புவனேஷ்வர், ஜூலை 8- பூரி ஜெகந்நாதர் கோயில் சட்டம் 1955இன்படி கருவூலத்தில் உள்ள சொத்துகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆனால், இந்த விதிகள் 1926 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் மட்டுமே பின்பற்றப்பட்டன. அதன்பிறகு, 45 ஆண்டுகளாக பூரி ஜெகந்நாதரின் சொத்துகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இதனிடையே, பூரி ஜெகந்நாதருக்கு சொந்தமான சொத்துகளில் தொடர்ந்து வரும் உண்மையைக் கண்டறிய கருவூலக பெட்டகத்தை திறக்க கோரி ஒடிசா உயர்நீதி மன்றத்தில் ஜூன் 30ஆம் தேதி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அரசுக்கு சொந்தமான சிறீ ஜெகந்நாதர் ஆலயத்தின் நிர்வாகம் இதுகுறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தாக்கல் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.
தற்போதைய நிலையில், ஜெகந்நாத ஆலய வங்கி கணக்குகளில் ரூ.600 கோடி அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
1978இன் மதிப்பீட்டின்படி 128 கிலோ தங்கம், 221 கிலோ வெள்ளி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு சொந்தமாக ஒடிசாவில் 60,426 ஏக்கர் நிலமும், ஏனைய ஆறு மாநிலங்களில் 395.2 ஏக்கர் நிலமும் உள்ளன.
பாலியல் துன்புறுத்தல் வழக்கு
பிரிட்ஜ் பூசனுக்கு நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 8- மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சிங் மீது டில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நடந்த இந்த விசாரணையில் பிரிஜ்பூஷன் சிங் மீது டில்லி தலைமை பெருநகர கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி மகிமா ராய் சிங், இந்த வழக்கை கூடுதல் தலைமை கீழமை நீதிமன்றத்திற்கு மாற்றினார்.
அதை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு ஹர்ஜீத் சிங் ஜஸ்பால், பிரிஜ்பூஷன் சிங்குக்கு நேற்று (7.7.2023) அழைப் பாணை அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு விசார ணைக்காக வருகிற 18ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அதில் அறி வுறுத்தப்பட்டு உள்ளது. இதைப்போல அவரது துணை செயலாளர் வினோத் தோமருக்கும் அழைப் பாணை அனுப்பப்பட்டு உள்ளது.