சென்னை, மார்ச் 23- சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025 – 2026ஆம் கல்வியாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது. இந்தாண்டு சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், தீவிர மாணவர் சேர்க்கைக்கான துண்டு பிரசுரங் களை வெளியிட்டு, விளம்பர பிரசாரத்திற்கான 45 ஆட்டோக் களையும், ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா கொடியசைத்து, நேற்று (22.3.2025) துவக்கி வைத்தார்.
அப்போது, மேயர் ஆர்.பிரியா கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், 35 மேல்நிலை, 46 உயர்நிலை, 130 நடுநிலை, 206 தொடக்கப் பள்ளிகள் என, 417 பள்ளிகள் உள்ளன.
இங்கு, எல்.கே.ஜி., – யூ.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஸ்மார்ட் போர்டு
மழலையர் பள்ளியில் காற்றோட்டமான வகுப்பறைகள், பச்சை வண்ணப்பலகைகள், ஸ்மார்ட் போர்டு, விளையாட்டுடன் கல்வியில் ஆர்வத்தை துாண்டும் வண்ண மயமான புத்தகங்கள் உள்ளிட்டவை உள்ளன. புத்தகப் பைகள், காலணிகள், அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
பள்ளி சீருடைகள், எழுது பொருட்கள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலை சிற்றுண்டி, பள்ளிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை சிற்றுண்டியுடன், மாலைநேர சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகிறது.
தற்போது, ஆட்டோக்களில் சேர்க்கைக்கு பிரச்சாரம் செய்யப்படுகிறது. தவிர பள்ளிகளின் அருகில் உள்ள தெருக்கள், வீடுதோறும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சென்று மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் இதுவரை, 3,500 மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.