காலம் காலமாகக் கடவுள் என்னும் பெயரால் மக்களை ஏமாற்றி வந்த புரட்டுக் கும்பல்களைத் தங்கள் பகுத்தறிவால், கேள்விகளால் அம்பலப்படுத்தி, அதனால் தங்கள் உயிர் போகும் சூழல் வந்தாலும் கேள்விகளில் இருந்து பின்வாங்காமல் உயிர் துறந்து, தங்கள் தியாகத்தால் இவ்வுலகில் அறியாமையை விரட்டி, அறிவியலைப் பரப்பியுள்ள அனைத்து நாத்திகர்களையும் நினைவு கூர்வதற்கான நாள் இன்று.
உலகில் 4000 மதங்கள் இருக்கின்றன வாம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று கொண்டாடப்படும் மதத் திருவிழாக் களுக்கு இவ்வுலகில் பஞ்சமில்லை. நாத்திகர் களுக்கான நாளாக ஒன்றை அடையாளம் காண்பது என்னும் நோக்கில் அமெரிக்க நாத்திக சங்கத்தினரால் 2003-ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது தான் உலக நாத்திகர் நாள்.
ஒரு புரளியைப் புறம்காணும் வகையில் தான் நாத்திகர் நாள் தொடங்கப்பட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது. எல்லா மதஙகளுக் கும் திருநாள் இருக்கிறது. மதமற்ற எங்களுக்கு எது என்று ஒரு நாத்திகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், ஏப்ரல் 1-ஆம் நாள் தான் முட்டாள்கள் தினமாயிற்றே. அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று நீதிபதி சொன்ன தாகவும் ஒரு கதையை இட்டுக் கட்டி பரப்பிய மதவாதிகள், அதை உண்மை போலவே காட்டத் தொடஙகினர். இந்தக் கட்டுகதையை ஒழிக்கும் விதமாகத் தான் அமெரிக்க நாத்திக சங்கம் மார்ச் 23-ஆம் நாளை நாத்திகர் நாளாகக் கொண்டாடத் தொடஙகியது என்கிறது அந்தத் தகவல். 2019-ஆம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள நாத்திகர்களால் இந்த நாள் ஏற்கப்பட்டதுடன், பச்சை நிறத்தில் வட்டம் வரைந்து அதனை உலக நாத்திகர் நாளுக்கான அடையாளமாகவும் ஏற்றன உலகின் பல நாத்திகர் அமைப்புகள்.
முழுமையான நாத்திகராக இல்லா விட்டாலும், கேள்வி கேள் என்ற உணர்வை எழுப்பி, அதனால் உயிர்விட்ட சாக்ரடீஸ் தொடங்கி, இன்று வரை பல்லாயிரக்கணக்கான நாத்திகர்கள் கொலை செய்யப்பட்டமை வரலாற்றுப் பதிவுகளாகும். இன்றும் பல நாடுகளில் கடும் நெருக்கடிக்கும், உயிராபத்துக்கும் உரியவர்களாக உள்ள நாத்திகர்கள் அனைவருக்கும் ஆதரவை வழங்கும் வகையிலான நாளாக உலக நாத்திகர் நாள் முன்னெடுக்கப்படுகிறது. அனைவருக்கும் நாத்திகர் நாள் வாழ்த்துகள்!