய ஆலோசனையில் இறங்கினார்கள்.
மனுஸ்மிருதியில் பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது!
ஸ்மிருதியில் பெண்களுக்கு சொத்து பாத்யம் கிடையாது என கண்டிப்பாய் கூறப்பட்டிருக்கிறது.
பாரத தேசத்துக்குள் பிராமணர்கள் வரும்போது அவர்களுடன் வந்த ஸ்திரீகள் மிகக் குறைவானவர்கள் என்பதை இக்கட்டுரைத் தொடரின் தொடக்க அத்யாயத்தில் நான் குறிப்பிட்டிருந்ததை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
இங்கு வந்த பிராமணர்கள் இங்குள்ள பெண்களோடு கூடி வாழ ஆரம்பித்தாலும், பெண்களை சூத்ரர்களுக்குச் சமமாகவே வைத்தனர். அதனால்தான் பெண்களுக்கு எவ்வித சமய சமஸ்காரங்களும், சடங்குகளும் கிடை யாது. இதோடு கூட பெண்களுக்கு வித்யா அதாவது கல்வி தேவையில்லை என்றும் ஸ்மிருதியில் விதித்த னர்.
ஸ்திரீகளுக்கு ஸ்மிருதி பயங்கர கட்டுப்பாடுகள் வைத்திருந்தது!
இதன் ஒரு பகுதியாகத்தான் பெண்களுக்குச் சொத்தில் பங்கு கிடையாது என்றும், அவள் எப்போதும் ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டுமென்றும் ஸ்திரீகளுக்கு ஸ்மிருதி பயங்கர கட்டுப்பாடுகள் வைத்திருந்தது.
இந்த ஸ்மிருதியின் பிடியிலே பெண்கள் இருந்த சமயத்திலேதான், நேருஜி அறிவித்தார். எல்லார்க்கும் சொத்துரிமை உண்டு. அதாவது பெண்களுக்கும்!
இவ்விஷயம் சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கும் எட்டியது. பெண்களை போலீசார் தாக்கியதற்காகக் கண்ணீர் விட்ட சங்கராச்சாரியார், பெண்களுக்குச் சொத்து பாத்யம் உண்டு என கேட்டதும்,
ஆலயப்பிரவேச போராட்டத்தைத் தடுத்த பெண்கள் தாக்கப்பட்டதற்காக அழுத சங்கராச்சாரியார், பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டதற்கு சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். ஆனால்?
டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.
கும்பகோணத்தில் இருந்த எனக்கு சங்கராச்சாரியாரிடமிருந்து ஒரு தந்தி பறந்து வந்தது!
அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்பகோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது. ‘உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ – இதுதான் தந்தி வாசகம் கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.
நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம், காஞ்சி புரத்துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றைப் பார்வையிட எசையனூருக்குச் சென்றிருந்தார் மகாபெரியவர்.
‘லோகமே அழியப்போறது ஓய்,
அழியப் போறது!’
என்ன ஸ்வாமி? என்றேன் நான். அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர், ‘லோகமே அழியப்போறது ஓய், அழியப் போறது’ என படபடப்பாகப் பேசினார்.
“இதப்பார்த்தீரா? ஸ்திரீகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயீடுவா, அபாண்டமா அபச்சாரமா போயிடும்’’ என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.
நான் சிரித்தபடியே பதில் சொன்னேன். ‘எனக்கு நல்லதுதான் ஸ்வாமி, என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு. ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்.
ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு!
இந்தப் பதிலைக் கேட்டதும், “அசட்டுத்தனமாகப் பேசாதீர். இந்த சட்டம் வந்தா ஸ்திரீ தர்மமே பாழா யிடும். ஸ்தீரிகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.
இப்படிப்பட்ட ஸ்த்ரீ தர்மத்தை நேரு நொறுக்கிட்டார். நாம இதை எதிர்த்து போராட்டம் நடத்தணும். ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்கறதுக்காக அந்த ‘பில்’லை எதிர்த்து ஊரெல்லாம் கூட்டம் போடணும். அதுக்கு ஸ்த்ரீகளை நிறைய திரட்டணும்’’ என்றெல்லாம் அவசர ஆணைகளைப் பிறப்பித்தார் மகாபெரியவர்.
