இந்தியும் அடக்குமுறை ஆட்சியும்
நாவலர் இரா. நெடுஞ்செழியன்
தமிழ் மக்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அனைவரின் எதிர்ப்பையும் கவனிக்காமல் சென்னை அரசாங்கம் தன் அரசியல் பலத்தைத் துணை கொண்டு இந்தியைக் கொண்டுவந்துள்ளது. மாகாண அரசாங்கத்தின் போக்கை மத்திய அரசாங்கம் ஆதரிக்கிறது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் மத்திய அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரிலேயே சென்னை அரசாங்கம் இந்தியை நுழைப்பதில் விடாப்பிடியாக இருக்கிறது என்றும் சொல்லலாம்.
அடக்கு முறை
இந்தி நுழைவை, மொழி, இன, கலாச்சார, அரசியல் காரணங்களை அடிப்படையாக வைத்து எதிர்ப்பியக்கம் தமிழ்நாட்டில் தோன்றியுள்ளது. அந்த எதிர்ப்பியக்கத்தை அடக்குமுறையால் அடக்க அரசாங்கம் எவ்வகையில் வீச முடியுமோ அவ் வகையிலெல்லாம் வீசுகிறது. தலைவர்களைச் சிறைப் பிடிக்கிறது; கூட்டங்களைத் தடுக்கிறது; ஊர்வலங்களை மறுக்கிறது; தமிழாசிரியர்களைப் பயமுறுத்துகிறது; இந்தி படிக்க விரும்பாத மாணவர்களை வெளியேற்றச் சொல்கிறது. அந்த அளவுக்கு அடக்குமுறையைத் தழுவி நிற்கிறது அரசாங்கம். இதில் வெற்றி பெறுமா, பெறாதா என்பதல்ல கேள்வி; பயமுறுத்தலையும், ஆயுத பலத்தையும் உபயோகித்து கல்வி முறையில் மாறுதலைச் செய்து முடிக்க காங்கிரஸ் மந்திரிசபை ஏன் முற்பட்டது என்பதுதான்!
பாசிசம்
இந்தி நுழைவு திடீரென்று உண்டாகவில்லை. அதற்குச் சார்பாகக் கொடுக்கப்படும் அடக்குமுறை பலமும் புதிதல்ல. காங்கிரஸ், மந்திரி சபைகளைக் கைப்பற்றியதுமே பணக்காரக் கும்பலின் புகலிடமாகி விட்டது. பணமூட்டைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் பாட்டாளிகளின் உரிமைகளைப் பாதிக்கும் சட்டங்கள் பல இயற்றப்பட்டன. விலைக்கட்டுப்பாடுகளை நீக்கி பணக்காரர்களுக்குப் பக்க பலமாய் நின்று நாட்டுப் பெருங்குடி மக்களைப் பஞ்சத்தில் தள்ளியது. தொழிலாளரின் வேலை நிறுத்தங்களின் காரணங்களைக் காண மறுத்து, வேலை ஒப்பந்தங்களை மீறிய முதலாளிகளைக் கண்டிக்க முடியாது, ஒவ்வொரு தடவையும் தொழிலாளரையே தண்டித்து வந்திருக்கிறது. தடையுத்தரவுகள், துப்பாக் கிப் பிரயோகம், அடக்குமுறை, புதுப்புது அவசரச் சட்டங்கள் இவைகளைக் கவனித்தால், காங்கிரஸ் சர்க்காரின் அரசியலமைப்பு நன்கு விளங்கும். அதன் முழுப்பெயர் தான் ‘பாஸிசம்’ ஆகும். இந்த பாஸிச ஆட்சியின் ஒரு பகுதிதான் இந்தியைக் கட்டாயப்படுத்துவதாகும்.
பலதிறப்பட்ட கலாச்சாரங்களும், மொழிக் கூட்டங்களும் இருப்பது தவறல்ல. கலாச்சாரம் வரலாற்றில் வழிவழி வந்த பண்பாடாகும். இந்த வளர்ச்சியை அனுமதிப்பதே முறை. ஆனால் பாஸிச ஆட்சி உடைந்துபோகிற பொருளாதார ஏகாதிபத்தி யத்தைப் பாதுகாக்க முயன்று சமூக வளர்ச்சியைத் தடை செய்கிறது. அதன்மூலம் கலாச்சார வளர்ச்சியையும் தடை செய்கிறது.
