மருத்துவரிடம் சென்றால் முதலில் நாக்கை நீட்டச் சொல்வார். பின்னர் கைகளை நீட்டச் சொல்லி விரல்களைப் பார்ப்பார். விரல், அதில் உள்ள நகங்கள் மூலம் உடல் மற்றும் நகம் சார்ந்த பல நோய்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக நகத்தின் நிறம் சிறிது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நகம் வெள்ளையாக வெளிறியது போல இருந்தால் அது ரத்தச் சோகையின் அறிகுறி. சுண்ணாம்புச் சத்து குறைவானால் நகம் கடினமாகவும் எளிதில் உடையும் தன்மை உள்ளதாகவும் இருக்கும்.
நகங்களின் ஓரங்களில் வலி, வீக்கம் ஏற்பட்டால், அது நகத்தில் ஏற்பட்ட நோய்த் தொற்றால் உண்டாவதாகும். இது நகச் சுத்தி எனப்படும்.
சொரியாசிஸ் உள்ளவர்களின் நகங்களில் புள்ளி புள்ளியாக இருக்கும்.
அரிதாக இதயத்தில் நல்ல ரத்தமும் கெட்ட ரத்தமும் ஒன்றாகக் கலக்கும் இதய நோய் உள்ளவர்களுக்கு விரல் நுனி பருத்துக் குண்டாகவும் ஊதா நிறத்துடனும் இருக்கும். இது ஆங்கிலத்தில் கிளப்பிங் எனப்படும்.