வேத தர்ம சாஸ்திர பரிபாலனசபை கூட்டங்க ளின்போதே ஸ்த்ரீ தர்மத்தைப் பற்றியும் நான் நிறைய பேசியிருப்பதால் இந்தக் கூட்டம் நடத்துவது எனக்கும், எங்கள் சகாக்களுக்கும் கஷ்டமாகத் தெரியவில்லை.
சர்க்கார் கொண்டு வந்திருக்கிற சட்டத்தை பெண்கள் மூலமாகவே எதிர்க்கணும்!
மகா பெரியவர் சொன்னதன்படி திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள கல்லிடைக்குறிச்சிக்குப் போனோம். அங்கே தேவி உபாசனை செய்யும் ஓர் அம்மா இருந்தார். அவரிடம் போய், ‘இதுபோல சர்க்கார் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு. பெண்களுக்கும் சொத்து பாத்யம் உண்டுனு சர்க்கார் கொண்டு வந்திருக்கிற சட்டத்தை பெண்கள் மூலமாகவே எதிர்க்கணும்னு மகாபெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கார். அதனால இங்க ஸ்த்ரீகள் கூட்டம்போட வந்திருக்கோம். கூட்டத்துக்கு நீங்களும், ஸ்த்ரீகளைக் கூட்டி வரணும்’ என்றேன்.
பெண்களை வைத்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
அந்த தேவி உபாசகரோ மறுத்துவிட்டார். பிறகு ஒவ்வொரு வீடாய் போய் பெண்களை பெரிய முயற்சிக்குப் பிறகு கூட்டத்துக்கு அழைத்து வந்து, ‘எங்க ளுக்குச் சொத்துரிமை வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி ஸ்த்ரீ தர்மம் பாதுகாக்கப்படணும். சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும்’ என பெண்களை வைத்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை நகல் எடுத்து டில்லி சர்க்கா ருக்கு அனுப்பி வைத்தோம். இது மட்டுமா?
திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து தமிழ்நாட்டின் பல ஊர்களில் இப்படி ஸ்த்ரீகள் கூட்டம் சங்கராச்சாரி யாரின் உத்தரவுப்படி நடந்தது. என்ன ஏதென்றும் தெரியாமலேயே பல பெண்கள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என சொன்னார்கள்.
கும்பகோணத்தில் நடந்த ஸ்த்ரீகள் கூட்டத்துக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் திருவேங்கடாச்சாரியாரின் தங்கை செண்பகத்தம்மாளை அழைத்து வந்தோம். அவரோடு இன்னும் பல ஸ்த்ரீகளும் வந்து எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என தீர்மானம் போட்டார்கள்.
சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும் என்று டில்லிக்கு பல தந்திகளும் அனுப்பினோம்!
கிட்டதட்ட ஒருமாதம் தமிழ்நாடு பூராவும் 100 ஸ்த்ரீ கூட்டங்கள் நடந்தன. தீர்மான நகல்கள் தவிர சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும் என்று டில்லிக்கு பல தந்திகளும் அனுப்பிக் கொண்டே இருந்தோம்.
இந்தக் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே சங்கராச்சாரியார் மறுபடியும் என்னை அழைத்தார். “இங்கேயே கூட்டம் நடத்திக் கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது போலிருக்கிறது. டில்லிக்கே போய் எதிர்ப்பைத் தெரிவிக்கணும். அதுக்கு நீர் டில்லி கிளம்பணும்’’ என்றார்.
டில்லியில் Constitution Club இல்
ஸ்த்ரீகளுக்கும் சொத்து பாத்யம் பில் பாஸ்பண்ணலாமா, வேண்டாமா என நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பெரிய அளவில் பெண்களை திரட்டிக் கொண்டு போனோம்.
பயன் இல்லாமல் போய்விட்டது!
அங்கே, பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என வலியுறுத்த கமலாதேவி சட்டோபாத்யாய தலைமையில் பல பெண்கள் கூடியிருந்தனர்.
