தேனி, மார்ச் 24- தமிழ்நாடு-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்கிறது.
இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
உறுதி செய்தனர்
இந்த நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணை யத்தின் தலைவர் ஜெயின் தலைமையில், புதிய மேற்பார்வைக் குழுவினர் முல்லைப்பெரியாறு அணைக்கு 22.3.2025 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பேபி அணை பகுதிக்கு சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள், பலப்படுத்தும் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தனர். பிரதான அணையின் சுரங்கப் பகுதிக்கு சென்று கசிவுநீர் அளவை பார்வையிட்டனர். அணையின் நீர் இருப்புக்கு ஏற்ப அது துல்லியமாக இருந்தது. இதனால் அணை பலமாக இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர்.
மதகு பகுதிகளில் ஆய்வு
அதன்பிறகு அணையில் உள்ள மதகு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மதகுகளை இயக்கிப் பார்த்து சோதனையிட்டனர். அவை நல்ல முறையில் இயங்கின. அணையில் ஆய்வை முடித்து கொண்டு அக்குழுவினர் பகல் 2 மணியளவில் தேக்கடிக்கு திரும்பினர்.
தேக்கடியில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்தின் ராஜீவ்காந்தி கூட்டரங்கில், மேற்பார்வைக்குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. குழுவின் தலைவர் அனில் ஜெயின் தலைமை தாங்கினார்.
பராமரிப்புப் பணிகள்
கூட்டத்தில், அணையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் குறித்தும், இனி வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அணைக்கு தளவாட பொருட்களை எடுத்துச் செல்லும் வல்லக்கடவு சாலை சீரமைப்பு, பேபி அணை பலப்படுத்தும் பணிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.