ஹிட்லரின் அணுகுமுறை
ஹிட்லரின் சூறாவளிப் படைகள் அண்டை அயல் நாடுகளை அடிமை கொண்டபொழுது, அந்த நாட்டுக் கல்வி முறை அழிக்கப்பட்டு, தாய்மொழிகள் தாழ்த்தப்பட்டு ஜெர்மன் மொழி கட்டாயப்படுத்தப்பட்டது. ஆரிய கலாச்சாரம், ஆரிய இனம் சலுகைகளுடன் வளர்க்கப்பட்டன. வட நாட்டாரின் கையில் இந்திய அதிகாரம் மாறியதும் மேற்குறித்ததைப் போன்ற பாஸிச ஆட்சி முறை தென்நாட்டின்பாற் கையாளப்படுகிறது. அதன் விளைவாகவே வேண்டாத இந்தி மொழி தென்னாட்டாரின் மீது திணிக்கப்படுகிறது.
ஒரே ஆட்சி முறை
ஒரே ஆட்சி, ஒரே கலாச்சாரம் என்று மற்ற நாடுகளை விழுங்கி, மற்ற கலாச்சாரங்களையும் ஒழித்துவிட்டு ஆள முயல்வது பாஸிசம். பக்கத்து நாடுகளுடன் அமைதியாய், மற்ற கலாச்சாரங்களை மதித்து நடப்பது ஜனநாயக ஆட்சிமுறை. ஒரே ஆட்சி முறை, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்று கட்டாயப்படுத்த அடக்குமுறை தேவை. பல இனங்களையும், கலாச்சாரங்களையும், மொழியையும், சமாதான முறையில் பாதுகாத்து, வளர விடுவது சமதர்ம நோக்கமாகும். இந்த அடிப்படை உண்மை ரஷ்யா நாட்டுக் கல்வி வரலாற்றைக் கவனித்தால் தெரியவரும்.
அலட்சியம்
ஜார் மன்னர்களின் எதேச்சதிகாரத்தின் கீழ் பெரும் நிலப்பரப்பும், பல்வேறு இனங்களும் அடிமைப்பட்டுக் கிடந்தன. ஒவ்வொரு இனத்துக்கும் உரிய கலாச்சாரமும், மொழியும் ஜார் மன்னர்களால் அலட்சியம் செய்யப்பட்டதுடன், அவைகளை வளர விடாமல் தடை செய்தனர். ரஷ்ய மொழி ஒன்றே சாம்ராஜ்யத்தின் எல்லாப் பகுதிகளிலும் கட்டாயப்படுத்தப்பட்டது. காகசஸ் மத்திய ஆசிய நாடுகள், கிழக்கே மங்கோலியா, மஞ்சூரியா பகுதிகள் போன்ற வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட இடங்களில் கூட ரஷ்ய மொழியே கட்டாயமாகக் கல்வி முறையில் இருந்தது.
சமதர்ம ஆட்சி
தாய்மொழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டதால், கல்வி வளர்ச்சியின்றி அறியாமையில் அந் நாடுகள் உழல்கின்றன. ரஷ்யப் புரட்சிக்குப் பின் கல்வித் துறையில் காட்டப்பட்ட அடக்குமுறை ஒழிக்கப்பட்டு அந்தந்த இனத்திற்குரிய கலாச்சாரத்துக்கும், மொழிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டன. இன்று ரஷ்யாவில் உயர்தரப் பள்ளிக்கூடங்களில் 60 மொழிகள் முதன் மொழிகளாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. சோவியத் கல்விக் கழகங்கள் பிற்போக்குப் பகுதிகளில் அதிக அக்கறை காட்டுகின்றன. அந்தந்த கலாச்சாரங்களை வளர்ப்பதுடன், வளப்பமடையாத மொழிகளுக்கு இலக்கண வரம்பையும், பேச்சு வழக்கில் மட்டும் இருந்த மொழிகளுக்கு எழுத்தையும் உண்டாக்கித் தந்துள்ளன.
இது சமதர்ம ஆட்சி காட்டும் முறை. அங்குப் பல மொழிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நாட்டிலோ மொழிச் சண்டையை உண்டாக்கி, நாட்டைத் துண்டு போடுமளவுக்கு வெறுப்புணர்ச்சியைத் தூண்டு கின்றனர். காரணம் அங்கு ஏகாதிபத்தியமில்லை; பணக்காரர்களின் கூட்டுறவில்லை; பாஸிச ஆட்சி இல்லை; அடக்குமுறை கிடையாது; எனவே அலங் கோலம் கிடையாது.