நாங்கள் கூட்டிப்போயிருந்த பெண்கள், நேரு அங்கே வருவதற்கு முன்னரே கலைந்து விட்டதால் பயன் இல்லாமல் போய்விட்டது’’ என்று இராமானுஜ தாத்தாச்சாரியார் ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தச் செய்தியை எத்தனைப் பேர் தெரிந்து கொண்டிருப்பீர்கள்?
ஆகவே, ஒவ்வொரு துறையிலும் பெரியார் செய்த பணி என்பது மிக முக்கியமானதாகும். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று 1929 ஆம் ஆண்டு தீர்மானம் போடுகிறார்.
1952 ஆம் ஆண்டு அம்பேத்கர் கொண்டுவந்த சட்டத் திருத்தத்தை ஏற்கவில்லை!
அம்பேத்கர், 1952 ஆம் ஆண்டு பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று சொல்லி, சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று சொல்கி றார். ஆனால், அவரை செய்யவிடவில்லை. தோற்க டிக்கிறார்கள்.
பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கவில்லை என்பதற்காக தன்னுடைய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த பெருமை டாக்டர் அம்பேத்கர் அவர்களையே சாரும்.
இன்று நாம் பார்க்கலாம்; யாராவது அமைச்சர் தன்னுடைய பதவியிலிருந்து விலகுகிறார் என்றால், அதைவிட பெரிய துறை கொடுக்கவில்லை என்பதி னாலோ அல்லது வேறு காரணமாகவே இருக்கும். ஆனால், அம்பேத்கர் அப்படியில்லை.
2006 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் நிறைவேற்றினார்!
ஆனால், ஒரு பெரிய வாய்ப்பு, திராவிட மண், நாம் பெருமைப்பட வேண்டிய அளவிற்கு திராவிட ஆட்சிகள். கலைஞர் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறார். 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை தரும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. நான் இங்கு அரசியல் பேசவில்லை. சமூகத்தில் ஏற்பட்ட ஒரு நல்ல மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறேன்.
2006 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் கூட்டணியில் இருந்த தி.மு.க. தலைவர் கலைஞர் அதனை ஒன்றிய அளவில் சட்டமாக்கச் செய்தார்.
இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்குச் சொத்துரிமை என்று ஆக்கியது திராவிட இயக்கம்தான்!
1989 இல் தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரி மையைக் கொடுத்தார். அது மட்டுமல்ல, 1929 ஆம் ஆண்டு பெரியார் போட்ட தீர்மானத்தின்படி சட்டம் இயற்றி, இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்குச் சொத்துரிமை என்று ஆக்கியது பெரியார் இயக்கம் – திராவிட இயக்கம்தான்.
அதற்காகத்தான் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
அந்த அரசியல் இங்கே தேவையில்லை. அது தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல்.
ஆனால், இங்கு எப்படிப்பட்ட ஆபத்து ஏற்படும் என்றால், பழைய கொள்கைகளைப் புகுத்த நினைக்கிறார்கள். இதற்கு அர்த்தம் வேறு; அதற்கு அர்த்தம் வேறு என்று ஏமாற்றுகிறார்கள். படித்த நம்மாட்களிடையே கூட சிறிது மயக்கம் ஏற்படும் நிலை.
மண்டல் ஆணைய அறிக்கை!
மண்டல் ஆணைய அறிக்கையில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அமைப்பு, நாடாளுமன்றத்தில் வைத்த அறிக்கையின் ஒரு பகுதி என்னவென்றால,
நான் இதைச் சொல்வதற்குத் தாய்மார்கள் மன்னிக்க வேண்டும். பெண்கள், தங்களுடைய மார்பகத்தைக்கூட மறைக்கக்கூடாது என்ற நிலை இருந்தது. அதற்காக தோள்சீலை போராட்டம் நடத்தப்பட்டது. உடுத்த உரிமையில்லை பெண்களுக்கு. இப்படி இருந்த கொடுமையிலிருந்து சமுதாயத்தை மாற்றுவதற்குக் காரணமாக இருந்ததுதான் சுயமரியாதை இயக்கமாகும்.
