மீனம்பாக்கம் மார்ச் 24- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனையாக செயல்படும் நிலையில் தமிழ்நாட்டுக்கு விசுவாச மாக அண்ணாமலை நடந்து கொள்ளவில்லை என கருநாடக துணை முதலமைச்சர் சிவகுமார் குற்றம் சாட்டினார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்
தென் மாநிலங்கள் வஞ்சிக்கப் படுவதாகவும், நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான முதலமைச்சர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் 22.3.2025 அன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பின்னர், பெங்களூரூ செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து தெரிவித்த கருத்துகள்தான் தற்போது விவாத பொருளாக மாறி இருக்கிறது.
விசுவாசம் இல்லை
தமிழ்நாடு பா. ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு இது குறித்து எதுவும் தெரியாது, அவர் அவரது கட்சிக்கு விசுவாசமாக மட்டுமே வேலை செய்கிறார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகா ரத்தில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்யும் நிலையில், அவர் சார்ந்த தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை, அவரது வேலையை அவர் செய்யட்டும்.
மாநில சட்டமன்றமாகட்டும், நாடாளுமன்றமாகட்டும் தொகுதி களை மறுசீரமைக்கும் பிரச்சினையில் அண்டை மாநிலங்களான நாம் நமது ஒருங்கிணைந்த குரலை வலு வானதாக மாற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் தென் இந்தியாவை சேர்ந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண் டார்கள். இது மகிழ்ச்சியை தருகிறது. சிறந்த பணிக்கு வாழ்த்துகள். இவ் வாறு அவர் கூறினார்.