ஒசூர், மார்ச் 24 கருநாடகாவில் அமைந்துள்ள ஹுஸ்கூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலானது அனேகல் – பொம்மசந்திரா – எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதி மக்களி டையே பிரபலமானதாகும். ஆண்டுதோறும் 6 நாட்கள் நடைபெறும் மத்தூரம்மா கோவில் திருவிழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
7 தேர்கள்
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மத்தூரம்மா கோயில் திருவிழாவை ஒட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மிகவும் உயரமாக 7 தேர்கள் வடி வமைக்கப்பட்டு இழுத்து வரப்படும். இதனிடையே, தொட்டநாகமங்கலா பகுதியில் தேர்கள் இழுக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்துள்ளனர்.
அம்மன் தேரைத் தொடர்ந்து தொட்ட நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் வந்துள்ளன. இவை இரண்டும் சிறிய தேர்கள். அப்போது, அம்மன் வீற்றிருக்கும் 150 அடி உயர தேர் கட்டஹள்ளி கிராமம் வழியாக வந்தபோது பலத்த காற்று வீசியது.
2 பேர் உயிரிழப்பு
இதில், 150 அடி உயர தேரானது எதிர்பாராத விதமாக சாய்ந்தது. ஒருகட்டத்தில் சுமார் 150 அடி உயரம் கொண்ட இரண்டு தேர்கள் அடுத்தடுத்து சாய்ந்தன. இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10–க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டே பலத்த காற்றால் தேர் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்த நிலையில், இந்த ஆண்டும் தேர் விபத்துக்குள்ளாகி இருப்பது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளாக மிகவும் எளிமையான முறையில் கோவில் திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில், எதற்காக இவ்வளவு உயரமான தேர் தற்போது வடிவ மைக்கப்படுகிறது என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.