மண்டல் அறிக்கையில், இன்னின்ன மாநிலத்தில் இப்படியெல்லாம் இருந்தது என்று சுட்டிக்காட்டிவிட்டு, கேரள மாநிலத்தில் ஈழவ ஜாதி என்கிற கீழ்ஜாதி, தொடக்கூடாத ஜாதி, பார்க்கக்கூடாத ஜாதி, நெருங்கக்கூடாத ஜாதி என்று இருந்தது. இதை மாற்றி, ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கக் கூடிய அளவிற்கு இந்த இயக்கம் பாடுபட்டது.
மனிதநேயம்தான் மிகவும் முக்கியம்!
பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் மனிதநேயம்தான் மிகவும் முக்கியம்.
ஈழவ ஜாதி என்று சொல்லப்படுகின்றவர்கள், கழுத்தில் கொட்டாங்குச்சி போன்று ஒரு குடுவையைக் கட்டியிருப்பார்கள். அவர்கள் தெருவில் நடக்கும்போது “ஊ’’ என்று சத்தம் எழுப்பிக்கொண்டே செல்வார்களாம். உயர்ஜாதிக்காரர்கள் வரும்போது, இவர்கள் தெரு ஓரத்தில் செல்லவேண்டுமாம். அவர்களுடைய எச்சி லைக்கூட துப்புவதற்கு உரிமை இல்லை என்றிருந்த நிலை.
இந்தத் தகவலைப் படித்த, நம்முடைய படித்த ஆட்கள், ‘‘சார், அந்தக் காலத்திலேயே சுகாதாரத்தை எந்த அளவிற்குக் கடைபிடித்திருக்கிறார்கள் பாருங்கள்; கண்ட இடத்தில் எச்சில் துப்பக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதை ஏன் நீங்கள் வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கிறீர்கள்?’’ என்று கேட்கிறார்.
ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் கழுத்தில் மட்டும் குடுவையைக் கட்டச் சொல்வது ஏன்?
சரி, வாதத்திற்கு அவர் சொல்வதை ஒப்புக்கொண்டா லும், சுகாதாரத்திற்காக என்றால், எல்லாருடைய கழுத்திலும் குடுவையைக் கட்டியிருக்கவேண்டும் அல்லவா! அது என்ன ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் கழுத்தில் மட்டும் குடுவையைக் கட்டச் சொல்வது? இப்படிக் கேள்வி எழுப்புவதுதான் பகுத்தறிவு.
ஆகவே நண்பர்களே, இங்கு ஏராளமாக வந்திருக்கி றீர்கள். மகளிர், தாய்மாரகள் சிந்திக்கவேண்டும்.
உங்களுடைய உரிமைகள் காப்பாற்றப்பட்டால், உங்களுடைய கல்வி அறிவு காப்பாற்றப்பட்டால், உங்களுக்கு அதிகாரம் ஏற்பட்டால், சமூகத்தில் உங்களை யாரும், எதுவும் செய்ய முடியாது.
எங்களுக்குச் சரியென்று பட்ட கருத்தைச் சொல்லியிருக்கிறோம்!
எனவே, நாங்கள் சொல்வதைக்கூட நீங்கள் நம்ப வேண்டாம்; எங்களுக்குச் சரியென்று பட்ட கருத்தைச் சொல்லியிருக்கிறோம். நீங்கள் இந்தக் கருத்தை ஏற்கலாம்; ஏற்காமல் போகலாம். ஆனால், அந்தக் கருத்தை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். ஏற்பதற்கு முன்பே கதவைச் சாத்தக்கூடாது. நீங்கள் கேளுங்கள், படியுங்கள், யோசனை செய்யுங்கள்.
பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் வளர வேண்டும். ஏன் வளரவேண்டும் என்றால், அது பெரியாருக்காக அல்ல; எங்களுக்காக அல்ல.
நான் அடிக்கடி சொல்லும் உதாரணத்தைச் சொல்லி முடிக்கின்றேன்.
எதற்காக மருந்து சாப்பிடுகிறோம்?
நாம் நோய் வந்தவுடன், மருந்து சாப்பிடுகிறோம். எதற்காக இந்த மருந்தை சாப்பிடுகிறீர்கள், யாருக்காக சாப்பிடுகிறீர்கள்? என்று அவரிடம் கேட்டால், ‘‘டாக்டர் எழுதிக் கொடுத்தார்; அதனால் சாப்பிடுகிறேன்; இல்லையென்றால் அவர் வருத்தப்படுவார்’’ என்று சொல்வாரா? ‘‘மருந்துக் கடைக்காரர் வியாபாரம் குறைந்துவிடும் என்று நான் சாப்பிடுகிறேன்’’ என்று சொல்வாரா?
‘‘என்னுடைய நோய் தீரவேண்டும் என்பதற்காக அந்த மருந்தை சாப்பிடுகிறேன்’’ என்றுதான் சொல்வார்.
அதுபோன்று, நமக்காகத்தான். பெரியாருக்காக அல்ல. நமக்காக, நம்முடைய மக்களுக்காக, சீர்திருத்தத்திற்காக, வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காகத்தான்.
மருந்து வாங்கும்போதுகூட கவனமாக இருக்க வேண்டும். டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துதானா? என்று பார்ப்பது முக்கியம். ஆனால், அதைவிட மிகவும் முக்கியம் என்னவென்றால், அந்த மருந்தின் காலாவதி தேதியைப் பார்ப்பீர்கள்.
காலாவதியான கருத்துகளுக்கு இடம் உண்டா?
ஒரு குறிப்பிட்ட நோயைத் தீர்க்கும் மருந்திற்கே காலாவதி தேதியைப் பார்க்கின்ற நீங்கள், காலங்காலமாக மனிதனை அறிவுவழிப்படுத்த வேண்டிய நேரத்தில், காலாவதியான கருத்துக ளுக்கு இடம் உண்டா? ஜாதிக்கு இடம் உண்டா?
பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பது மட்டுமல்ல; பெண் அர்ச்சகர்கள்கூட கிடையாது. நம்முடைய கடவுள்களில் சரி பகுதி பெண் கடவுள்கள்தான். அந்தக் கடவுளுக்குக்கூட பெண் அர்ச்சகராக இருக்கக்கூடாது என்று சொல்வது என்ன நியாயம்?
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, காளியாத்தா என்றெல்லாம் பெண் கடவுள்கள் இருக்கின்றன. ஆனால், அந்தக் கோவில்களில் பெண் அர்ச்சகராகின்ற உரிமை இல்லை.
அந்தக் கடவுளை வணங்குவதற்குப் பெண்களுக்கு உரிமையில்லை. படிப்பதற்கு உரி மையில்லை. மோட்சத்திற்குப் போவதற்குக்கூட அவர்களுக்கு இடமில்லை.
மனித சமத்துவத்திற்காக பாடுபடுகின்ற சுயமரியாதை இயக்கம்-
உலகம் முழுவதும் தேவை!
ஆகவே, இப்படிப்பட்ட ஒரு மனித உரிமைப் போர் நடத்துகின்ற, மனித சமத்துவத்திற்காக பாடுபடுகின்ற இயக்கம்தான், சுயமரியாதை இயக்கம். இந்த இயக்கம் உலகம் முழுவதும் தேவை.
உங்களையெல்லாம் பார்க்கின்றபோது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது.
அடுத்தவர்களைப் பாராட்டுங்கள், உற்சாகப்படுத்துங்கள். வாழ்க்கையில் சேமியுங்கள்; சிக்கனமாக இருங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
சமுதாயத்தில் ஓர் அங்கம் என்று நினையுங்கள்!
தன்னோடு முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். நான் சமுதாயத்தில் ஓர் அங்கம் என்று நினையுங்கள். அடுத்தவரிடம் குறை காணாதீர்கள். குறை இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனால், அவர்களிடம் என்ன நல்லது இருக்கின்றதோ, அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு சமுதாயத்தில் எல்லோருக்கும் உதவவேண்டிய நேரத்தில் உதவுங்கள். சிறப்பாக வாழுங்கள். சிறு குழந்தைகளை மூடநம்பிக்கைகளுக்கு ஆளாக்காதீர்கள். அச்சத்திற்கு இடம் தராதீர்கள். துணிவாக இருங்கள். உங்கள் துணிச்சல், உங்களுடைய தெளிவு நல்ல கருத்துகளை உருவாக்கும்.
ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!
மிக நீண்ட நேரம் அமர்ந்திருந்த உங்கள் அனைவ ருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!! உங்களுடைய அன்புக்கு நன்றி!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.